ஆந்திர டிவி சேனல்களுக்கெதிரான தேசத்துரோக வழக்கில் அம்மாநில அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. என்ன நடந்தது?
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. மக்கள் நலத் திட்டங்கள் மூலம் லைம் லைட்டிலேயே இருந்துவரும் ஜெகன் மீது, அவரின் கட்சியைச் சேர்ந்த எம்.பியே புகார் வாசித்தது கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த நரசபுரம் தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பியான ரகுராம கிருஷ்ணம் ராஜூ ஜெகனின் பரோலை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய அம்மாநில அரசியல் பெரும் புயலைக் கிளப்பியது.
தேசதுரோக வழக்கு
ராஜூவின் குற்றச்சாட்டுகள் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124-ஏ-இன் (தேசதுரோகம்) கீழ் அமராவதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த மே 15-ம் தேதி அவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆந்திர டிவி சேனல்களான டிவி 5 மற்றும் ஏபிஎன் ஆந்திர ஜோதி சேனல்களும் இந்த வழக்கில் 2,3வது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டன. வெறுப்பை விதைக்கும் பேச்சு மற்றும் சமூகத்தின் இரு குழுக்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக ராஜூ மீதும், அவரது பேச்சை ஒளிபரப்பியதாக அந்த சேனல்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஆந்திர உயர் நீதிமன்றத்தை ராஜூ அணுகிய நிலையில், கீழமை நீதிமன்றத்தை முதலில் அணுகுமாறு கூறி அதை நீதிமன்றம் நிராகரித்தது. உச்ச நீதிமன்றத்தை அவர் நாடிய நிலையில், ஜாமீன் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தி சேனல்கள் சார்பில் ஆந்திர அரசின் மீது தொட்டுக்கப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
செய்தி சேனல்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் ஷ்யாம் திவன், சித்தார்த் லூத்ரா ஆகியோர் `இது எலெக்ட்ரானிக் மீடியாவை முடக்கும் செயல்’ என்றும் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கை என்றும் வாதாடினர். சிட்டிங் எம்.பி ஒருவரின் பேச்சை ஒளிபரப்பியது எப்படி தேசதுரோகமாகும் என்றும் அந்த சேனல்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. ஊடக சுதந்திரம் அடிப்படையில் ஐ.பி.சியின் 124 ஏ மற்றும் 153 ஆகிய சட்டங்களை நாம் மறுவரையறைக்கு உட்படுத்த வேண்டும் என்று சொன்ன நீதிபதிகள், டிவி சேனல்கள் சொல்வதெல்லாம் தேசத்துரோகமாகாது என்றும் கருத்துத் தெரிவித்தனர். மேலும், அந்த டிவி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர அரசுக்குத் தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசை விமர்சிப்பதெல்லாம் தேசதுரோகமாகாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இதுதொடர்பாக ஆந்திர அரசு, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நான்கு வாரங்களுக்கு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.