உலகத்துல அப்பாக்கள்ல மொத்தமே மூணு வகைதான். சமுத்திகனி படத்துல வர்ற மாதிரி. “இந்த உலகம் ரொம்ப அழகானது. நிறைய நல்லவங்க இருக்காங்க. அவங்களாலதான் இந்த உலகம் இயங்குது”னு சொல்லுற அப்பா, முதல் வகை. இந்த வகை அப்பாக்கள் ரொம்பவே ரேர்தான். இரண்டாவது வகை அப்பா, “நல்லவனா பார்த்தா சிரிச்சுக்க. சரியில்லாதவன பார்த்தா விலகிக்க. நமக்கு எதுக்குடா வம்பு. இருக்குற இடம் தெரியாமல் இருந்துட்டு போய்றனும்டா”னு சொல்லுவாங்க. இந்த வகை அப்பாக்கள்தான் இன்னைக்கு பெரும்பாலும் இருக்காங்க. மூணாவது வகை அப்பாக்கள், “இந்த உலகம் ரொம்ப மோசமானது. எவனையும் நம்பக்கூடாது. ஒழுங்கா படிச்சு வாழ்க்கைல முன்னேறுற வழியைப் பாரு”னு சொல்றவங்க. 90’ஸ் கிட்ஸ், அதுக்கு முன்னாடி உள்ள கிட்ஸோட அப்பாக்கள் எல்லாருமே இந்த மூணாவது வகையாதான் இருப்பாங்க. இந்த மூணாவது வகை அப்பாக்களுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் எம் மகன் படத்துல வர்ற நாஸர் கேரக்டரும், டான் படத்துல வர்ற சமுத்திரகனி கேரக்டரும்தான். சரி, மகனைப் போட்டு பொளக்குறதுல ‘எம் மகன்’ நாஸர் பெஸ்டா? இல்லை, ‘டான்’ சமுத்திரகனி பெஸ்டா அதைத்தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
காதல் – நம்ம கேள்விபட்டது வரைக்கும் எந்த அப்பாக்கும் காதல் புடிக்காது. சாஃப்ட்டான அப்பாவா இருந்தாக்கூட காதல்னு வந்துட்டா கோவமாதான் பேசுவாங்க. அதுலயும் இந்த எம் மகன், டான் மாதிரியான படங்கள்ல அவர்ற அப்பாவா இருந்துட்டா கைதான் பேசும். எம்டன்ல கோபிகா, பரத் வீட்டுக்கு வந்தது எம்டனுக்கு தெரிஞ்சுரும். உடனே, ரிலாக்ஸா போய் ஒரு இடத்துல உட்கார்ந்துருவாரு. “அம்மாவும் மகனும் சேர்ந்து நடிக்கிறீங்களா? அவன் மன்னிப்பு கேக்குற மாதிரி நடிச்சா மடில தூக்கி வைச்சு கொஞ்சனுமா? அவனை அடிச்ச வலி இன்னும் என் கைக்குள்ள இருக்கு. அந்த வலியையும் மீறி அவன் உடம்பும் மனசும் ஒரு பொம்பளயை தேடுதுனா? எவ்வளவு அலைச்சலும் அரிப்பும் இருந்தா கண்கட்டி வித்தை மாதிரி அவளை தூக்கிட்டு வந்துருப்பான்”னு சொல்லிட்டு ஒரு மிதி விடுவாரு பாருங்க. நமக்கே விட்ட மாதிரி இருக்கும்.
டான்ல ஃபஸ்ட் ஃப்ரெண்டுதான்னு சிவகார்த்திகேயன் சொல்லிருப்பாரு. உடனே, பிரியங்காவை கூட்டிட்டுப்போய் அவங்க அப்பாக்கு கிளாஸ் எடுப்பாரு. அப்புறம் காலேஜ் சீன்ல… “ஃப்ரெண்டுனு சொன்ன, இங்க எப்படி வந்தா?”னு சமுத்திரகனி கேட்டு அடிப்பாரு. சோ, ரெண்டு அப்பன்களுக்கும் காதல்னா அலர்ஜி. மகன்களை போட்டு பொளப்போம் வித் ஃபுல் எனர்ஜினு அடி பின்னுவாங்க.
