இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகளுக்குமே அவசரகால மருத்துவப் பயன்பாட்டுக்கான ஒப்புதல் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகிவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி போடும் பணியில் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும், இதற்காக Cowin இணையதளத்தில் ஏப்ரல் 28ம் தேதி முதல் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. முதல்நாளில் ஓடிபி வருவது, இணையதளம் கிராஷானது உள்ளிட்ட சிக்கல்களால் குழப்பம் நேர்ந்தது.
தற்போதைய சூழலில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றைத் தேர்வு செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், அவற்றுக்கிடையேயான வேறுபாடு பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. அந்த சந்தேகத்தைப் போக்கவே இந்த கட்டுரை.
கோவிஷீல்டு vs கோவாக்ஸின்… என்ன வித்தியாசம்?
தயாரிப்பு
கோவாக்ஸின் ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் (ஐ.சி.எம்.ஆர்) அமைப்பும் இணைந்து தயாரித்தது.
கோவிஷீல்டு தடுப்பூசி ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனகா தயாரிப்பாகும். இது புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தடுப்பூசி வகை
கோவாக்ஸின் இனாக்டிவேட்டர் வைரஸ்களைக் கொண்ட Whole-Virion Inactivated Vero Cell-derived technology என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த தடுப்பூசி, கோவிட்-19 டெட் செல்ஸ் எனப்படும் இறந்த வைரஸ்களைக் கொண்டிருக்கும். இதனால், தடுப்பூசி எடுத்துக்கொண்டவருக்குப் பாதிப்பில்லை என்றாலும், அந்த வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்ய தூண்டுதலாக அமையும்.
இதேபோன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்கெனவே,
- இன்ஃப்ளூயன்ஸா
- ரேபிஸ்
- போலியோ
- ஜப்பானிஸ் என்சிபாலிடிஸ் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கோவிஷீல்டு தடுப்பூசி வைரல் வெக்டர் பிளாட்ஃபார்ம் எனப்படும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. இது கோவாக்ஸின் தயாரிப்பு முறையை விட முற்றிலும் மாறுபட்டது. கோவிட் – 19 ஸ்பைக் புரோட்டீனை எடுத்துச் செல்லும்படியாக தகவமைக்கப்பட்ட சிம்பான்ஸி அடினோ வைரஸ் (ChAdOx1) கோவிஷீல்டு தடுப்பூசியில் இருக்கும். இந்த வைரஸ் மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதேநேரம், இதேபோன்ற வைரஸ்களுக்கு எதிரான தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய நோயெதிர்ப்பு அணுக்களைத் தூண்டும்.
டோஸ்
டோஸ் விஷயத்தில் இரண்டு தடுப்பூசிகள் இடையே வேறுபாடு இல்லை. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொள்ளும் வகையில் அவை தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
ஸ்டோரேஜ்
கோவிஷீல்டு, கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகளையுமே 2-8 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் பாதுகாக்க முடியும். இது சாதாரணமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் ஃபிரிட்ஜ்களின் வெப்பநிலை. இதனால், இந்திய போன்ற வெப்பமண்டல நாடுகளில் இதை சேமிப்பது மற்றும் தூரமான இடங்களுக்குக் கொண்டு செல்வது எளிது.
செயல்திறன்
இரண்டு தடுப்பூசிகளுமே சோதனைகளில் போதுமான அளவு செயல்திறன் கொண்டவை என நிரூபிக்கப்பட்டவை. கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் 90% அளவுக்கு திருப்திகரமாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. உலக அளவில் நடத்தப்பட்ட மூன்றாம்கட்ட இடைநிலை சோதனைகளின் அடிப்படையில் கோவாக்ஸின் தடுப்பூசியின் செயல்திறன் 81%.
பயன்பாடு
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகளுக்குமே அவசரகால மருத்துவப் பயன்பாட்டுக்கான ஒப்புதல் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசரகாலத்தில் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மட்டுமே இந்தத் தடுப்பூசிகளைப் பயன்படுத்த முடியும். அதேநேரம் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (DGCI) சந்தையில் விற்பனை செய்ய இந்த இரண்டு தடுப்பூசிகளுக்குமே இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
விலை
இரண்டு தடுப்பூசிகளுமே அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சில மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளைப் போடுகின்றன. அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக ரூ.250 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
பயனாளிகளின் வயது
கோவிஷீல்டு தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் போட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கோவாக்ஸின் தடுப்பூசி, 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், இரண்டு தடுப்பூசிகளுமே சிறுவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கொடுக்கப்பட எந்தவிதமான ஒப்புதலும் கொடுக்கப்படவில்லை.