சி.எஸ்.அமுதன்

தட் நிஜ இளந்தாரிப்பய… சி.எஸ்.அமுதன் சம்பவங்கள்!

சி.எஸ்.அமுதன்… ஸ்பூஃப் ஜானரை வைத்துக்கொண்டு சினிமாவில் இருந்தபடியே சினிமா இண்டஸ்ட்ரீயை கலாய்த்துத் தள்ளிய தரமான சம்பவக்காரர். அவர் செய்த சில பல சம்பவங்களும், அதன் இம்பாக்ட்களுமே இந்த வீடியோ ஸ்டோரி.

தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதினால், அதில் நிச்சயம் இடம்பெற்ற தீரக்கூடிய ஒரு பெயர்… சி.எஸ்.அமுதன். ஆம், தமிழ் சினிமாவில் புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தும் படைப்பாளிகளில் இவர் நிச்சயம் இடம்பெற்றுதான் ஆக வேண்டும். நமக்கு ‘ஸ்பூஃப்’ எனும் ஜானரையே அறிமுகப்படுத்தியதுடன், அதில் இரண்டு படங்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தவர் ஆயிற்றே!

சி.எஸ்.அமுதன்
சி.எஸ்.அமுதன்

மக்களால் கொண்டாடப்படும் படைப்புகளை, மக்களிடையே பாப்புலராக இருப்பனவற்றை, அதன் தரம் மாறாது அப்படியே பிரதியெடுத்து கலாய்ப்பது என்று ‘ஸ்பூஃப்’ ஜானர் படங்களைப் பற்றி சிம்பிளாகச் சொல்லலாம். ஆனால், சினிமாவிலேயே மிகவும் கஷ்டமான – சாலஞ்சிங்கான ஜானர் என்றால், அது ஸ்பூஃப்தான்… காமெடி இஸ் எ சீரியஸ் பிசினஸ்ன்ற மாதிரி.

சரி… முதலில் சி.எஸ்.அமுதன் யார்? அவர் இதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தார்… நாடி நரம்பு ரத்தம் பித்தம் எல்லாத்துலயும் சினிமாவுல ஊறிப்போன ஒருத்தரால தன்னைத் தாக்கிய திரைப்படங்களை கலாய்த்து தாக்க முடியும். யாரு இந்த சி.எஸ்.அமுதன்?

இப்படி பில்டப்போட அவரோட கீழடிய நோண்டப் போனா, ரொம்ப நார்மலான டேட்டாதான் கிடைக்குதுன்றது ஆச்சர்யமே. தமிழ்ப் படம்ன்ற ப்ரோஜகெட்டே ரொம்ப சிம்பிளா ஸ்டார்ட் ஆகியிருக்கு.

சி.எஸ்.அமுதனோட அப்பா ஒரு பேராசிரியர். அம்மா ஸ்கூல் பிரின்சிபல். சோ, டீஃபால்டா படிப்ஸா வளர்ந்தவரு, தன்னோட கரியரா அட்வர்டைசிங்கை தேர்ந்தெடுத்தார். அவரோட அட்வர்டைஸிங் ஏஜென்சில நாற்பது, ஐம்பது முக்கியமான விளம்பரங்கள் உருவாகியிருக்கு. அங்கிருந்துதான் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீயோட தொடர்பு கிடைக்குது. தானும், தன் டீமும் ரெடி பண்ற ஸ்கிரிப்டை கோலிவுட்ல இருந்து டைரக்டர்ஸ்கிட்ட கொடுத்து டைரக்ட் பண்ணி கொடுக்கச் சொல்வாங்க. அதுல ஏ.எல்.விஜய், கே.வி.ஆனந்த் எல்லாம் முக்கியமானவங்க. ஸ்கிரிப்ட் எழுதுறது, தன் மனசுல ஓட்டிப் பார்த்த விஷுவலை அடம்புடிச்சி கேட்டு வாங்குறதுல அமுதன் எக்ஸ்பர்ட்.

