ஒரு பிரபலத்தோட வாழ்க்கைல பிராப்ளம்ஸ் வர்றதும், அந்த பிராப்ளம்ஸ் பிரபலமா பேசப்படுறதும் சர்வ சாதாரண விஷயம். ஆனால், ஒரு பிரபலத்தோட பெயரை சொன்னால், பிராப்ளம்ப்ஸ் பிரபலமானது மட்டும் ஃப்ளாஷ்பேக் மாதிரி நியாபகம் வர்றது, நம்மாளுக்குதான். யாரா.. சல்மான் கான். இது மான்.. சல்னு போச்சுல, அது சல்மான்னு முத்தண்ணன் அடிக்கிற மொக்க ஜோக்குக்கும் சிரிக்கிற அளவுக்கு அந்தப் பெயர் ஃபேமஸ். கடவுள் கால்வாசி மிருகம் முக்கால்வாசி கலந்து செய்த கலவைதான், சல்மான். இதுவரை என்னென்ன சேட்டைகளை சல்மான் பண்ணியிருக்காருனு பார்ப்போம்.
பாலிவுட்டில் பல ஆண்டுகளாக மாஸ் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருப்பவர் சல்மான், இன்னைக்கு இருக்குற 2கே கிட்ஸ்கள் மத்தியில் கூட கிரேஸியான ஃபேன்கஸ் அவருக்கு இருக்காங்க. இதுக்கெல்லாம் காரணம், அவரோ மாஸ், நடிப்பு, டான்ஸ், ஃபைட்னு என்ன வேணும்னாலும் சொல்லலாம். (ம்க்கும், நம்ம மைண்ட்ல வேற வீரம் படம் டீசர் வந்துட்டு போகுதே..) ஒரு மாஸ் ஹீரோ எப்படியெல்லாம் .இருக்கணும்ன்றதுக்கு முன்னுதாரணமாக சல்மான் இருக்காரு, அதுலலாம் டவுட் இல்லை. ஆனால், அதைவிட அதிகமாக ஒரு மாஸ் ஹீரோ நிஜ வாழ்க்கையில எப்படியெல்லாம் இருக்கக் கூடாதுன்றதுக்கு முன்னுதாரணமா நம்ம தலதான் இருக்காப்புல.
சல்மான் கான்னு என்று சொன்னாலே, பாலிவுட் ரசிகர்களை தவிர்த்து மற்ற மொழி ரசிகர்களுக்கு அவரோட குற்றப் பின்னணிதான் முதல்ல நினைவுக்கு வரும். இந்த இடத்துல ஒண்ணு சொல்லணும்.. மிஸ்டர் சல்மான் சார்.. நீங்க படத்துலதான் ஹீரோ, நிஜத்துல இல்லை. இந்த விஷயம் சல்மான் கானுக்கு தெரியுமானு தெரியல. ஏன்னா, மனுஷன் நிஜத்துலயும், என்னை கேட்க யாரும் இல்லைனு அர்ஜூன் ரெட்டி ஹீரோ மாதிரி சுத்திட்டு சம்பவம் பண்ணிட்டு இருக்காரு.
மான் வேட்டையாடியதாக இவர் மேல 1998-ல வழக்கு பதிவு பண்ணாங்க. பெயர்ல மட்டுமில்ல மனசுலயும் இடம் கொடுத்துருக்காருல, அந்த பாசம். சல்மான் செல்வாக்குப் பத்தி சொல்லணுமா என்ன.. இந்த வழக்கு தோ கிலோமீட்டர் மாதிரி இழுத்துட்டே போய் 2019-ல் தீர்ப்பு வந்தது. ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது ஜோத்பூர் நீதிமன்றம். ரெண்டே நாள் சிறைவாசத்துக்கு அப்புறம் பெயில்ல வெளியே வந்தார் சல்மான். இதுல ஆச்சரியம்லாம் ஒண்ணுமில்லை, வெளியை வரலைனாதான் ஆச்சரியம்.
Also Read – ஹாலிவுட்டுக்கே சவால்… கேமரா மேன் நீரவ் ஷா சம்பவங்கள்!
