கோவை பி.என்.பாளையத்தில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்றதாக தனியார் உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள். என்ன நடந்தது?
அமைச்சரிடம் புகார்
கோவை – அவினாசி சாலையில் பி.என்.பாளையம் பகுதியில் இயங்கிவரும் Rolling dough Cafe எனும் கடை அப்பகுதியில் பிரபலமானது. இந்தக் கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்கப்படுவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நேற்று மதியம் 12.30 மணியளவில் புகார் வந்திருக்கிறது. இந்தப் புகாரின் அடிப்படையில் கடையில் ஆய்வு நடத்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

இதையடுத்து, நியமன அலுவலர் தலைமையில் அந்தக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். அந்த ஆய்வில், உணவு தயாரிக்கும் இடத்தில் இருந்து இரண்டு மதுபாட்டில்களை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள். மேலும், உணவு தயார் செய்யும் ஊழியர்கள் உரிய தகுதிச் சான்று பெறாமல் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதையும் அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கடைக்கு சீல்

அதேபோல், முகக்கவசம், கையுறை, தலையுறை போன்ற எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் ஊழியர்கள் உணவு தயாரித்து வந்ததும் தெரியவந்தது. அதேபோல், உணவு தயாரிக்கும் இடம் ஈக்கள், கொசுக்கள் நிறைந்ததாகப் பாதுகாப்பற்ற முறையில் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர், முறையாக ஆய்வு செய்து அறிக்கை பெறவில்லை. உணவுப் பாதுகாப்புத் துறையிடம் பெறப்பட்ட உரிமமும் பிரதான இடத்தில் காட்சிக்கு வைக்கப்படவில்லை. உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிகளை மீறியதால், அந்தக் கடைக்கு சீல் வைக்கும்படி மருத்துவத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த ஐஸ்கிரீம் கடையின் உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்தனர்.