அவரும் அவரோட நண்பர் சஷிகாந்தும் அடுத்து என்னன்னு கேஷுவலா பேசிட்டு இருந்தப்ப, ‘டெலிவிஷன் பக்கம் போலாம்… எதாவது ஸ்பூஃப் ப்ரோக்ராம் பண்ணலாம்’ன்ற ரேஞ்சுல பேச்சு ஸ்டார்ட் ஆகி, ‘ஸ்பூஃப்’ மூவியே எடுத்துடாமே என்கிற ஐடியாவில் முடிஞ்சுது. அமுதன் நண்பர் சஷிகாந்த் யாருன்னு பார்த்தா துரை தயாநிதியோட ஃப்ரெண்டு. ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு ஃப்ரெண்டுன்ற ஃபார்முலாவுல பேச்சுவார்த்தை நடந்துருக்கு. ‘ஸ்பூஃப்’ மூவின்னு சொன்னதும், ஓகே ட்ரை பண்ணலாம்னு துரை தயாநிதி தரப்பு ஓகே சொல்ல, அடுத்த சில நாட்களிலேயே ஒர்க் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.

சி.எஸ்.அமுதன்
சி.எஸ்.அமுதன்

அமுதனோட ஸ்ட்ரென்த்தே ஸ்கிரிப்ட் ரைட்டிங்தான். ‘தமிழ்ப்படம்’ முதல் பாகத்தோட முழு ஸ்கிரிப்டையும் வெறும் மூணே நாள்ல எழுதி முடிச்சிட்டார். ஆனா, முதல் நாள் ஷூட்டிங்ல இருந்துதான் டைரக்‌ஷன் கத்துக்க ஆரம்பிச்சார். யெஸ்… அவர் யார் கிட்டயும் அசிஸ்டண்டா ஒர்க் பண்ணது இல்லை, சினிமாவை படிச்சதும் இல்லை… ஜஸ்ட் விளம்பர ஷூட்டிங்கை மட்டும் ஓரமா நின்னு பார்த்த அனுபவம் மட்டும்தான் இருந்துச்சு. ஆனா, தன்னோட முதல் படத்துலயே சினிமாவை கத்துகிட்டது மட்டுமில்லாம, தமிழ் சினிமா வரலாற்றின் புரட்சிகர ஸ்பூஃப் சினிமாவையும் எடுத்து தன்னோட திறமையை வெளிப்படுத்தி சம்பவத்தை நிகழ்த்தினார் நம் சம்பவக்காரர்.

தமிழ்ப்படம் பாகம் ஒண்ணு ரிலீஸ் ஆகுது. அந்த டீமே எதிர்பார்க்காத அளவுக்கு செம்ம ரெஸ்பான்ஸ். ஸ்பூஃப் ஜானர் மூவி புதுசா இருந்தாலும், இந்த கான்சப்ட்ல லொல்லு சபா பார்த்த அனுபவம் இருந்ததாலே, தமிழ்ப்படத்தோட ரிச்னஸை மக்கள் உள்வாங்கிக்கிட்டாங்க. ஒரிஜனல் பட காட்சிகளின் அதே தரத்தில், கொஞ்சம் கூட க்வாலிட்டியும் பெர்ஃபார்மன்ஸும் மிஸ் ஆகாம அச்சு அசலா அதே மாதிரி எடுத்து கலாய்க்கப்பட்டதற்கு எடுத்துக்கொண்ட எஃபர்ட்டை புரிஞ்சிகிட்டு ரசிச்சி சிரிச்சாங்க. தளபதி ‘ரமணா’ சீன் எல்லாம் பார்த்து மிரண்டுப் போய் எஞ்சாய் பண்ணாங்கன்னே சொல்லலாம்.