மும்பை பந்த்ரா பகுதியில கடந்த 2002 – ல சல்மான் கார் தாறுமாறாக ஓடி, நடைபாதைல் படுத்திருந்தவங்க மேல ஏறி விபத்தாச்சு. அதுல ஒருத்தர் பரிதாபமாக உயிரிழந்தார்; 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கும் போய்கிட்டே இருந்துச்சு. கடைசி வரைக்கும் சரியான நீதி கிடைச்சதான்றது மில்லியன் டாலர்.. சாரி, பல கோடி ரூபாய் கேள்வி. இந்த வழக்கோட விசாரணையையும் திருப்பங்களையும் வைத்தே ஒரு பயங்கரமான கோர்ட் டிராமா பண்ணலாம். இந்த அட்டகாசமான பின்னணியில், இந்தியில் வெளியான ‘ஜாலி எல்எல்பி’ படமோ, அதைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட ‘மனிதன்’ படமோ உங்களுக்கு நினைவுக்கு வந்தால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
படங்கள்ல பார்க்க முரட்டுப்பீஸா இருக்கீங்க, ஆனால், ரொமான்ஸ்லாம் பின்றீங்களேங்கனு வடிவேலு டோன்ல டயலாக்கை சல்மான்கிட்ட ஆன்ஸ்கிரீன், ஆஃப்ஸ்கிரீன் ரெண்டுலயும் சொல்லலாம். ஏன்னா, நிஜத்திலும் அட்டகாசமான ரொமான்ட்டிக் ஹிரோதான். என்ன.. சினிமாவுல பாசிட்டிவான அட்டகாசம். நிஜத்துல நெகட்டிவான அட்டகாசம். இவர்கிட்ட காதலில் விழும் வரை ரொமான்ட்டிக் தோழரா தெரிவார். காதலில் விழுந்து சில பல அனுபவங்களுக்குப் பிறகுதான் இவர் ஒரு கொடூரமான காதலன்றது புரியும். பிரேக் அப் ஆகும். அப்புறம் புதுக் காதல்.. ரிப்பீட்டு. சங்கீதா பில்ஜானி, ஐஸ்வர்யா ராய், காத்ரீனா கைஃப், சோமி அலின்னு இவரோட காதல் அத்தியாயங்களின் லிஸ்ட் ரொம்ப பெருசு.
ஓர் ஆணின் உச்சகட்ட கேவலமான அப்ரோச்ன்றது.. பெண்களை உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதுதான். அந்தக் கேவலமான விஷயத்தை தன்னை நேசித்தவர்களிடம் காட்டியது டாக்சிக்கின் உச்சம். ஐஸ்வர்யா ராயை லவ் பண்ண காலத்துலயும், அவங்களுக்குள்ள பிரச்சினை வந்தப்பவும் இவர் பண்ண அட்டகாசங்கள் இருக்கே.. சொல்லி மாளாது. ஐஸ்வர்யா ராய் இவரல் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாது. இந்த விஷயங்கள்ல சல்மான் எந்த அளவுக்கு மோசம்ன்றதுக்கு, சமீபத்தியில் சோமி அலி பகிரங்கமா போட்ட இன்ஸ்டா போஸ்ட் தான் சாட்சி. பாகிஸ்தான் நடிகையான இவர், பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர். இவருக்கும் சல்மான் கானும் 1991 முதல் 1999-ம் ஆண்டு வரை ரிலேஷன்ஷிப்ல இருந்தாங்க. அந்த எட்டு ஆண்டுகளுமே தனக்கு நரகமான காலம்னு இப்போ அவங்க ரிவீல் பண்ணியிருக்காங்க.