அவமானம் – பொதுவெளில பசங்கள அவமானப்படுத்தினா, அவங்க திருந்திருவாங்கனு நிறைய அப்பாக்கள் நினைப்பாங்க போல, இந்த ரெண்டு படத்துலயும் இந்த மாதிரியான காட்சிகளை நிறையப் பார்க்கலாம். எம் மகன்ல பரத் கடைல பொட்டலம் போட்டுட்டு இருப்பாரு. அப்போ, அவர்கூட படிக்கிற பொண்ணுங்க எல்லாம் கடைக்கு வரும். அப்போ பரத்கிட்ட நல்ல டிரஸ், பைக்லாம் வாங்கிக்கலாம்லனு சொல்லுவாங்க. உடனே, பரத் கைல இருக்குற பொட்டலம் கை தவறி கீழ விழும். உடனே, நாஸர் மாவு பாக்கெட்டை எடுத்து மூஞ்சி மேலயே விடுவாரு. பொண்ணுங்க போய்டும்.
நாஸர், பரத்கிட்ட வந்து, “மூணு வேளை சோறு, போடுறதுக்கு டிரெஸ், நேரத்துக்கு தூக்கம். அந்த திமிர்ல கேக்குதா பொம்பளை சோக்கு”னு பேசுவாரு. அப்படியே, டான் படத்துல பார்த்தா, காலேஜ்ல எல்லார் முன்னாடியும் வைச்சு “உன் பேரு சக்கரவர்த்தி இல்லை. டான்னு சொல்றாங்க. பொய்… பொய்… பொய்…”னு செவுள்ளயே அடிக்கிறது. சோ, ரெண்டு அப்பன்களுக்கும் மகன்களை அவமானப்படுத்துறதுதான் உசுரு. நீ அவமானப்பட்டா எனக்கென்னடா போடா ம**னு போய்டுவாங்க.
சோறு – அம்மாக்கள் பாசமா ஊட்டிவிடுறது மாதிரி அப்பாக்களும் சோறு ஊட்டிவிட்டா எப்படி இருக்கும்னு அப்பப்போ தோணும். அப்போ, எம் மகன் நாஸர் ஊட்டி விடுற சீன்தான் கண்ணு முன்னாடி வந்து போகும். பரத்தைப் போட்டு அடி வெளுத்துட்டு வந்து நைட்டு உட்கார்ந்து சரக்கடிச்சிட்டு இருப்பாரு. உடனே, பரத் தங்கச்சி வந்து அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி பேசும். நாஸர், சரண்யாக்கிட்ட, நாட்டுக்கோழி குழம்புல எல்லாத்தையும் அள்ளிப்போட்டு கொண்டு வானு சொல்லுவாரு. அப்பவே தெரியும். சம்பவம் இருக்குனு. பரத்துக்கு புடிக்காத ஈரலை எடுத்து வைச்சு சாப்பிடுன்னுவாரு. வேணாம்னு சொன்னதும் போட்டு பொளக்க ஆரம்பிச்சிருவாரு. உலகத்துல எந்த அப்பனாவது இந்த வயசுல ஊட்டி விடுவானா?னு கேட்டு அடிக்க தொடங்குவாரு பாருங்க. வடிவேலு சொல்ற மாதிரி அதுவும் வில்லங்கத்துலதான் முடியும்.
டான்லயும் அதேமாதிரி ஒரு சீன் வரும். சிவா சாப்பிட உட்காருவாரு. அவங்கப்பா வந்து பக்கத்துல உட்கார்ந்து. என்ன போடுறனு மொத்த கறியையும் தட்டுல கொட்டி. சாப்பிட சொல்லுனு சொல்லுவாரு. “கடுக்கன் எங்கடா? எடுத்து மாட்டிக்க வேண்டியதான? காலேஜ்ல அப்பன் வைச்ச பேரையும் மாத்திட்டா. அப்பன்ட்டா மார்க்கையும் மாத்திட்டான். ஏன், அப்பனையே மாத்திட்டான்”னு சிவாவை வெறுப்பேத்தி “ஃப்ராடு… ஃப்ராடு”னு திட்ட ஆரம்பிச்சிடுவாரு. அடிக்க கை ஓங்குவாரு. ஆனால், அடிக்க மாட்டாரு. அதுக்கப்புறம் சிவா பேசுற சில கிரிஞ்ச் டயலாக்லாம் கேட்டா எம் மகன் மாதிரி ரெண்டு போட்ருக்கலாம்னு நமக்கே தோணும். சோ, சோறு திங்க உட்கார்ந்தாலே கூறு போடுறதே இந்த அப்பாக்களுக்கு வேலையா போச்சு.
