Corona Vaccines

கொரோனா இரண்டாவது அலை… தடுப்பூசிகளைத் தவிர்க்காதீர்.. தடுக்காதீர்!

கொரோனா முதல் அலை இந்தியாவில் வேகமாகப் பரவியது. அதையடுத்துப் மார்ச் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைமுறையில் இருந்த முழு ஊரடங்கு காரணமாக, கொரோனா முதல் அலை இந்தியாவில் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால், இந்தியப் பொருளாதாரம் காஷ்மீர் தொடங்கி… கன்னியாகுமரி வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் தொடங்கிய இரண்டாவது அலை, வட இந்தியாவை உலுக்கி எடுத்தது. டெல்லியும், உத்தரப்பிரதேசமும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோரத் தாண்டவத்தைத் தொடங்கி உள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே வழி!

Covishield

இதற்கிடையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த, ஒரே வழி தடுப்பூசிகள்தான் என்றும், அதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பாரத் பயோ டெக் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் கோவேக்ஸின், பூனே சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்படும் பணிகள் தொடங்கின. ஆரம்பத்தில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் போடப்பட்ட தடுப்பூசிகள், மே 1-ம் தேதி முதல் அனைவருக்கும் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, சொன்னபடி அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. காரணம், இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கு, 1 கோடியே 65 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே மத்திய அரசு வைத்திருந்தது. இதில் 1 கோடியே 10 லட்சம் டோஸ்கள் கோவிஷில்டு மருந்துகளாகும். மீதமுள்ள 55 லட்சம் டோஸ்கள் கோவேக்ஸின் மருந்தாகும்.

தடுப்பூசியில், தமிழகம் தயங்கியது ஏன்?

மத்தியத் தொகுப்பில் இருந்து முதற்கட்டமாக, 6 லட்சம் டோஸ்கள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், அந்த நேரத்தில் கோவிஷீல்டு போட்டுக்கொண்ட, திரைப்பட நகைச்சுவை நடிகர் மறுநாளே ரத்தம் உறைதல் காரணமாக இறந்துவிட்டார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் கொரோனா தடுப்பூசி பற்றிய அவதூறுகளும், வதந்திகளும் பரப்பப்பட்டன. கோவிஷிஷீல்டு மருந்து பற்றிய அச்சத்தைப் போக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் விடுத்த அறிக்கையும், அதன் மீதான சந்தேகத்தை அதிகரித்தது. தொடர்ச்சியான இந்த சந்தேக வாதங்கள், மக்களிடம் கடுமையான அச்சத்தை உண்டாக்கியது. அதன் காரணமாக, தமிழகத்தில் கோவிஷீல்டு மருந்தைப் போட்டுக்கொள்ள பொதுமக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகமாகத் தொடங்கியது. தற்போது பல சுகாதார மையங்களில், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டாலும், மக்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதன் காரணமாக இந்தியாவிலேயே கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின்தங்கியது.

Covaxin

தடுப்பூசி எடுத்தால், மருத்துவமனை தேவையில்லை!

கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளைப் போட மக்கள் ஆர்வம் காட்டாததே, தற்போதைய இரண்டாவது அலை, கடும் பாதிப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இதுகுறித்து பேசிய சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வி.காமராஜா, “அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட சோதனையில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, இரண்டாவது அலையில் உடல் உபாதைகள் ஏற்பட்டாலும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் ஆபத்தான கட்டத்தை எட்டவில்லை. அவர்களுக்கு கொரோனா நோயின் பாதிப்பும் குறைவாகவே இருந்தது. அதனால், தற்போது பரவிக் கொண்டிருக்கும் இரண்டாவது அலையில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி’’ என்றார்.

Dr.V.Kamaraja
மருத்துவர் வி.காமராஜா

மூன்றாவது சாய்ஸ் ரஷ்யாவின் ஸ்புட்னிக்!

யார் என்ன சொன்னாலும், கோவிஷீல்டு, கோவேக்சின் மருந்துகளை நாங்கள் நம்பமாட்டோம் என்று நினைப்பவர்களுக்கு, மற்றொரு வாய்ப்பாக, ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் என்ற மற்றொரு தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஹைதரபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் என்ற நிறுவனம், அதற்காக ரஷ்யாவுடன் ஒப்பந்தம்போட்டு, ஸ்புட்னிக் மருந்தைக் கொள்முதல் செய்துள்ளது. விரைவில் அந்த மருந்தும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பதால், அதையாவது பொதுமக்கள் விரைவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே தற்போது தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவ நிபுணர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

கோவேக்ஸின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஒரு ஒப்பீடு….

கோவேக்ஸின் – ஐ.சி.எம்.ஆர் என்று சொல்லப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளதுதான் கோவேக்ஸின். இதன் செயல்திறன் என்பது, 81 சதவிகிதமாக உள்ளது. முதல் டோஸ் போட்டுக் கொண்ட 28 நாட்களுக்குள் அடுத்த டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும். இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதும், லேசான காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்றவை ஏற்படும். ஆனால், அதற்காகப் பயப்படத் தேவையில்லை.

கோவிஷீல்டு – இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தயாரித்ததுதான் கோவிஷீல்டு. இதன் செயல்திறன் 70 முதல் 90 சதவிகிதம் வரை உள்ளது. இரண்டு டோஸ்கள் போட்டுக் கொள்ள வேண்டும். இதை எடுத்துக் கொண்டதும் லேசான தலைவலி, குமட்டல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். ஆனால், அதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. முதல் டோஸ் போட்டபிறகு, அடுத்த 60 முதல் 90 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளலாம்.

Sputnik V Vaccine
Sputnik V Vaccine

ஸ்புட்னிக் – ரஷ்யாவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தை, அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புட்டினின் மகள், முதன்முறையாகப் போட்டுக் கொண்டார். இதை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு, ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் அனுமதி பெற்றுள்ளது. இதன் செயல்திறன், மற்ற இரண்டு மருந்துகளைவிட அதிகம். 91.6 சதவிகிதம் அளவுக்கு செயல்திறன் கொண்டது. மேலும், பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதாலும், ஸ்புட்னிக் மற்ற இரண்டு மருந்துகளைவிட சிறந்ததாகக் கருதப்படுகிறது.

தற்போது நாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தி வரும், கோரத் தாண்டவத்தில் இருந்து மீளவும், மூன்றாவது அலையில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ளவும், தடுப்பூசிகளைத் தவிர வேறு வழியே இல்லை. அதை உலக நாடுகள் நிருபித்துள்ளன. இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், தடுப்பூசி போடுவதைத் தவிர்க்காதீர்கள்… தள்ளிப் போடாதீர்கள்…

Also Read – சோனு சூட் – நிஜ ஹீரோவா.. மக்களுக்கு எப்படி உதவி செய்கிறார் அவர்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top