அலைகள் ஓய்வதில்லைக்கு கதை எழுதினது, அமைதிப்படையை இயக்குனது, நடிப்புக்காக நாயகன் கமல்கூடவே தேசிய விருதுக்காக போட்டி போட்டதுனு அவர் பண்ண சம்பவங்கள் தாறுமாறு ரகம். சினிமா வாழ்க்கையில அவர் பண்ண சம்பவங்களைத்தான் இந்த வீடியோல பார்க்கப் போறோம்.
இயக்குநர் பாரதிராஜாவோட கல்லுக்குள் ஈரம் ஷூட்டிங் ஸ்பாட் அது. ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கு. ரெண்டு அசிஸ்டெண்ட்கள் சுத்தி வேலை பார்த்துக்கிட்டிருக்காங்க. அருவி ஓடிட்டிருக்கு. அருவிக்குள்ள ஒரு அசிஸ்டெண்ட் நின்னு கன்ட்யூனிட்டி பார்க்குறார். அப்போ தண்ணீரோட வேகத்தால அவர் தண்ணீருக்குள்ள மூழ்குறார். கையில் வைத்திருந்த ஷூட்டிங் குறிப்பு புத்தகம் தண்ணீர்ல விழுந்து அழிஞ்சிடுச்சு. அந்த உதவி இயக்குநரோ பக்கத்துல இருந்த இன்னொரு உதவி இயக்குநர்கிட்ட ‘சார்கிட்ட சொல்லிடாதய்யா, எனக்கு முதல்படம், வேலையை விட்டு தூக்கிடுவாரு’னு கெஞ்ச, பரவாயில்ல வாய்யா பார்த்துக்கலாம்னு சொல்லி இன்னொரு நண்பர் அழைச்சுக்கிட்டு போறார். மறுநாள் அந்த புத்தகத்தோட நெகட்டிவ்ஸ் சென்னைக்கு போகணும். தண்ணீருக்குள்ள விழுந்த நண்பர், அந்த ஒன்றரை நாள்ல 27 நாள் ஷூட்டிங்கையும் நியாபகம் வச்சு, ஓகே ஷாட்ஸை பிரிச்சு, எழுதி முடிச்சு இன்னொரு அசிஸ்டெண்ட் நண்பர்கிட்ட கொடுக்கிறார். அவரும் வாங்கிட்டு சென்னை வந்து பார்க்கிறார். ஒரு ஷாட்கூட மிஸ் ஆகலை. எல்லாமே புத்தகத்தில் சரியா இருந்தது. அவ்ளோ அசாத்தியமான நியாபக சக்தி வச்சு எழுதுன, அந்த அசிஸ்டெண்ட் டைரக்டர் பேரு மணிவண்ணன். (அந்த புத்தகத்தை சென்னைக்கு வாங்கிட்டு வந்த இன்னொரு அசிஸ்டெண்ட் மனோபாலா.) அதுக்கப்புறம் அலைகள் ஓய்வதில்லைக்கு கதை எழுதினது, அமைதிப்படையை இயக்குனது, நடிப்புக்காக நாயகன் கமல்கூடவே தேசிய விருதுக்காக போட்டி போட்டதுனு அவர் பண்ண சம்பவங்கள் தாறுமாறு ரகம். சினிமா வாழ்க்கையில அவர் பண்ண சம்பவங்களைத்தான் இந்த வீடியோல பார்க்கப் போறோம்.
தெளிவான அரசியல்!
இயக்குநர் மணிவண்ணன்னு சொன்ன உடனேயே கொங்கு ஸ்லாங்ல நக்கலும், நையாண்டியும் கலந்த பேச்சுதான் நம்ம நியாபகத்துக்கு வரும். எல்லோருக்கும் அரசியல் புரிதல் இருக்கும். அதிலும் இரண்டு ரகம். தன்னோட தொழில் சார்ந்த விஷயங்கள்ல அந்த அரசியலை வெளிப்படுத்தாதவர்கள் முதல் ரகம். ரெண்டாவது, தன் தொழில்லயும் அரசியல் தெரியுற மாதிரி நடந்து கொள்வார்கள். இதில் மணிவண்ணன் ரெண்டாவது ரகம். மணிவண்ணனோட அரசியங்குறது படம் மொத்தமும் பிரிவினை பேசிட்டு, எரியுற தேசியக் கொடியை ஹீரோ அணைச்சு அப்ளாஸ் வாங்குற அரசியல் இல்லை. மணிவண்ணனோட அரசியல் உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கான அரசியல். அது தொடர்பான படங்களை உருவாக்குறதுல அவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது.
மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழ அரசியல்னு பிடிப்பு கொண்ட மணிவண்ணன் கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்தவர். கோவை அரசுக் கல்லூரியில் பி.யூ.சி. படிச்ச காலத்துல இவரோட கல்லூரி நண்பர் சத்யராஜ். கல்லூரி நாட்கள்ல ஷியாம் பெனகல், மிருணாள் சென்னு மலையாளப் படங்கள் பார்த்து இன்ஸ்பையர் ஆனவர், தமிழில் ஒரே மாதிரி படங்கள் வருவதைப் பார்த்து சலிப்படைந்தார். அந்த நேரத்துலதான் ’16 வயதினிலே’, ’முள்ளும் மலரும்’, ’உதிரிப்பூக்கள்’ உள்ளிட்ட பல படங்கள் வந்தது. இதைப் பார்த்து அவருக்குள்ளும் சினிமா ஆசை வேர்விட சென்னைக்கு வந்திருக்கிறார்.
இயக்குநர் பாரதிராஜாவுக்கு, ‘கிழக்கே போகும் ரயில்’ பற்றி எழுதிய விமர்சனக் கடிதம் வழியே அவரது அறிமுகத்தை வாங்கிய மணிவண்ணன் அவரிடமே உதவி இயக்குநராகச் சேர்ந்தார். ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ படங்களின் கதை வசனம் எழுதிய மணிவண்ணன், ஆகாய கங்கை’ படத்தோட வசனத்தை எழுதியதோட அதோட திரைக்கதையை இயக்குநர் மனோபாலாவோட இணைஞ்சு எழுதினார்.
மணிவண்ணன் பல படங்களுக்குக் கதை எழுதி இருந்தாலும், அவரோட முதல் படமான கோபுரங்கள் சாய்வதில்லை படத்துக்கு கதை கலைமணி எழுதியிருந்தார். அதுல அருக்காணிங்குற ஐகானிக் கேரெக்டரை அறிமுகப்படுத்தியிருந்தார், மணிவண்ணன். ஹீரோயின்களோட கெட்டப்ல இன்னைக்கும் நியாபகம் வச்சுக்கிற மாதிரி இருக்குறதுல அருக்காணி கேரெக்டரும் உண்டு. எளிமையான கதை, சுவாரசியமான திரைக்கதைனு உணர்வுபூர்வமான காட்சிகள்னு தன்னோட இயக்குநர் பயணத்தை மிகத் தெளிவான புரிதலோட தொடங்கினார். அடுத்தடுத்த படங்கள் இயக்கினாலும், மிகப் பெரிய பிரேக் கொடுத்தது, நூறாவது நாள் படம்தான். க்ரைம் திரில்லர் ஜானரில் இயக்கி மிரட்டியிருந்தார், மணிவண்ணன். சற்றும் குறையாத நடிப்பைக் கொடுத்து படத்தைத் தாங்கி பிடித்திருந்தார், சத்யராஜ்.
ஒரே தீபாவளிக்கு ரெண்டு படங்கள்!
1986-ம் வருஷம் ஒரே தீபாவளி நாள்ல ‘விடிஞ்சா கல்யாணம்’, ’பாலைவன ரோஜாக்கள்’னு ரெண்டு படங்கள் வெளியாச்சு. ரெண்டு படங்கலேயும் ஜானர் வேற, வேற ஆனா, சத்யராஜ் ஹீரோ, மணிவண்ணன் இயக்கம். ரெண்டு படங்களும் 100 நாட்கள் கடந்து ஓடின. 'பாலைவன ரோஜாக்கள்’ மு.கருணாநிதி வசனம் எழுதி உருவான அரசியல் படம். இது மலையாளப் படமான ’வர்தா’வோட ரீமேக். ’விடிஞ்சா கல்யாணம்’ ஒரு திரில்லர். அதுல ஆஃபாயில் ஆறுமுகம்னு வித்தியாசமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிச்சிருந்தார். ஒரே நாள், ஒரே இயக்குநர் இரண்டும் வெற்றிங்குறதை அதுவரைக்கும் தமிழ்சினிமா பார்த்ததில்லை, இனி பார்க்க முடியுமாங்குறதும் சந்தேகம்தான்.
தேசிய விருதுக்காக கமலுடன் போட்டி!
