இந்திய வனப்பணித் தேர்வை முதல்முறையாக எழுதிய திண்டுக்கல் மாணவி திவ்யா தேசிய அளவில் 10-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதித்திருக்கிறார்.
இந்திய வனப்பணித் தேர்வு
IFS எனப்படும் தேசிய வனப்பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இதில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கலிக்கநாயக்கன் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா என்ற மாணவி தமிழகத்தில் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார். இந்தத் தேர்வில் தேசிய அளவில் 10-வது இடம் பிடித்திருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்கும் இவரது தந்தை நடராஜன் கீரனூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தாய் சந்திராமணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக இருக்கிறார்.
இந்தத் தம்பதியின் மூத்த மகளான திவ்யா, இந்திய வனப்பணித் தேர்வுக்காகக் கடந்த 3 ஆண்டுகளாகத் தயாராகி வந்திருக்கிறார். முதல்முறையாகத் தேர்வெழுதிய நிலையில், தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதித்திருக்கிறார். தேர்வில் சாதித்த மாணவி திவ்யாவுக்கு அவரது பெற்றோர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர். அவருக்கு தி.மு.க எம்.பி கனிமொழி, “மாநிலத்தில் முதலிடமும் இந்திய அளவில் 10-ம் இடமும் பெற்று, இந்திய வனப்பணி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற திவ்யா அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்’’ என்று வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
தேர்வில் சாதித்த மாணவி திவ்யா கூறுகையில், “தமிழக அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பணியில் தொடர்ந்து நேர்மையாகவும் உண்மையாகவும் பணியாற்ற விரும்புகிறேன். யுபிஎஸ்இ நடத்திய இந்தத் தேர்வில் வெற்றிபெற உதவிய பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலங்களில் யுபிஎஸ்இ தேர்வில் தமிழகத்தில் இருந்து அதிக அளவு மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்று, மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்’’ என்றார்.
Also Read – முள் இல்லா அன்னாசி விவசாயம் – அசத்தும் மலேசியத் தமிழர்!