இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதேபோல, இந்தியாவின் சில கிராமங்களில் நடைபெறும் பஞ்சாயத்தில் சில விநோதமான தீர்ப்புகளும் பெண்களுக்கு எதிராக வழங்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் சமூக வலைதளங்களில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்துவது உண்டு. அந்த வகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் இளம்பெண்ணுக்கு எதிராக கிராம மக்கள் கொடுத்துள்ள தண்டனை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் தாஹோத் என்ற மாவட்டம் அமைந்துள்ளது, இந்த மாவட்டத்தில் கஹூரி என்ற கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் பழங்குடி மக்கள் அதிகமாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. பழங்குடி மக்கள் வாழும் இந்தப் பகுதியில் வசிக்கும் 23 வயதான இளம்பெண் ஒருவர் வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை கிராமத்தில் இருந்த பலர் சுற்றி வளைத்துள்ளனர். பெண்ணின் ஆடைகளைக் களைந்து அரை நிர்வாணமாக்கியுள்ளனர். இதுமட்டுமில்லாமல் அந்தப் பெண்ணின் கணவரை தோளில் சுமந்து செல்லவும் கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு ஆடை அணிவித்து உதவி செய்ய வந்த பெண்களையும் சில ஆண்கள் தடுத்து விரட்டியுள்ளனர். இந்த சம்பவமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
கிராமத்து மக்களில் சிலர் அந்தப் பெண்ணை குச்சியால் தாக்கியும் உள்ளனர். இந்த சம்பவத்தை இளைஞர்கள் சிலர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதோடு காவல்துறையினரின் பார்வைக்கும் சென்றுள்ளது. குஜராத் மகளிர் ஆணையம் அம்மாநில காவல்துறைக்கு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளது. இதனையடுத்து, தன்பூர் பகுதி காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர் உட்பட சுமார் 18 பேரைக் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் பேசும்போது, “பழங்குடி பெண்ணை துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த விஷயம் வெளியே தெரிந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்ணின் உறவினர்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
Also Read : வைரலான பனி சிறுத்தை புகைப்படம்… உங்களால கண்டுபிடிக்க முடியுதா பாருங்க!