மணிவண்ணன் இயக்கின படங்கள்ல ‘இனி ஒரு சுதந்திரம்’ படம் ரொம்பவே முக்கியமானது. மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்படாமல் போனாலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதுப் போட்டியில் நாயகன் வேலுநாயக்கருடன் களத்தில் மோதிய ஹீரோ கதாபாத்திரம் இது. இதைக் கச்சிதமாக இயக்கியிருந்தார், மணிவண்ணன். விடுதலை பெற்ற நாட்டின் அரசியல் எவ்வளவு பாழ்பட்டுப்போயிருக்கிறது என்பதைக் குறித்து அவருக்கு எழுந்த ஆதங்கத்தில் உருவான படம் அது. விடுதலைப் போராட்டத் தியாகியாக நடிகர் சிவகுமார் நடித்திருப்பார். அதில் மணிவண்ணன் பேசியிருந்தது நுட்பமான அரசியல்.
அரசு கையகப்படுத்திய நிலத்தோட பணத்துக்காக, வட்ட வடிவ கண்ணாடி, கையில் மஞ்சள் பை, குடைனு அவர் கலெக்டர் ஆபீஸ்க்கு அலையுறதை மணிவண்ணன் வசனமே இல்லாம காட்சியாக்கியிருப்பார். “உண்மை ஊசலாடிக்கிட்டிருக்கப்போ அதைக் காப்பாத்துறதுக்கு உணர்ச்சியாவது இருக்கணும். உணர்ச்சியே செத்துப்போனதுக்கப்புறம் உண்மையை யார் காப்பாத்துறது”ங்குறது மாதிரியான வசனங்கள் மூலமா தைரியமான அரசிய பேசியிருப்பார். முக்கியமா கல்வி வியாபாரமாகின அவலத்தையும் அதுல சொல்லியிருப்பார். அடுத்ததாக அவரை வெகுஜன மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது அமைதிப்படை தான்.
அல்வா. அமாவாசை.. அமைதிப்படை..!
வசனங்கள் அதிகபட்சமாக ஒரு வரியில்தான் இருக்கும். ஆனால், ஒவ்வொரு வசனமும் குத்தீட்டியாக பாயும். இந்த மேஜிக்கையும் செய்து காட்டியது மணிவண்ணன் – சத்யராஜ் காம்போதான். அமைதிப்படை படம் ரிலீஸ் ஆகும்போது இன்றைய சென்சார் கட்டுப்பாடுகள் இருந்திருந்தால், அமாவாசையின் சிங்கிள் பிரேம் கூட வெளியே வந்திருக்காது. அமாவாசை கதாபாத்திரம் பேசியது எளிய மக்கள் புரிந்து கொள்ளும்படியான அரசியல். முதல்முதலாக எலெக்ஷனில் ஜெயிக்குறப்போ சேர்ல அமாவாசை உட்கார்ற சீன் இன்னைக்கும் பார்க்குறதுக்கு எபிக்கா இருக்கும். அன்னைக்கு அமைதிப்படை பேசுன அரசியல் இன்னைக்கு அரசியலுக்கும் பொருத்தமாவே இருக்கும். மேலோட்டமா பார்த்தா அரசியல் படம்னாலும், மையமா குடும்பத்தை வச்சுத்தான் அதைச்சுத்தி அரசியலைப் பேசியிருப்பார், மணிவண்ணன்.
கம்யூனிசம் ரத்தத்துல ஊறிப்போன ஒருத்தரால மட்டுமே இந்த சம்பவத்தை பண்ண முடியும். அப்படி ஒரு சம்பவத்தை வட இந்தியாவுல பண்ணியிருக்காரு. அது என்னனு யோசிச்சு வைங்க, அதை வீடியோவோட கடைசியில சொல்றேன்.
நடிகராக!
