சன்பிக்சர்ஸ் அறிவிப்பை வெளியிடும் முன்பு ரஜினியின் அடுத்த படம் குறித்து ஆயிரத்தெட்டு வியூகங்கள் ரெக்கைக் கட்டி பறந்தன. முதலில் ரஜினியை ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் இயக்கப்போவது தேசிங்கு பெரியசாமி, அடுத்து சன்பிக்சர்ஸ் சார்பில் கார்த்திக் சுப்புராஜ், அதன்பின் இளையராஜா தயாரிப்பில் பால்கி, அப்புறம் கே.எஸ்.ரவிக்குமார் என ஆளாளுக்கு ஆரூடம் கணித்தனர். கடைசியில் ரஜினி, கலாநிதி, அனிருத், நெல்சன் கூட்டணி உருவாகி அறிவிப்பும் வெளிவந்து விட்டது. அதுசரி என்னதான் நடந்தது…
தேசிங்கு பெரியசாமி சொன்ன கதையைக் கேட்டு ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடம் அனுப்பினார், ரஜினி. தேசிங் பெரியசாமியிடம் முழுக்கதையையும் பொறுமையாக கேட்டனர். முதல் படத்தை ஸ்மால் படஜெட்டில் எடுத்த தேசிங்கு, ரெண்டாவது படத்துக்கு சொன்ன பட்ஜெட்டைக் கேட்டு பல்ஸ் எகிறியது. குறிப்பாக ப்ளாஷ் பேக் காட்சிக்காக மட்டும் அவர் சொன்ன பட்ஜெட் கேட்டு தயாரிப்பு தரப்புக்கு பகீரென்றது. கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை ரஜினி, சன் பிக்சர்ஸ் தரப்புக்கு பிடித்தாலும் ஏனோ தள்ளிப் போனது. இளையராஜா மேல் இனம்புரியாத காதலால் அமிதாப் பச்சன் படத்துக்கும் அவரையே இசையமைக்க வைத்தார், பால்கி. ரஜினி வயதுக்கு ஏற்ற சப்ஜெக்ட் ஒன்றை பால்கி சொல்ல ராஜாவுக்கும், ரஜினிக்கும் பிடித்துப் போனது. இருந்தும் ஏனோ கை கூடாமல் போனது.
இதற்கிடையில்… ‘ காலா ‘ படத்துக்கு முன்பே வெற்றிமாறன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்தது. அந்த விஷயத்தை ‘ காலா ‘ ஆடியோ விழாவில் பகிரங்கமாக அறிவித்தார், ரஜினி. அப்போது ஏனோ ரஜினி , வெற்றிமாறன் காம்பினேஷன் கைவிட்டு போனது. இப்போது ரஜினி – நெல்சன் கூட்டணிக்கு முன்பாகவே வெற்றிமாறன் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க திட்டமிட்டு இருந்தார் என்பதுதான் வெளியே தெரியாத செய்தி. முன்பு சொன்ன கதையை மேலும், மேலும் மெருகேற்றி வெற்றி சொல்ல அசந்து போனார், ரஜினி. இந்த இருவர் இணையும் படத்துக்கு போனி கபூர் தயாரிப்பதற்கு முன்வந்தார். வெற்றியை ஒப்பந்தம் செய்ய ரஜினி சொன்ன பெரிய தொகையை எடுத்துக் கொண்டு போனார், போனி கபூர்.
ரஜினிக்கும் , தனுஷுக்கும் மனஸ்தாபம் என்று வெளியே செய்திகள் அலையடிக்கும் நேரத்தில், தனுஷ் வெற்றிக்கு போன் செய்து, `ரஜினி சாருக்கு நீங்க சொன்ன கதை சூப்பர். அதுல அவர் நடிச்சா சூப்பரா இருக்கும். தயவுசெய்து மிஸ் பண்ணாதீங்க வெற்றி’ என்று தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதோடு தினசரி போன் செய்தும் இதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்திருக்கிறார் தனுஷ். அதே சமயம் சூரி ஹீரோவாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வரும் விஜய் சேதுபதியிடம் ரஜினி பட கதையை வெற்றி சொல்லி இருந்தாராம். இந்தக் கதையில் ரொம்பவும் இம்ப்ரஸ் ஆன சேதுபதி, வெற்றிக்கு அடிக்கடி போன் செய்து, ‘சார் அந்தக் கதை அப்படியே என் மைண்ட்ல ஓடிகிட்டே இருக்கு. ரஜினி சார் நடிச்சா அருமையா இருக்கும் . நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன் சார்… ‘ என்று உரிமையோடு சொல்லிக் கொண்டே இருத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
ரஜினி படம் குறித்து தனுஷ், சேதுபதி பேசி வந்த நிலையில்தான் வெற்றியை அட்வான்ஸ் பணத்தோடு சந்தித்த போனி கபூரிடம், ‘ சார் உங்க தயாரிப்பில் , ரஜினி சார் படத்தை இயக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. சூர்யா நடிக்கிற ’வாடி வாசல் ‘ படத்துக்கு முன்னாடியே அட்வான்ஸ் வாங்கிட்டேன். இது முடிஞ்சதும் அடுத்த படம் நாம சேர்ந்து நிச்சயம் பண்ணலாம். இப்போதைக்கு ஸாரி சார்!’ என்று அவரிடம் தயக்கமும் பவ்யமுமாக சொல்லி அனுப்பி விட்டாராம், வெற்றி.
சினிமா ஒரு சென்டிமென்ட் பூமி. சூர்யா நடிக்கும் படத்தை இயக்க முதலில் அட்வான்ஸ் வாங்கி ஒப்பந்தம் ஆன டைரக்டர்கள் பலருக்கு ரஜினி படத்தை இயக்கும் அதிர்ஷ்டக் காற்று அடித்துவிடும். கார்த்தி ஹீரோவாக நடித்த ‘மெட்ராஸ் ‘ திரைப்படம் பெரிதாக பேசப்பட்டது. அதனால் அப்போதே சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதற்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார், பா.ரஞ்சித். இடையில் ரஜினி பட வாய்ப்பு செளந்தர்யா கரங்கள் மூலம் காலிங் பெல் அடித்ததால் சூர்யா தரப்பு அனுமதியோடு’ கபாலி ‘ படத்தை இயக்க கபாலென சென்றார், ரஞ்சித்.
அடுத்து ‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு சூர்யாவை இயக்க சிவாவை ஒப்பந்தம் செய்திருந்தது, சூர்யா தரப்பு. சிவாவுக்கு ரஜினி அழைப்பு விடுக்க ‘அண்ணாத்த’ படத்தை இயக்க சூர்யாவின் ஒப்புதலோடு போனார், சிவா. இப்போது வெற்றி மாறன் விஷயத்திலும் அதே போல் சூர்யா பட ஒப்பந்தம், ரஜினி பட அழைப்பு. ஆனால், இந்த முறை முடிவு மட்டும் வித்தியாசமாக இருந்தது. சூர்யா படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்தை நெக்ஸ்ட் இயக்குவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார் வெற்றி மாறன்.
Also Read – கார்த்திக் சுப்புராஜ் முதல் லோகேஷ் கனகராஜ் வரை… ஃபேன் பாய் மொமண்ட் இயக்குநர்கள்!