தமிழ் சினிமாவில் பசங்க, களவாணி, வாகை சூடவா, கலகலப்பு மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர், நடிகர் விமல். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘விலங்கு’ வெப் சீரீஸும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமல் வேறலெவலில் கம்பேக் கொடுத்துள்ளார் என கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் மீது எக்கச்சக்கமான பண மோசடி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. விமல் தொடர்பான விஷயத்தில் என்ன நடக்கிறது? இதற்கு அவர் கொடுத்த பதில் என்ன? என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

நடிகர் விமல் நடிப்பில் 2018-ம் ஆண்டு மன்னர் வகையறா என்ற படம் வெளியானது. பூபதி பாண்டியன் இயக்கிய இந்தப் படத்தை நடிகர் விமல் தயாரித்தார். இந்தப் படம் தொடர்பான பிரச்னைதான் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இதுதொடர்பாக சினிமா தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், “நடிகர் விமல் மன்னர் வகையறா என்ற படம் எடுத்தபோது என்னிடம் இருந்து ரூ.5 கோடி கடனாக வாங்கினார். படத்தின் லாபத்திலும் பங்கு தருவதாகத் தெரிவித்தார். ஆனால், என்னிடம் வாங்கிய தொகையைத் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டார். பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது ரூ.5 கோடியை திருப்பித் தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை நடிகர் விமல் மறுத்திருந்தார்.

தயாரிப்பாளர் கோபியின் புகாரைத் தொடர்ந்து விநியோகஸ்தகர் சிங்காரவேலன் என்பவரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் படங்களை விநியோகம் செய்து வருகிறேன். கடந்த 2016-ம் ஆண்டு விமல் எனக்கு அறிமுகமானார். இவர் நடித்த இஷ்டம், புலிவால், மாப்பிள்ளை சிங்கம் போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவின. இதனால், தனது மார்க்கெட்டை இழந்தார். அப்போது மன்னர் வகையறா படத்தை தானே தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதற்கு தேவைப்படும் பண உதவியை திருப்பூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் வழியாக என்னிடம் கேட்டார். நான் எனது நண்பர் கோபியிடம் இருந்து ரூ.5 கோடியை வாங்கிக் கொடுத்தேன்.

மன்னர் வகையறா படத்தைத் தொடர்ந்து களவாணி – 2 படத்தை தயாரிக்கவுள்ளதாகக் கூறினார். அதற்கான விநியோக உரிமையை என்னிடம் பெற்றுக்கொள்ளக் கூறினார். இந்தப் படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக என்னிடம் இருந்து ரூ.1.50 கோடி கடன் வாங்கினார். படம் தொடங்குவதில் தாமதமானது. இதனையடுத்து, படத்தை சற்குணமே தயாரிக்க இருப்பதாகவும் என்னிடம் வாங்கியப் பணத்தை திருப்பித் தருவதாகவும் கூறினார். ஆனால், அவர்கூறியபடி பணத்தைத் தரவில்லை. பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்தேன். இதனிடையே ஒரு அரசியல் பிரபலத்தின் வாயிலாக என்னை அணுகி பணத்தைத் திருப்பித் தருவதாக ஆவணம் ஒன்றில் கையெழுத்திட்டு தந்தார். ஆனால், இரண்டு வருடங்கள் ஆகியும் பணத்தைத் தராமல் மோசடி செய்து விட்டார்” என தெரிவித்துள்ளார்.

மன்னர் வகையறா படத்தின் தயாரிப்பு பணிகளைத் தொடங்கிய கணேசன் என்பவரின் மகள் ஹேமாவும் விமல் பண மோசடி செய்ததாகக்கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் ஹேமா, “திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் மறைந்த எனது தந்தை கணேசன். இறைச்சிக் கடைகள், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் மூலம் தொழிலதிபராக வளர்ந்தவர். எனது தந்தைக்கு சினிமா மீது அதிக ஆர்வம். அவரை, மூளைச்சலவை செய்து ‘மன்னர் வகையறா’ படத்தை விமல் தொடங்க வைத்தார். படத்தின் பட்ஜெட் ரூ.5 கோடி, ரூ.1.5 கோடி மட்டும் முதலீடு செய்து மீதித்தொகையை கடனாக பெற்றுக்கொள்ளலாம் என்று விமல் கூறியதை நம்பி எனது தந்தை இந்தப் பணியில் இறங்கினார்.

