கொலை வழக்கொன்றில் தேடப்படும் குற்றவாளியாக ஒலிம்பிக் மெடலிஸ்டான சுஷில் குமார் டெல்லி போலீஸால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது?
சுஷில் குமார்
டெல்லி பார்போலா பகுதியைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார். இவர் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். அதேபோல், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுஷில் குமார், சர்வதேச சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கம் வென்றிருக்கிறார். இவர், 23 வயதான சாகர் ராணாவைத் தாக்கிக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. சாகர் ராணா, மல்யுத்தத்தில் முன்னாள் ஜூனியர் சாம்பியனாவார்.
சாகர் ராணா
மல்யுத்தத்தின் 97 கிலோ கிரோகோ – ரோமன் பிரிவில் போட்டியிடுவதை வழக்கமாக வைத்திருந்த சாகர் ராணா, சுஷிலில் மாமா சத்பால் சிங் நடத்தும் டெல்லி சஹட்ரசால் ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார். அதேபோல், இவர் மைதானத்துக்கு அருகில் இருக்கும் மாடல் டவுன் பகுதியில் சுஷிலுக்குச் சொந்தமான வீட்டில் நண்பர்களுடன் குடியிருந்து வந்திருக்கிறார். ஆனால், பல மாதங்களாக சாகர் ராணாவால் வாடகை கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சாகர் ராணாவையும் அவரது நண்பர்களையும் வீட்டைக் காலிசெய்ய சுஷில் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டைக் காலி செய்த சாகர், சுஷீலை விமர்சித்ததாகச் சொல்கிறார்கள். இதனால், சாகர் ராணா மீது சுஷில் கோபத்தில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
மே 4-ம் தேதி என்ன நடந்தது?
சஹட்ரசால் மைதானத்தில் பார்க்கிங் பகுதியில் சாகர் ராணா மற்றும் அவரது நண்பர்களான சோனு மஹால், அமித் குமார் ஆகியோரை 20 பேர் கொண்ட குழு சூழ்ந்துகொண்டு ஹாக்கி மட்டை, பேஸ்பால் பேட் ஆகியவை மூலம் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. 4-ம் தேதி இரவு நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த சாகர் ராணா உயிரிழந்தார். அவரது நண்பர்களான சோனு, அமித் இருவரும் பி.ஜே.ஆர்.எம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து பேசிய டெல்லி வடமேற்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் குரிபால் சிங், `மைதானத்தின் பார்க்கிங் பகுதியில் சுஷில் குமார், அஜய், பிரின்ஸ் தலால், சோனு, சாகர், அமித் உள்ளிட்டோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைலகப்பாக மாறியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது’ என்றார். சம்பவம் தொடர்பாக தொடர்புடையவர்களிடம் டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியிருக்கிறது. காயமடைந்த சோனு மஹால், டெல்லியின் பிரபல ரௌடி கலா ஜதேடியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்கிறது டெல்லி போலீஸ் வட்டாரம். கலா, பல்வேறு திருட்டி, கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்.
மே 4-ம் தேதி சஹட்ரசால் மைதானத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாலை 2 மணியளவில் புகார் வந்திருக்கிறது. இதையடுத்து, சம்பவ இடத்தில் தொடர் விசாரணை மேற்கொண்ட போலீஸார், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்திருக்கிறார்கள்.
தேடப்படும் குற்றவாளி
இந்த விவகாரம் தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்து ஐந்து வாகனங்கள், 5 குண்டுகளுடன் கூடிய டபுள் பேரல் துப்பாக்கி போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். சம்பவத்துக்குப் பிறகு ரிஷிகேஷ், ஹரியானாவுக்குச் சென்ற சுஷில் மீண்டும் டெல்லி திரும்பியிருக்கிறார். போலீஸ் கைதுக்கு அஞ்சி, டெல்லியில் தொடர்ச்சியாக அவர் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து, சுஷில் குமாரைத் தேடப்படும் குற்றவாளியாக மே 9-ம் தேதி இரவில் அறிவித்தது டெல்லி போலீஸ். தொடர்ந்து அவரிடம் இருப்பிடம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த சுஷில் குமாரின் நண்பர் பிரின்ஸ் தலால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது இந்திய மல்யுத்தத் துறைக்கு சர்வதேச அளவில் களங்கம் விளைவித்துவிட்டதாக இந்திய மல்யுத்த சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
Also Read – சென்ட்ரல் விஸ்டா திட்டம் – நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை! #FullDetails