ஸ்ரேயாஸ் ஐயர்
மும்பையின் மத்தியப் பகுதியில் இருக்கும் பகுதி ஆதர்ஷ் நகர். வொர்லியை அடுத்து அமைந்திருக்கும் இந்தக் குடியிருப்புப் பகுதி, மும்பையிலேயே அரிதான அமைதியான சுற்றுப்புறத்தைக் கொண்டது. இந்தப் பகுதியில் வசிக்கும் சந்தோஷ் ஐயர் – ரோஹினி தம்பதியின் மகனாக 1994 டிசம்பர் 6-ம் தேதி பிறந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். தந்தை சந்தோஷ் கேரள மாநிலம் திருச்சூரைப் பின்னணியாகக் கொண்டவராக இருந்தாலும், மும்பையிலேயே செட்டில் ஆனவர்.
நான்கு வயதில் சிறு குழந்தையாக இருந்தபோதே கிரிக்கெட் பேட்டைப் பிடித்த ஸ்ரேயாஸ், ஏரியா பசங்களோடு விளையாடத் தொடங்கியிருக்கிறார். குட்டியாக இருந்த ஸ்ரேயாஸ், பெரிய பசங்களோடு விளையாடுகையில் பெரிதாக பேட்டிங், பௌலிங் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவரின் தந்தை சந்தோஷ், கல்லூரி வரையில் கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டிருந்தார். பின்னர், பல்வேறு சூழல்களால், விளையாட்டைத் தொடர முடியாத நிலையில், மகனுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் இருப்பதை அறிந்து அதை ஊக்குவிக்கத் தொடங்கியிருக்கிறார்.
திருப்புமுனை தந்த சிவாஜி பார்க் ஜிம்கானா
ஆதர்ஷ் நகர் குடியிருப்பு வாசிகள், தங்கள் குழந்தைகளை வொர்லி கிரிக்கெட் கிளப்பில் செலக்ஷனுக்காகக் கூட்டிச் சென்ற நிலையில், ஸ்ரேயாஸின் தந்தை வேற ஐடியாவில் இருந்தார். மும்பையில் பிரபலமான சிவாஜி பார்க் ஜிம்கானா கிளப்புக்கு மகனை அழைத்துச் சென்றார். மும்பையின் Raw Talent-களை அடையாளம் காணுவதற்காக அந்த மைதானத்தில் கடந்த 2000-த்தில் புதிய கிளப் தொடங்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே ஆறு வயதான ஸ்ரேயாஸை கோச்சிங்குக்காக அங்கு சேர்க்க முயற்சித்திருக்கிறார் அவரின் தந்தை. ஆனால், 25 பேருக்கு மேல் சேர்த்துக் கொள்ள முடியாது என்பதால், அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு அந்த அகாடமியில் சேர்ந்த ஸ்ரேயாஸிடம் இருந்த திறமையை பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே கண்டுகொண்டார். 12 வயதிலேயே அவரின் பேட்டிங் நுணுக்கங்களைக் கண்டு ஆச்சர்யப்பட்ட கோச் பிரவீன், சிவாஜி பார்க் ஜிம்கானா அணிக்காக விளையாட வைத்தார். ஜூனியர் கிரிக்கெட்டில், அவரின் முதல் சதமும் அந்த அணிக்காகவே அடித்திருக்கிறார். அதன் பின்னர், மும்பை அண்டர் 13, 16 அணிகளுக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் வாழ்வில் அண்டர் 16 விளையாடிய 2 ஆண்டுகள் சோதனைக் காலம்.
அதிரடியான அவரின் அணுகுமுறையே அவருக்குப் பாதகமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் அணியில் இருந்து கழற்றிவிடப்பட வேண்டிய நிலை வந்தபோது, கோச் வினோத் ராகவனின் நம்பிக்கை காப்பாற்றியது. அவரின் நம்பிக்கையைக் காப்பாற்றி அண்டர் 16 அணியின் கேப்டனாகவும் உயர்ந்தார். 2014 ஜூனியர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அவர் விளையாடிய 3 மேட்சுகளில் இரண்டு அரைசதங்களையும் பதிவு செய்தார். இது அவர் மீதான பார்வையை மாற்றியது.