பட்டுக்கோட்டையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கியது. 17 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பின்னர், விமலுக்கும், கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, படப்பிடிப்பு நடைபெறாமல் போனது. அதனால் மனம் வெறுத்துப்போன என் தந்தை, அதற்கு மேல் படப்பிடிப்பைத் தொடர மனமில்லாமல் ரத்து செய்ய சொல்லிவிட்டு மீண்டும் திருப்பூருக்கு வந்தார். பின்னர், எனது தந்தையை சந்திக்க விமல் வந்தார். அப்போது அவரிடம் எனது தந்தை, ‘உன்னை நம்பித்தான் முதலீடு செய்தேன். தனிமனித ஒழுக்கம் இல்லாத உன்னை நம்பி நான் மேலும் ரிஸ்க்கில் இறங்க நான் விரும்பவில்லை. என் நஷ்டத்தை ரியல் எஸ்டேட் தொழில் மூலம் சரிகட்டுவேன்’ என்று கூறி படத்தைத் தயாரிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். ஆனால், விமல் எனது தந்தையிடம், ‘இந்த படத்தை நம்பித்தான் எனது எதிர்காலம் உள்ளது. எனவே படத்தை நானே மேற்கொண்டு தயாரித்துக்கொள்கிறேன். நீங்கள் செலவு செய்த தொகையைத் திருப்பி தந்துவிடுவேன்’ என்று நடிகர் விமல் கூறினார்.

விமல் தான் சொன்னபடி நடக்கவில்லை. எனவே சென்னை ஐகோர்ட்டில் எனது தந்தை வழக்கு தொடர்ந்தார். அதன்பின்னர் விமல் எனது தந்தையுடன் சமரசம் செய்துகொண்டு பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி எந்த தொகையையும் இதுவரை விமல் திருப்பித்தரவில்லை. ஒப்பந்தத்தின்படி படத்தின் மற்ற மொழி உரிமைகள் எனது தந்தையிடம் இருந்தது. ஆனால் என் தந்தைக்கு தெரியாமல் படத்தின் தெலுங்கு உரிமையை விமல் விற்றுவிட்டார். அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு வந்துசேர வேண்டிய ரூ.1.73 கோடி பணத்தை பெற்றுத்தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். கண்ணீருடன் பேட்டியளித்த ஹேமா, ‘எனக்கு அழுகை தானாகத்தான் வருகிறது. கிளிசரின் ஒன்றும் போடவில்லை” என்றும் கூறினார்.

பணமோசடி தொடர்பாக விமர் மீது தொடர்ச்சியான குற்றங்கள் எழுந்த நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக விமல் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த ஆடியோவில் விமல், “கோபி சார், சிங்காரவேலன் அவர்களுக்கு வணக்கம்னே! என்னை மெருகேற்றி, மேன்மைப்படுத்திய உங்களுக்கு என்னோட நன்றி. அவமானங்கள், தலைகுனிவு, மன உளைச்சல், ஐயயோ இப்படிலாம் பண்றாங்களேனு வெம்பிப் போய்க்கிடந்தேன். ஆனால், திடீர்னு எனக்கு பாஸிட்டிவ் எனர்ஜி வந்த மாதிரி இருக்கு. இதையெல்லாம் சவாலா நினைச்சுக்கிட்டு ஓடணும்னு ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை எனக்குள்ள நீங்க ஏத்தியிருக்கீங்கனு நம்புறேன். கண்டிப்பா நான் ஓடிக்கிட்டே இருப்பேன். இந்த வருஷத்துக்குள்ள உங்க கடன் எல்லாத்தையும் அடைச்சிட்டு நானும் நிம்மதியா இருப்பேன். உங்களையும் நிம்மதியா வச்சுட்டு எல்லாரும் சேர்ந்து ஜெயிப்போம்ங்கற ஒரு நல்ல மனப்பான்மையோட ஓடறேன். வேலி போட்டாலும் ஓடுவேன். காம்பவுண்ட் போட்டா ஏறிக்குதிச்சு ஓடுவேன். ஓடிக்கிட்டே இருப்பேன். என்னை ஓட வச்ச உங்களுக்கு ரொம்ப நன்றிண்ணே. என்னை பாராட்டுகிற அந்த காலம் கண்டிப்பா வரும்னு நான் நம்புறேன். அந்த காலம் வரும். வரும். நன்றி!” என்று பேசியிருந்தார்.

சமூக வலைதளங்களில் வெளியான விமலின் இந்த ஆடியோ பழையது என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த ஆடியோவை மறுத்து புதிய ஆடியோ ஒன்றையும் விமல் வெளியிட்டுள்ளதாக ஆடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த ஆடியோவில், “வணக்கங்க. இப்போ வைரலாகுற ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியாயிட்டேன். இந்த ஆடியோ 2.5, 3 வருஷத்துக்கு முன்னாடி விரக்தில போட்ட ஆடியோ இது. அதை இன்னைக்கு பேசுன மாதிரி சித்தரிச்சு போடுறாங்க. அவங்க என்னை அடிமையா வைச்சிருக்கும்போது எடுத்த ஆடியோதான் இது. என்னை அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக்குனவங்கக்கிட்ட போய் இப்படிலாம் பேசுவனா? அதை மிஸ் யூஸ் பண்றாங்க. இதுக்கும் சேர்த்து நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் மன்னர் வகையறா படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ரூ.5 கோடி பணமோசடி செய்ததாக விமல் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: ’எமெர்ஜென்சி நடிகர் முதல் 5 டிவி சீரியல்கள் வரை…’ நடிகர் யஷ் வாழ்வின் முக்கிய திருப்பங்கள்!