மக்கள் பாசிட்டிவா ரிசீவ் பண்ணினாலும், கோடம்பாக்கத்துல ஸ்டார்கள் முதற்கொண்டு டாப் டைரக்டர்ஸ் வரைக்கும் பலருக்கும் காதுல புகை வந்துட்டு இருந்துச்சாம். ஆனால், அந்தப் புகை காதுல இருந்து வெளியே வராதபடி அவங்களே பஞ்சு வெச்சு அடைச்சிகிட்டதாவும் பேச்சு இருந்தது. அதுக்கு காரணம் இல்லாம இல்லை… படத்தோட ப்ரொட்யூசர்… அப்போ முதல்வரா இருந்த கலைஞரோட பேரன்களில் ஒருவர். சோ… எல்லாரும் கப்சிப். அப்போ ஒரு சிலர்தான் தமிழ்ப்படத்தோட மோட்டிவை கரெக்டா புரிஞ்சிகிட்டாங்க. அதுல ஒருத்தர் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். “இந்த ஜானர்ல படம் எடுக்கும்போது, எந்த தனிப்பட்ட மனிதர்களும் புண்படச் செய்யக் கூடாது. மத்தப்படி என் படத் தைகயும் தமிழ்ப்படத்துல கலாய்ச்சதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏன்னா, நம்மை முக்கியமானவர்களாக நினைக்கிறதாலதான் நாம அதுல இருக்கோம்”னு அவர் சொன்னார்.

யெஸ் அதான் நூத்துக்கு நூறு உண்மை. ஸ்பூஃபுக்கு ஒரு படமோ, காட்சியோ டிக் பண்ணப்படுதுதான், அதோட வேல்யூன்றது ரொம்ப பெருசு – மக்களிடம் பாப்புலாரான அப்படியான படமும் காட்சிகளும்தான் ஸ்பூஃப் படங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் ரியல் மேட்டரே.

Also Read – பாவம்யா நாங்க.. நடிகர் கௌதம் மேனன் வேணாம்.. டைரக்டர்தான் வேணும்!

இப்படி கொஞ்சம் கொஞ்சமா புரிதல் வந்தப்புறம், தமிழ்ப்படத்தைப் பார்த்தப்புறம், யார் படங்கள், யார் காட்சிகள் எல்லாம் அதுல வந்திருக்கோ, அவங்க எல்லாமே அதை ரசிச்சதோட, அதுல ஒருவித கெத்தை ஃபீல் பண்ண ஆரம்பிச்சாங்க. படம் செம்ம ஹிட்டு. நமக்கு ரொம்ப முக்கியமா… சிவா எனும் அகில உலக சூப்பர் ஸ்டார் கிடைச்சார். தமிழ்ப்படம் வெற்றிக்குப் பிறகு, அமுதனின் ரெண்டாவது படம் மீது மக்களுக்கு செம்ம எதிர்பார்ப்பு இருந்துச்சு. அந்தப் படத்துக்கு அமுதன் வெச்ச பேரே ‘ரெண்டாவது படம்’ அப்டீன்றதுதான். திருவல்லிக்கேணி மேன்ஷன் ஒன்றில் மூணு பசங்க ஒண்ணா தங்கியிருக்காங்க. அவர்களுக்கு வெளிப்படையான வாழ்க்கை ஒன்று இருக்கிறது. ரகசியமான வாழ்க்கை ஒன்று இருக்கிறது. அதனால், ஏற்படக்கூடிய திகிலும், காமெடியும்தான் அந்தப் படத்தோட ஒன்லைன். அந்தப் படத்தைப் பார்க்கிறவங்களுக்கு அதிர்ச்சி இருக்கப்போவது நிச்சயம். அந்த அதிர்ச்சிக்கு நிச்சயமாக வரவேற்பு இருக்கும்னு அமுதன் அப்பவே ஹிண்ட்ஸ் கொடுத்திருந்தா.