“சல்மான் ஒருநாள் கூட என்னை மதிச்சது இல்லை. பொது இடங்களில் என்னை தனது காதலி என அடையாளம் காட்டியதே இல்லை. நண்பர்களின் மத்தியில் அவமானப்படுத்துவார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவரால் நிறைய துன்பங்களை அனுபவித்தேன்”ன்னு புலம்பியிருக்காங்க. தன்னோட கரியரோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ தலையிட்டா, அப்படி உள்ளே நுழைஞ்சவங்க கரியரையே காலி பண்ற அளவுக்கு பவர்ஃபுல்லாவும் வலம் வந்திருக்கார். ஐஸ்வர்யா ராயை காதலித்த விவேக் ஓபராயின் கரியரை காலி பண்ணதுதான் ஊருக்கே தெரிஞ்ச எக்ஸாம்பிள். 90, 2000 காலக்கட்டத்துல இவர் பண்ணின அட்டகாசங்களுக்கு அளவே இல்லை. கொஞ்சம் கூட செல்ஃப் கன்ட்ரோல் இல்லாத மனுஷன், ஷூட்டிங்ல குடிச்சுட்டு வர்றது, ஸ்கிரிப்டை மாத்துறதுனு அடுக்கடுக்கான நெகட்டிவ் ஷேட்ஸ் நிறைய இருந்துச்சு.
காத்ரீனா கைஃப் பிறந்தநாள் பார்ட்டில ஷாரூக்கானோட சண்டை போட்டு, அப்புறம் கொஞ்ச நாள்ல ஹக் பண்ணி பழசை மறந்தது, சுல்தான் படம் ப்ரோமோஷன்ல, “ஷூட் முடிஞ்சி ரிங்குல இருந்து வெளிய வர்றப்ப ஒரு ரேப் பண்ணப்பட்ட பொண்ணு மாதிரி ஃபீல் பண்ணேன்”னு சர்ச்சைக்குரிய வகையில் பேசி, நாடு தழுவிய கண்டனங்களுக்குப் பிறகு சாரி கேட்டதுன்னு பல சம்பவங்களை அடுக்கிட்டே போகலாம். இப்படி ஹக்லி ஷேடு மிகுந்த பேக்ரவுண்ட் இருந்தாலும் கூட, சல்மான் கானை பாலிவுட் போற்றும் மக்கள் கொண்டாட காரணம்தான் என்ன?
இதுக்கு அவரோட கரியர்தான் காரணம். ஒருபக்கம் பெண் ரசிகர்களை ஈர்க்கிற ரொமான்ட்டிக் ஹிரோவா தன்னை நிலைநிறுத்திக் கொண்டது, இன்னொரு பக்கம் தன்னோட மாஸ் பிரசன்ஸால ஒவ்வொரு தலைமுறையிலும் இளம் ரசிகர்களை வசப்படுத்தியது, இதையெல்லாம் கடந்து பாலிவுட் ரசிகர்களை மகிழ்விக்கும் நல்ல என்டர்டெயினரா இருக்குறதும்னு பல காரணங்கள் இருக்கு. குறிப்பாக, பாலிவுட்டின் வசூல் மன்னன்களில் ஒருத்தரா இன்னமும் நீடிக்கிறார். இதற்கு இடையில, தன்னோட இமேஜை க்ளீன் ஆக்குறதுக்காக, சாரிட்டி அமைப்பு ஏற்படுத்தினது, பல நிதி சார்ந்த உதவிகளை செய்றது, கொரோனா காலக்கட்டத்துல அரசுக்கும் மக்களுக்கும் உதவியதுன்னு பல நல்ல காரியங்களையும் செய்துட்டு இருக்கார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சினிமாவை விட டிவி மூலமாதான் குடும்பங்கள் கொண்டாடும் நாயகனா மாறினாரு. யெஸ், இவர் தொகுத்து வழங்குற பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ். சல்மான் பத்தி இவ்ளோ பேசிட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் கோலோச்சி வரும் அவர் நடிச்ச படங்கள் பத்தி பேசலையேன்னு கேட்கலாம். அவர் கரியர்ல பெஸ்ட்டான சில படங்கள் சொல்றேன். நோட் பண்ணிக்கோங்க. இதெல்லாம் எப்ப வேணுன்னாலும் பார்த்து எஞ்சாய் பண்ற ரகம். Maine Pyar Kiya (1989), Hum Aapke Hain Koun (1994), Hum Aapke Hain Koun (1994), Judwaa (1997), Hum Dil De Chuke Sanam (1999), Tere Naam (2003), Dabangg (2010), Ek Tha Tiger (2012), Kick (2014), Bajrangi Bhaijaan (2015), Sultan (2016).