பொன்னியின் செல்வன் டிரெய்லர் எப்படி இருக்கு… அமரர் கல்கியோட கேரக்டரைசேஷனுக்கு நியாயம் பண்ணிருக்காங்களா.. டிரெய்லர்ல காட்டியிருக்க இடங்கள்… கேரக்டர்கள் என்னென்ன… டிரெய்லர்ல வராத ஒரு முக்கியமான கேரக்டர் தெரியுமா… இப்படி PS-1 டிரெய்லர் Decoding-தாங்க இந்த வீடியோ!
பொன்னியின் செல்வன் டிரெய்லர்!
நடிகர் கமல்ஹாசனின் குரலில் `ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு…’ என்ற வரிகளோட டிரெய்லர் தொடங்குகிறது. டிரெய்லரில் ஆரம்பத்தில் காட்டப்படும் அரண்மனை, பதவியேற்பு விழா காட்சிகள் போன்றவை டீசரிலேயே இடம்பெற்றிருந்தன. அதேபோல், சுந்தரச் சோழராக வரும் பிரகாஷ் ராஜூம் டீசரில் இடம்பெற்றிருந்த அதே ஃப்ரேமே டிரெய்லரிலும் இடம்பெற்றிருக்கின்றன.
டிரெய்லரில் அதிகம் இடம்பிடித்திருப்பது கதை நாயகன் வந்தியத்தேவன்தான். அதேபோல், கடம்பூர் சம்புவரையர் மாளிகையும் திரையில் பிரமாண்டமாக விரிகிறது. சின்ன பழுவேட்டரையரின் ஆட்களிடம் இருந்து வந்தியத்தேவன் தப்பும் காட்சிகள், சம்புவரையர் மாளிகையில் நடக்கும் விஷயங்களை உளவறிந்து சொல்ல வேண்டும் என வந்தியத் தேவனிடம் ஆதித்த கரிகாலன் சொல்லும் காட்சிகள், பூதி விக்கிரமகேசரி, பார்த்திபேந்திர பல்லவன், மதுராந்தகர் செம்பியன் மாதேவியிடம் பேசும் காட்சிகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலன் போரிடும் காட்சிகள் அவ்வளவு நுட்பமாக விவரிக்கப்பட்டிருக்காது. ஆனால், டிரெய்லரில் ஆதித்த கரிகாலனோடு வந்தியத்தேவனும் சேர்ந்து போரிடும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
அதேபோல், இலங்கையின் சிம்மாசனத்தை புத்த குருக்கள், அருண்மொழி வர்மனுக்கு அளிக்க முன்வருகையில் அதை மென்மையாக மறுத்துவிடுவார். அந்த காட்சியும் டிரெய்லரில் அருண்மொழி வர்மரின் வசனங்களோடு இடம்பெற்றிருக்கின்றன. டீசரில் ஆழ்வார்க்கடியான் நம்பி ஒரே ஒரு ஃப்ரேமில் மட்டுமே தோன்றி மறைவார். டிரெய்லரில், சம்புவரையர் மாளிகையில் நடைபெறும் சம்பவங்கள் பற்றி வந்தியத்தேவனிடம் அவர் கேட்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. சிறுவயது நந்தினியாக சாரா அர்ஜூனையும் டிரெய்லரில் அறிமுகப்படுத்துகிறார்கள். குந்தவையை வந்தியத்தேவன் முதன்முதலில் சந்திக்கும் இடமும், ஆதித்த கரிகாலனிடம் தஞ்சைக்கு வராதது குறித்து அவர் கேள்வி எழுப்பும் காட்சிகளும் டிரெய்லரில் இருக்கின்றன. டீசரில் இடம்பெற்றிருந்த நந்தினி – குந்தவை Face-off டிரெய்லரில் இடம்பெறவில்லை.
கோடியக்கரை கடற்கரையில் நந்தினி இருக்கும் காட்சிகள், பல்லக்கின் திரை விலக்கும் காட்சிகள், பெரிய பழுவேட்டரையரிடம் பேசும் காட்சிகள், மீன் சின்னம் பொருத்திய வாளுடன் இருக்கும் காட்சிகள் என நந்தினி கேரக்டர் பல இடங்களில் பார்க்க முடிகிறது. அதேபோல், பாண்டியன் தலையைக் கொய்ய அவர் பதுங்கியிருக்கும் நந்தினி வீட்டின் கதவை ஆதித்த கரிகாலன் திறக்கும் காட்சியும் இருக்கிறது. அரியணையை ஒருவித ஏக்கத்தோடு நந்தினி பார்க்கும் காட்சியோடு டிரெய்லரை முடித்திருப்பது அட்டகாசம்.
பொன்னியின் செல்வன் நாவல் படிச்சிருக்கீங்களா… டிரெய்லர் உங்க எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு பூர்த்தி செஞ்சிருக்கு… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!