எம் மகன்ல கடைசி வரைக்கும் மகனை பேசவே விடமாட்டாரு. எதாவது அப்பா கேப்பாரு, ரியாக்ஷன்லயே பரத் எதாவது சொல்லுவாரு. இல்லைனா உயிரையே திரட்டி ஒரு வார்த்தை சொல்லுவாரு. அதுக்கு பதில்லாம் அப்பா சொல்லமாட்டாரு. போட்டு பொளக்குறதுதான் ஒரே பதில். கிளைமேக்ஸ்லதான் அப்பாவை எதிர்த்து பேசுவாரு. அப்போக்கூட அப்பா மனசு நோகாமல்தான் பேசுவாரு. டான் படத்துலயும் அவங்க அப்பாக்கிட்ட கிளைமேக்ஸ்ல அவரை எதிர்த்து பேசுவாரு. ஏன்னா, அதுக்கு முன்னாடிலாம் எம் மகன் மாதிரியே வாயத் தொறந்தா அடிதான். ஆனால், அவர் பண்ண எல்லாத்தையும் குத்தி குத்தி காமிச்சுப் பேசுவாரு. ஆனால், சிவா பேசுற எல்லாமே கிரிஞ்சாதான் இருக்கும். ரெண்டு பேரும் காமனா சொல்ற ஒரு டயலாக். என் தோள்மேல கைப்போட்டு பேசுற அப்பா வேணும்ன்றதுதான். இன்னைக்கு நிறைய பிள்ளைகள் எதிர்பார்க்குறதும் அதைத்தான்.
படிப்பு – படிப்புன்ற விஷயத்துல எம் மகன், டான் இந்த ரெண்டு அப்பாக்களும் வேற வேறதான். என்னதான் காலேஜ்க்குலாம் அனுப்பி படிக்க வைச்சாலும், நம்மளுக்கு அப்புறம் இந்தக் கடையை பரத்தான் எடுத்து நடத்தப்போறான்ற மூட்லதான் நாஸர் எம் மகன்ல இருப்பாரு. பொட்டலம் போடுறதுல இருந்து ஈரல் சாப்பிட்டா கடைல மூட்டையை தனி ஆளா புரட்டி போடலாம்னு சொல்ற வரைக்கும் பரத்தை கடை வேலைக்காரன் மாதிரிதான் டீல் பண்ணியிருப்பாரு. ஆனால், டான்ல சமுத்திகனி படிப்புதான் முக்கியம். என் கண் பார்வைலயே நீ இருக்கணும். டிகிரியை வாங்கி இஞ்சினீயர் ஆகணும்னு சொல்லிட்டு திருவாரு. ஆனால், சிவகார்த்திகேயன் எனக்குள்ள என்ன டேலண்ட் இருக்குனு கண்டுபிடிக்கப்போறேன்னு தனியா புலம்பிட்டு சுத்துவாரு. சோ, படிப்பு விஷயத்துல எம் மகன் அப்பா மைண்ட் எப்பவும் ‘படிப்பாவது கிடிப்பாவது’னு தான் இருக்கும். டான் அப்பா மைண்டு ‘படிப்புதான் உயிர் துடிப்பு’னு இருக்கும்.
மொத்தத்துல கூட்டிக்கழிச்சுப் பார்த்தா மகனைப் போட்டு பொளக்குறதுல ரெண்டு அப்பாக்களும் சமமா தான் இருந்துருக்காங்க. வின்னர்னு ரெண்டு பேரையுமே சொல்ல முடியாது. ஏன்னா, ரெண்டு பேருமே டாக்ஸிக் அப்பாக்கள்தான். பிள்ளைகளை அடிக்கிறதுக்கு எதிரா சமூக ஆர்வலர்கள், சைக்காலஜிஸ்டுகள் குரல் கொடுத்துட்டுதான் இருக்காங்க. எம் மகன்ல வர்ற அப்பாவையாவது ஒரு வில்லன் மாதிரி ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் காட்டியிருப்பாங்க. அதனால, அந்த அப்பா செய்றது தப்புனு ஒரு எண்ணம் நமக்குள்ள வரும். ஆனால், டான் படத்துல வர்ற அப்பாவை ஆரம்பத்துல இருந்து கெட்டவன் மோட்ல காமிச்சிட்டு, கடைசில அவர் பண்ணது எல்லாமே நல்லதுக்குதான்னு குளோரிஃபை பண்ணியிருப்பாங்க. இந்த விஷயம் சமூகத்துக்கு தப்பான உதாரணமாவே ஆயிடும். சோ, “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்”னு பாடுற அளவுக்கு அப்பாக்கள் இருந்தாங்கன்னா, “குரும்பா, என் உலகே நீ தான்டா”னு பாடுற அளவுக்கு நாங்க இருப்போம். பசங்களோட முதல் ஹீரோவா இருக்குற எல்லா அப்பாக்களுக்கும் ஹேப்பி ஃபாதர்ஸ் டே!
உங்க அப்பா எப்படிப்பட்டவர்னு கமெண்ட்ல சொல்லுங்க..!