அதெல்லாம் சரிதான்ற மாதிரி வித்தியாசமா இருந்துச்சு அந்தப் படத்தோட ட்ரெய்லர். இப்பவும் இருக்கு. யூடியூப்ல பார்க்கலாம். ஆனா, படம் இன்னிக்கு வரைக்கும் ரிலீஸ் ஆகலை. சென்சார் வாங்கி, ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் கூட நடந்துச்சு. ஏதோ ப்ரோட்யூஸர் சைட்ல இஷ்யூ. இன்னிக்கு வரைக்கும் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் ரிலீஸ் ஆகாததால அவரோட ரெண்டாவது படமா ஆனது தமிழ்ப்படம் 2.0.

தமிழ்ப்படம் டூ-ல அமுதனுக்கு சவால் ரொம்பவே அதிகம். மீம்ஸ், ட்ரால்ஸ் என்பது இயல்பு வாழ்க்கையா மாறிட்ட சூழல்ல, ஏற்கெனவே பெஸ்டை கொடுத்த பிரஷர்ல… மிகப் பெரிய எதிர்பார்ப்பும் நிலவுச்சு. இதுல சினிமா மட்டும் இல்லாம, ரியல் அரசியலையும் கலாய்ப்புக்கு பிக் பண்ணி, சிவா மெரினால தியானம் பண்ற ப்ரோமோ போஸ்டர்லா செம்ம வைரல் ஆச்சு. எல்லாத்துக்கும் மேல, படம் ரீலீஸுக்கு முன்னாடி வெளியிடப்பட்ட ‘நான் யாருமில்லை’ பாடல் வீடியோல ரஜினி, கமல் விஜய், அஜித், சிம்பு, விஷால், சிவாகார்த்திகேயனு எல்லாரையும் கலாய்த்து தள்ளியது அல்டிமேட்டான ஒண்ணாவே பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்பு கண்ணாபின்னான்னு எகிறியதாலோ என்னவோ, தமிழ்ப்படம் டூ-க்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தாலும், தமிழ்ப்படம் ஒண்ணுக்கு இருந்ததைவிட கொஞ்சம் கம்மிதான். ஆனா, உண்மை என்னன்னா, தமிழ்ப்படம் ஒண்ணைவிட ரெண்டுல மெச்சூர்டான அப்ரோச் இருக்கும்.

தமிழ்ப்படம்
தமிழ்ப்படம்

இந்த ரெண்டு படங்களோட ஸ்பெஷலே என்னன்னா, ரெண்டுலயும் கதைன்னு ஒண்ணு இருக்கும். அதுபாட்டுக்கு போயிட்டு இருக்கும். அதுக்குள்ள ஸ்பூஃப் காட்சிகள் எல்லாமே அக்காமடேட் ஆகியிருக்கும். முதல் பாகத்தின் பெரும் பகுதி படங்களை மட்டுமே கலாய்ச்சி இருப்பாங்க. ரெண்டாம் பாகத்துல ஒரு பக்கம் நிஜ அரசியல், இன்னொரு பக்கம் நிஜ மனிதர்களும் ஆங்காங்கே கலாய்க்கப்பட்டிருப்பாங்க. அரசியலுக்கு ஓபிஎஸ் போர்ஷனையும், நிஜ மனிதர்களுக்கு மிஷ்கின் ஷூட்டிங்கையும் உதாரணமா சொல்லலாம். ஆனால், அதுவுமே ரசிக்கிற மாதிரிதான் இருக்குமே தவிர, ஹர்ட் பண்ற மாதிரி இருக்காது.

