வீகனிசம் அல்லது தமிழில் நனி சைவத்தினர் என்று அழைக்கப்படுபவர்கள் சைவ உணவுப் பழக்கத்தோடு சேர்த்து விலங்குகளிடம் இருந்து தயாரிக்கப்படும் பால் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட தயிர், சீஸ், பன்னீர் போன்ற பொருள்களையும் விலங்குகளிடம் இருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற பொருள்களையும் தவிர்ப்பவர்கள். வீகனிசம் டயட் கடை பிடிப்பவர்களி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அமுல் நிறுவனமானது பசும் பால் உற்பத்தியில் இருந்து வீகன் பால் உற்பத்திக்கு மாற வேண்டும் என விலங்குகளின் நல்வாழ்வுக்காக செயல்படும் பீட்டா நிறுவனம் கோரிக்கை விடுத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வீகன் பால் என்றால் என்ன?
வீகன் பால் என்பது உயிரினங்களிடம் இருந்து பெறாமல் முழுவதுமாக தாவரங்களிடம் இருந்தே தயாரிக்கப்படுவது. இதனை சைவப் பால் என்றும் அழைப்பார்கள். இதுவும் சாதாரண பாலின் சுவை மற்றும் குணங்களை ஒத்திருக்கிறது. இதில் இருந்தும் பல பொருள்களை தயாரிக்கலாம் என்று கூறப்படுகிறது. பால்களைப் பெற உயிரினங்களைக் கொடுமைப்படுத்துவதுதான் இந்த வீகன் பால் முறையை நனி சைவத்தினர் பரிந்துரைக்க காரணம் என கூறுகின்றனர். விலங்கில் இருந்து பெறப்படும் பால் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு வீகம் பால் பெரிதும் உதவுகின்றன. உயிரினங்களில் இருந்து கிடைக்கும் பால் பொருள்களுக்கு சைவப் பால் ஆரோக்கியமான மாற்று என பலரும் கருதுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பாலை பருகலாம் என பரிந்துரைக்கின்றனர்.
வீகன் பால் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
சோயா பீன்ஸில் இருந்து சோயா பால் பிரித்தெடுக்கப்படுகிறது. மிகவும் அதிகமான நபர்கள் இந்த சோயா பாலை விரும்புகின்றனர். இதில் புரதம், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துப் பொருள்கள் உள்ளன. சைவப் பாலில் பெரும்பான்மையானவர்கள் விரும்பும்பால் பாதாம் பால். இதில் அதிகளவு வைட்டமின்கள் டி, ஈ மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளன. சமையலில் பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்தும் பால், தேங்காய்ப்பால். இதில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. வைட்டமின்கள் டி, பி 2, பி 12 மற்றும் கால்சியம் ஆகிய சத்துகள் இதில் அதிகம் உள்ளன.
லாக்டோஸ் அலர்ஜிகள் உள்ளவர்களுக்கு அரிசிப்பால் மிகச்சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஒப்பீட்டளவில் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. ஆனால், கொழுப்பு, புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் குறைவாகவே உள்ளன. டீ மற்றும் காபியில் பயன்படுத்த இந்த அரிசிப்பால் நல்ல மாற்றாக இல்லை. எனினும், ஓட்ஸ், சூப் மற்றும் சாஸ்களீல் இந்தப் பால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முந்திரியில் இருந்து தயாரிக்கப்படும் பாலும் சமையல் மற்றும் பேக்கிங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது. கிரீமியான சுவையைச் சேர்க்க இவை பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர வாழைப்பழம், வேர்க்கடலை, ஓட், ஹேசல்நட் மற்றும் சூரிய காந்தி போன்றவற்றில் இருந்தும் சைவப் பால் தயாரிக்கப்படுகிறது.
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு வீகனில் மாற்று என்ன?
சோயா பாலில் டீ அல்லது காபி போன்றவை போடப்படுகிறது. இவற்றுக்கு பதிலாக கிரீன் டீ அருந்தலாம். இதன்வழியாக காபி மற்றும் டீ அருந்துவதை நிறுத்தி விடலாம். சோயா பாலில் இருந்து பால் அல்லது தயிர் தயாரிக்கப்படுகிறது. முந்திரி, பாதாம், நிலக்கடலை ஆகிவற்றின் பாலில் இருந்து வெண்ணெய் அல்லது நெய் தயாரிக்கப்படுகிறது. முந்திரிப்பாலில் இருந்து சீஸ் மற்றும் சோயா பாலில் இருந்து பன்னீர் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. நமது அன்றாட வாழ்க்கையில் இதனை நடைமுறைப்படுத்துவது எளிது என்றும் இந்த உணவு முறையுடன் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்னைகளை தவிர்க்கலாம் என்றும் கூறுகின்றனர்.
பீட்டா சொல்வது…
விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்பதன் அடிப்படையில் பீட்டாவானது வீகன் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறது. அதாவது, விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் எதையும் நாம் சாப்பிடக்கூடாது. மாற்றாக அனைத்து மக்களும் வீகன் பாலை பயன்படுத்த வேண்டும் என்கிறது.
அமுல் நிறுவனத்தின் ரிப்ளை…
அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி தனது ட்விட்டர் பக்கத்தில், 100 மில்லியன் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை 75 ஆண்டுகளாக விவசாயிகளின் பணத்தால் வளர்ந்து நிற்கும் அமுல் நிறுவனம் பறிக்க வேண்டும் என்றும் நடுத்தர குடும்பங்களால் வாங்க முடியாத சோயா பாலை தாயாரிக்க வேண்டும் என்றும் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து வீகன் பால் தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.
Also Read : Smoking Quit பண்றது சாத்தியம்தான்… 7 டிப்ஸ்! #NoTobaccoDay