‘கொடிபறக்குது’ படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார், பாரதிராஜா. கில்பர்ட் தனசேகரன்ங்குற கேரெக்டர்ல மிரட்டியிருப்பார். என்னும் அந்த வேடத்துக்கு பாரதிராஜாதான் குரல் தந்திருப்பார். பெரிய மனித போர்வையில் அயோக்கியத்தனங்களில் ஈடுபடும் கதாபாத்திரம் அது. முதல்படத்துலயே பெர்பார்மன்ஸைக் கொடுத்து பின்னி எடுத்துருப்பாரு. அடுத்ததா அமைதிப்படையில அமாவாசை கூடவே வர்ற அரசியல்வாதி கேரெக்டர்லயும் சிறப்பா நடிச்சிருப்பாரு. ஆனா, இவரோட வாழ்க்கையில நல்லா நடிச்சதா இவர் சொல்லிக்கிறது, சங்கமம் படத்துல நாட்டுப்புற கலைஞர் கதாபாத்திரம்தான். கலைக்காக உயிரைவிடும் கேரெக்டருக்கு நியாயம் செய்திருப்பார். அதேபோல மணிவண்ணன், கவுண்டமணி, சத்யராஜ் சேர்ந்து ‘தாய்மாமன்’, ‘மாமன் மகள்’னு அடிஜச்ச லூட்டியும், ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’னு கார்த்திக் கூடவும் காமெடியில அதகளம் பண்ணியிருப்பார். யதார்த்தமான நகைச்சுவையில் உச்சத்துக்கு வந்தாலும், காமெடிங்குற தனி ட்ராக்ல பயணிக்க அவர் என்னைக்குமே நினைச்சது இல்ல. நடிக்கிற எல்லா படங்கள்லயும், காமெடி, செண்டிமெண்ட்னு ரெண்டுமே இருக்குற மாதிரி பார்த்துக்குவார். இவரோட நடிப்புக்கு இவரோட ஸ்லாங்கும் ஒரு பலம்னு சொல்லலாம். நடிகனாக அவருடைய இன்ஸ்பிரேஷன் எம்.ஆர்.ராதா.
சினிமா வாழ்க்கை!
இயக்குநர் மணிவண்ணன் சுமார் 10 படங்களைத் தயாரிச்சிருக்கார். 400 படங்களுக்கு மேல நடிச்சிருக்கார். 50 படங்களை இயக்கியிருக்கிறார். அதுல 30 படங்கள் அதிக வசூலை குவிச்ச படங்கள். வெற்றி வந்தப்போ அவர் கர்வம் அடைஞ்சதும் இல்லை, தோல்வி படங்கள் கொடுத்தப்போ ததலைகுனிஞ்சதும் இல்லை. இவர் படங்கள்ல 25 படங்கள் சத்யராஜை வச்சு பண்ணியிருந்தார். அதுல ஜல்லிக்கட்டுல இருந்து அமைதிப்படை வரைக்கும் 12 படங்கள் அதிரிபுதிரி ஹிட். தமிழீழ அரசியலைப் பேசும் படம் ஒன்னு பண்ணனும்னு ஆசைப்பட்டார் மணிவண்ணன். அந்த ஆசை முடியாமலே போயிடுச்சு.
Also Read – எனக்கும் செருப்புக்கும் மட்டுமே தெரியும் கஷ்டம்… யோகி பாபு சக்ஸஸ் ஸ்டோரி!
நோ ஸ்கிரிப்ட் பேப்பர்!
விஜய் மாஸ்டர் ஆடியோ விழாவுல ஸ்கிரிப்ட் பேப்பரை தராமலே இருந்தார் இயக்குநர் லோகேஷ்னு சொல்லியிருப்பாரு. அதை கடந்த 35 வருஷத்துக்கு முன்னாலயே செஞ்சு காட்டினவரு மணிவண்ணன்தான். இவர் ஷூட்டிங்ல டயலாக் பேப்பர்க்கு வெலையே இல்ல. நீ இதை பேசு, இதைப் பேசுன்னே சொல்லி ஷூட்டிங் எடுப்பார். ஆனா, அவுட்புட்ல பார்த்தா படம் வேற ஒரு சினிமாவா இருக்கும். பல இயக்குநர்களுக்கு இவரோட வொர்க் மோடுல நாட்டம் உண்டு. சினிமாவை எளிமையா எடுக்குறது எப்படினு இவரைப் பார்த்துக் கத்துக்குறேன்னு சொன்ன இயக்குநர்களும் உண்டு.
வட இந்தியாவுல ஒரு சம்பவம் பண்ணாருனு சொல்லியிருந்தேன்ல, அது என்னன்னா, நக்சலைட்டுகளின் தலைவராக இருந்த சாரு மஜும்தாரை நேரடியா சந்திச்சு, அவர் கூட கொஞ்ச நாள் இருந்தவர். இது வெளியே தெரியாத மணிவண்ணனோட மறுபக்கம். பணம் அதிகமா கிடைக்குது, அதனால நமக்கு எதுக்குனு அவர் இருந்திடலை. ஏதாவது செய்ய முடியாதா என பல வழிகளிலும் சிந்தனை செய்த சிந்தனைவாதி மணிவண்ணன்.
எனக்கு இவர் நடிப்புல பிடிச்சது ‘மாயாண்டி குடும்பத்தார்’ மாயாண்டி கதாபாத்திரம்தான். உங்களுக்கு எது ஃபேவரெட்னு கமெண்ட்ல சொல்லுங்க.