இந்த இடத்துல ஒரு விஷயத்தை இன்னும் தெளிவா சொல்லியாகணும்னு நம்புறேன். எந்தப் படத்தை ஸ்பூஃப் பண்றோமோ, எந்த நடிகர் நடிச்ச காட்சிகளை ஸ்பூஃப் பண்றோமோ, அதுல சம்பந்தப்பட்டவங்களே ஸ்பூஃப் காட்சிகளைப் பார்க்கும்போது ஜாலியா ரசிச்சுட்டுப் போற அளவுக்கு அதுல நகைச்சுவைதான் முழுக்க முழுக்க இழையோடணும். மாறாக, அவங்க மனசு காயப்படக் கூடாது. அப்படி காயப்பட்டா அது ஸ்பூஃப் இல்லை. இதுக்கு உதாரணமாக இயக்குநர் சக்தி சிதம்பரம் டைரக்‌ஷன்ல சத்யராஜ் நடிச்ச ‘மகா நடிகன்’ படத்தைச் சொல்லலாம். அதுலயும் ஸ்பூஃப் காட்சிகள் இருக்குற மாதிரி தோணும். ஆனா, சம்பந்தப்பட்டவங்க அதைப் பார்த்தா ‘என்னடா இப்படி வன்மத்தை கக்கி வெச்சிருக்கீங்க’ன்னு ஃபீல் பண்ணும் வாய்ப்பு அதிகம். சோ, அது நிச்சயமா ஸ்பூஃப் ஜானரே இல்லை. அங்கதான் தமிழ்ப்படம் ரெண்டு பாகமுமே மேன்மையா நிக்குது.

ரெண்டு படத்துலயும் ஸ்பூஃப் ஜானரை தாண்டி ஃபார்ஸ் (Farce) எனும் எலிமெண்ட்டையும் அமுதன் நல்லாவே ட்ரை பண்ணியிருப்பார். ஸ்பூஃப் எனது அப்படியே அச்சு அசலா பிரதி எடுத்து கலாய்ப்பது… ஃபார்ஸ் என்பது அபத்தம்னு சொல்லலாம். அபத்தமான காட்சிகளை அங்காங்க வெச்சிருப்பார். ரியல் லைஃப்ல கொஞ்சம் கூட சாத்தியமே இல்லாத அபத்தமான விஷயங்களைக் காட்டுறதுதான் ஃபார்ஸ்-னு சிம்பிளா சொல்லலாம். இதுக்கு உதாரணம்னா, முதல் பாகத்துல ஒரு குடிசை வீட்டுக்குள்ள நுழைஞ்சா… உள்பக்கம் பேலஸ் மாதிரி இருக்கும். இதெல்லாம் எப்படி நீங்க கண்டுபிடிச்சீங்கன்னு கேட்கலாம். அதெல்லாம் இல்ல பாஸ்… இதை அமுதனே சொல்லியிருக்காரு. உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது… தமிழ் சினிமாவின் பல நூறு படங்களில் உண்மையிலேயே பல்லாயிரக்கணக்கான அபத்தமான காட்சிகள் இருக்கே, அதெல்லாம் இந்த ஜானர்ல வருமான்னு கேட்காதீங்க. அது வேற ஏரியா.

ஆனா, வேற சில சீரியஸான விஷயங்கள்லாம் நாங்களே கண்டுபிடிச்சிருக்கோம். ஃபர்ஸ்ட் பார்ட்டை பொறுத்தவரைக்கும் தமிழ் சினிமாவோட அத்தனை க்ளீஷேவையும் கிழிச்சி தொங்கப் போட்டிருப்பாரு அமுதன். அதுக்கு உச்சபட்ச உதாரணமா, அந்த ரவுடி அக்காவுக்காக ஒரு காலேஜ் பையனை கடத்திட்டு வந்து அடியாளுங்க விருந்து கொடுக்கிற சீன் தொடங்கி வயசான கிழடுங்கு பாய்ஸா சுத்துறது வரைக்கும் பல காட்சிகளை சொல்லலாம்.  

