கீழடி

`பொருநை நாகரிகம்; திருநெல்வேலி அருங்காட்சியகம்’ – முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 8 அறிவிப்புகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் இன்று விதி 110 கீழ் தொல்லியல் துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். தாமிரபரணி நதிக்கரை நாகரிகமான `பொருநை நாகரிகம்’ தொடங்கி திருநெல்வேலியில் புதிய அருங்காட்சியகம் வரை அவர் வெளியிட்டிருக்கும் 8 அறிவிப்புகள் என்னென்ன?

கீழடி அகழாய்வு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுப் பணியில் கிடைத்த செங்கல் கட்டுமானங்கள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் தாங்கிய பானை ஓடுகள், அரிய கல்மணிகள், தங்க அணிகலன்கள், சிந்துவெளி நாகரிகக் காலத்தில் காணப்பட்ட அதே திமில் கொண்ட காளையின் எலும்புகள், விளையாட்டுப் பொருட்கள், தொழிற்பகுதிகள் சங்க காலத் தமிழர்கள் பற்றிய பல்வேறு செழுமையான சான்றுகள் கிடைத்தன. கரிமப் பகுப்பாய்வு (Carbon Dating) முடிவுகளின்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாகச் சங்ககாலத் தமிழர்கள் விளங்கினர் என்பதும் உறுதியானது. கீழடி உள்ளிட்ட இடங்களில் ஆய்வுப் பணிகளை மத்திய அரசு பாதியிலேயே கைவிட முடிவு செய்தபோது, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், அந்த இடங்களிலெல்லாம் தமிழக தொல்லியல் துறையினர் தொடர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்திய தமிழக நிதிநிலை அறிக்கையிலும் அகழாய்வுப் பணிகளுக்கென முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

கீழடியில் ஸ்டாலின்
கீழடியில் ஸ்டாலின்

தொல்லியல் துறை – முதலமைச்சரின் அறிவிப்புகள்!

நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தொல்லியல் துறை தொடர்பாக விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

  • கீழடியில் சூரியன், நிலவு மற்றும் வடிவியல் குறியீடுகள் கொண்ட முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வுசெய்த தலைசிறந்த நாணயவியல் அறிஞரும், கொல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியருமான சுஷ்மிதா பாசு மசும்தார், இந்த வெள்ளிமுத்திரைக் காசு, கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு, அதாவது, மௌரியப் பேரரசர் அசோகர் காலத்திற்கும் முற்பட்டது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
கீழடி
கீழடி
  • ஏற்கெனவே, கரிமப் பகுப்பாய்வு முடிவுகளின்படி, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துக்களின் காலம், கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதை வலுப்படுத்தும் விதமாக, தற்போது பெறப்பட்ட இரண்டு கரிம மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகளிலும், கீழடி நாகரிகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தது எனத் தெரியவந்துள்ளது என்ற செய்தியை நான் பெருமையோடு இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • முந்தைய அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கரிமப் பகுப்பாய்வுகளின் காலக் கணக்கீட்டு முடிவுகளின்படி, கி.மு. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்பாகவே, கொற்கை ஒரு துறைமுகமாகச் செயல்பட்டு வந்தது என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கருப்பு வண்ணப்பூச்சு பெற்ற கங்கைச் சமவெளியைச் சார்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றைக் கவனமாக ஆய்வுசெய்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் முனைவர் ராகேஷ் திவாரி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திரநாத் சிங் ஆகியோர், கொற்கைத் துறைமுகமானது கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே வெளிநாடுகளுடனும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
  • இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில், ஒரு முக்கிய ஆய்வு முடிவை இங்கு நான் வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாடு தொல்லியல் துறையால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளைப் பறம்புப் பகுதியில் வெளிப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் மயாமி நகரத்தில் அமைந்திருக்கும் உலகப்புகழ் பெற்ற Beta Analytical Laboratory-க்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதன் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் கிடைத்துள்ளன. AMS Carbon Dating முறையில் ஆய்வு செய்ததில், முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு. 1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிசெய்ய முடிகிறது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் அறியும் வகையில், இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் அளவிட முடியாத பெருமிதமும், மனமகிழ்ச்சியும் நான் கொள்கிறேன்.
கரிமப் பகுப்பாய்வு
கரிமப் பகுப்பாய்வு

பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாடு, கடல்வழி வணிகம், நீர் மேலாண்மை, இரும்பு உருக்குதல், அரிய மணிகள் தயாரித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்நுட்பங்களை உலகம் அறிந்துகொள்ளத் தேவையான சான்றுகளைச் சேகரிக்கும் வகையில், இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் அதிக அளவு நிதியாக ஐந்து கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டில் அகழ்வாராய்ச்சிப் பணிக்காகவும், ஆழ்கடல் அகழாய்வுக்காகவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதை, மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

  • அதன் தொடர்ச்சியாக, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது ‘பொருநை அருங்காட்சியகம்’என அழைக்கப்படும்
  • இதுமட்டுமல்ல; தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்தியத் துணைக்கண்டமெங்கும்; அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும்; தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
  • முதற்கட்டமாக, சங்ககாலத் துறைமுகமான முசிறி, தற்போது பட்டணம் என்ற பெயரில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சேரநாட்டின் தொன்மையினையும், பண்பாட்டினையும் அறிந்துகொள்ளும் வகையில், கேரள மாநிலத் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும். அதேபோல், ஆந்திர மாநிலத்திலுள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு மற்றும் ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • அன்றைய ரோமப் பேரரசின் ஒருபகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர்-அல்-காதிம் மற்றும் பெர்னிகா, மேலும் ஓமான் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதிசெய்யும் வகையில், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தப் பகுதிகளில், அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களோடு இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.மாமன்னர் இராசேந்திர சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டுத் தொல்லியல் வல்லுநர்கள் துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
பொருநை நாகரிகம்
பொருநை நாகரிகம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகிற்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி, இனி உலகெங்கும் பயணம் செய்வோம். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் வழிநின்று நிறுவுவதே நமது அரசினுடைய தலையாய கடமை என்பதை இம்மாமன்றத்தின் மூலம் உலகிற்கு அறிவிப்பதில், உலகிற்கு எடுத்துக்காட்டாக எடுத்துச் சொல்வதில் பெருமிதம் கொண்டு, அந்தப் பெருமையோடு அமைகிறேன்’’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

Also Read – சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்… பா.ஜ.க – அ.தி.மு.க வெளிநடப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top