`Horizontal’ எனப்படும் கிடைமட்ட வளர்ச்சியைத் தவிர்க்கும் பொருட்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), சென்னையின் முக்கியமான சாலைகளில் Floor Space Index (FSI) விகிதத்தை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. FSI என்றால் என்ன… அது எப்படி அளவிடப்படுகிறது?
FSI (Floor Space Index)
Floor Space Index என்பது ரியல் எஸ்டேட்டில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பதம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்த அளவுக்குக் கட்டுமானங்களைக் கட்டலாம் என்பதைக் குறிப்பது. அதாவது, 100 சதுர அடி அளவுள்ள இடத்தில் எத்தனை சதுர அடி அளவுக்குக் கட்டுமானங்களைக் கட்ட முடியும் என்பதற்கான வரையறை அல்லது அதிகபட்ச எல்லை என்று கூறலாம்.
சென்னையில் இப்போது, உயரமான கட்டடங்களுக்கு அதிகபட்ச Floor Space Index மதிப்பு என்பது 3.25 ஆக இருக்கிறது. அதாவது, மொத்த இடத்தின் 3.25 மடங்கு பரப்பளவு கொண்ட கட்டடங்களைக் கட்டிக்கொள்ள முடியும். உதாரணமாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள 8 மாடிகள் கொண்ட ஸ்பென்சர் பிளாசா கட்டடம் இருக்கும் இடத்தின் மொத்த பரப்பு சுமார் 5.30 லட்சம் சதுர அடி. அதில் கட்டப்பட்டிருக்கும் கட்டடத்தின் மொத்த பரப்பு சுமார் 10 லட்சம் சதுர அடி. அதன் FSI 2 என்று கணக்கிடப்படுகிறது. Floor Space Index விகிதம் அதிகரிக்கப்படும்போது, ஸ்பென்ஸர் பிளாசா கட்டடத்தை 16 மாடிகள் கொண்டதாகவும், 30 லட்சம் சதுர அடி கொண்டதாகவும் விரிவுபடுத்திக் கொள்ள முடியும். இதுதான் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் புதிய திட்டத்தின் அடிப்படை. சென்னையைப் பொறுத்தவரை உயரமான கட்டடங்களுக்கு 3.25 என்ற அளவில் இருக்கும் FSI விகிதம் 4.875 அளவுக்கு அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சென்னையின் முக்கிய சாலைகள்
இந்தத் திட்டத்தை சென்னை மாநகரின் முக்கியமான சாலைகளான அண்ணா சாலை, ஈ.வெ.ரா பெரியார் சாலை, ராஜீவ்காந்தி சாலை, வெளிவட்ட சாலை, சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ காரிடார்கள், மின்சார ரயில்கள் செல்லும் பாதைகள் அமைந்திருக்கும் சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனால், சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் அமைந்திருக்கும் கட்டடங்கள் உயரமான கட்டடங்களாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே சொல்லலாம். வெளிநாடுகளின் முக்கிய நகரங்களில் இருப்பது போன்ற Sky Scrapper-கள் சூழ் சாலைகளையும் நாம் பார்க்கலாம். இது ரியல் எஸ்டேட் துறையினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பில்டர்களுக்குக் கூடுதலான செலவை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள்.
மற்ற நகரங்களின் FSI விகிதம் என்ன?
மும்பையில் குடியிருப்புகளுக்கு 4 எனவும் வணிக பயன்பாட்டுக் கட்டங்களுக்கு 5 ஆகவும் FSI விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதுவே, ஹைதராபாத்தில் அதிகபட்ச விகிதம் 16 என்கிற அளவிலும் சராசரியே 6-7 என்கிற அளவிலும் இருக்கிறது. பெங்களூரில் அதிகபட்ச FSI அளவு 5 ஆகவும் குறைந்தபட்ச விகிதம் 2 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. புனேவில் அதிகபட்ச விகிதம் 4 என்கிற அளவில் இருக்கிறது.