ரெண்டாவது பாகத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழ் சினிமாவுல எந்த அளவுக்கு ஆணாதிக்க மனோபாவம் ஊறி கிடந்துருக்குன்றதை கலாய்ச்சி தள்ளியிருப்பார். குறிப்பாக, ஒரு லூசுப் பொண்ணைதான் காதலிக்கணும்னு துடிக்கிற ஹீரோ, எவண்டா உன்னை பெத்தா சாங் வரைக்கும் நிறைய சொல்லாம். இப்படி ஸ்பூஃப் என்பதைத் தாண்டி Farce அப்புறம் Satire எல்லாத்தையும் டீல் பண்ணியிருக்கார்.

நிழல்ல மட்டும் இல்லை.. நிஜத்துலயும் அமுதன் சட்டையர் பண்றதுல கில்லி. அதுக்கு அவரோட நிறைய ட்வீட்களை ரெஃபரன்ஸ் எடுத்துக்கலாம். உதாரணத்துக்கு… கோவிட் லாக் டவுன் அப்போ மக்களை விளக்கேத்த சொன்னாருல்ல பிரதமர் மோடி. அதை கிண்டல் பண்ற மாதிரி பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமான்ற காமெடி சீன் பிக்சரை ட்வீட் பண்ணியிருப்பாரு.  

சி.எஸ்.அமுதன் ட்வீட்
சி.எஸ்.அமுதன் ட்வீட்

ஒரு முக்கியமான ஐபிஎல் மேட்ச்ல டெல்லி டீமை சிஎஸ்கே வின் பண்ணியிருக்கும். அப்போ, “டெல்லிக்கு ஒரு நாளும் அடி பணிய மாட்டோம்”னு ட்வீட் தட்டிவிட்டிருப்பார். இப்படி தோண்டத் தோண்ட நிறைய சம்பவம் கிடைக்கும். இப்போ, விஜய் ஆண்டனிய வைச்சு வெளிவரப் போற ‘ரத்தம்’ படமும் ரொம்பவே எதிர்பார்ப்ப கூட்டியிருக்கு. ட்ரெயல் பிராமிசிங்கா இருந்துச்சு. ‘இங்கே சாதாரண வாழ்க்கையக்கூட போராடி தான் வாங்க வேண்டும்’ன்ற வசனம் எல்லாம் ரொம்பவே ஈர்த்திருக்கு. சோஷியல் க்ரைம் த்ரில்லரா தோன்றும் படத்தின் அந்த டீசரின் இறுதியில் சி.எஸ்.அமுதன் வாய்ஸ்லயே வரும் அந்த வரிகள்… இன்னொரு சம்பவத்தோட வரேண்டான்னு சிக்னல் கொடுக்குது!

ஒரு விஷயத்தை யோசிச்சிருக்கீங்களா? தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரெண்டிங் கல்ச்சர் இருக்கு. ஒரு ரொமான்ட்டிக் படம் மெகா ஹிட் ஆச்சுன்னா, வரிசையா ரொமான்டிக் படமா வரும்… ஒரு பேய் படம் செம்மயா கல்லா கட்டிச்சின்னா, வரிசையா அப்படி படம் வரும்… இப்படி நிறைய ட்ரெண்டு வந்து போயிட்டே இருக்கும். 2010-ல் தமிழ்ப்படம் நமக்கு புதுசான ஜானர்ல செம்ம ஹிட்… ஆனா, ஒருத்தர் கூட ஸ்பூஃப் ஜானர்ல படம் எடுக்கலை. 8 வருஷம் கழிச்சு இன்னொரு ஸ்பூஃப் படம் வருது. அதுவும் நம்ம நம்ம சம்பவக்காரர் சி.எஸ்.அமுதன் டைரக்‌ஷன்லதான். கல்லா கட்டக் கூடியது தெரிஞ்சும் ஏன் இந்த ஜானர் யாரும் ட்ரை பண்ணல்லை…

ஏன்னா, அந்த மாதிரி சம்பவங்களை நிகழ்த்துறது அவ்ளோ ஈஸி இல்லை. அதுக்கு நம்மகிட்ட இருக்கிற ஒரே சம்பவக்காரர் சி.எஸ். அமுதன் மட்டும்தான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top