இங்கிலாந்துப் பயணம்
2014-ல் இங்கிலாந்தின் டிரெண்ட் பிரிட்ஜ் அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த அணிக்காக 3 மேட்சுகளை விளையாடிய ஸ்ரேயாஸ், ஒரே இன்னிங்ஸில் 171 ரன்கள் உள்பட 297 ரன்கள் குவித்து அசத்தினார். அதன்பிறகு மும்பை அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டார். முதல் சீசனில் 2 செஞ்சுரி, 6 அரைசதங்களோடு 809 ரன்கள் குவித்த அவர், 2015-16 ரஞ்சி சீசனில் செஞ்சது தரமான சம்பவம். அந்த சீசனில் 4 செஞ்சுரிகள், 7 அரைசதங்களோடு எடுத்தது 1,321 ரன்கள். அந்த சீசனின் டாப் ஸ்கோரர் நம்ம ஸ்ரேயாஸ்தான். அதன்பிறகு அவர் கரியரில் ஏற்றம்தான்.
2015 ஐபிஎல் தொடர் ஸ்ரேயாஸ் ஐயர் கரியரில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த ஆண்டு நடந்த வீரர்கள் ஏலத்தில் அடிப்படை விலையாக 10 லட்ச ரூபாய் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரஞ்சியில் மாஸ் காட்டிய அவரை ஏலத்தில் எடுக்க பல அணிகளும் போட்டி போட்ட நிலையில், டெல்லி அணியால் 2.6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்தத் தகவல் தெரிந்ததும், ஏதோ பொய் சொல்லி விளையாடுகிறார்கள் என்று நினைத்திருக்கிறார் ஸ்ரேயாஸ்.
ஐபிஎல் பயணம்
அதற்கு முன்னர் எந்தவொரு போட்டியிலும் ஓபனிங் இறங்கிய அனுபவம் இல்லாத அவர், ஐபிஎல் முதல் சீசனில் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்டார். முதல் சீசனில் 14 மேட்சுகளில் 439 ரன்கள் குவித்தார். அந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 9-வது இடம்பிடித்ததோடு, எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசன் விருதையும் வென்றார். 2018 ஐபிஎல் சீசனில் டெல்லி அணியால் தக்கவைத்துக் கொள்ளப்பட்ட ஸ்ரேயாஸ், அந்த சீசனில் பாதி மேட்சுகள் முடிந்த நிலையில், கௌதம் காம்பீருக்குப் பதிலாக டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அப்போது 23 வயதான ஸ்ரேயாஸ், ஐபிஎல் வரலாற்றில் டெல்லி டீமின் கேப்டன் பொறுப்பை ஏற்ற இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். கேப்டனாக கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 40 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அசத்தினார். 2017 மார்ச்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த வீராட் கோலிக்குப் பதிலாக சேர்க்கப்பட்டார். ஆனால், அந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதே ஆண்டு நவம்பரில் நியூஸிலாந்துக்கெதிரான டி20 போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய அவருக்கு பேட்டிங் சான்ஸ் கிட்டவில்லை. டிசம்பரில் இலங்கைக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ், மொகாலியில் நடந்த போட்டியில் 70 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். 2019 டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் ஒரே ஓவரில் 31 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார் ஸ்ரேயாஸ். ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் குவித்த அதிக ரன்கள் இதுதான். டெஸ்ட் டீமில் முதல்முறையாகத் தேர்வு செய்யப்பட்டு நான்காண்டுகள் கழித்து 2021 நவம்பரில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். கவாஸ்கரிடமிருந்து டெஸ்ட் கேப்பை வாங்கிய ஸ்ரேயாஸ், அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த 16வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் மூன்று போட்டிகளிலுமே அரைசதங்கள் அடித்த அவர், மொத்தமாக 205 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இருநாடுகள் இடையிலான bilateral டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். கடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பாதிப் போட்டிகளில் விளையாடாத இவரை, சமீபத்திய ஐபிஎல் மெகா வீரர்கள் ஏலத்தில் 12.25 கோடி ரூபாய் என்ற பெரிய விலை கொடுத்து ஏலத்தில் எடுத்த கொல்கத்தா டீம், கேப்டனாகவும் அவரை நியமித்திருக்கிறது…
Also Read: `லெஜண்ட்’ ஷேன் வார்னே.. அவரின் ஆரம்பகாலம் எப்படி இருந்தது தெரியுமா?!