இன்னைக்கு இருக்குற 2k கிட்ஸ்க்கு மசாலாப் படங்கள்னு சொன்னாலே ஹரிதான் நினைவுக்கு வருவார். ஆனா, ஹரிக்கே ஒரு அண்ணன் இருந்தா, ஒருவேளை அவரும் கமர்ஷியல் டைரக்டரா இருந்தா, படம் எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்க்கவே சும்மா ஜிவ்வுனு ஏறுதுல.. அப்படி 1995-க்குப் பிறகு மசாலாப் படங்கள் அதிகமா வர ஆரம்பிச்ச காலம் அது. அப்போ காதல் மன்னன்னு ஒரு படம் இயக்கி அதுக்குப் பின்னால அமர்க்களம்னு வரிசையா தொடர் ஹிட்டுகள் கொடுத்தவர்தான் இயக்குநர் சரண். இவரோட படங்கள்ல கதைக்கு என்ன தேவையோ, அந்த மசாலாக்கள் மட்டும் கச்சிதமா இருக்கும்ன்றதுதான் இவரோட ஸ்பெஷாலிட்டியே. மசாலாவோட சேர்ந்த டெரர் மாஸும் இவர் படத்துல இருக்கும். அப்படி என்னலாம் பண்ணிருக்கார் டைரக்டர் சரண். வாங்க பார்ப்போம்.
குரு சேவை!
விஷுவல் கம்யூனிகேஷன் டிப்ளமோ படிச்சுட்டு ஆடை வடிவமைப்புத் துறையில வேலை செஞ்சார், சரண். சின்ன வயசுல இருந்தே சினிமா மீது தீராத காதல். நீண்டகால காத்திருப்புக்குப் பின்னால் இயக்குநர் கே.பாலசந்திரிடமே உதவி இயக்குநரா சேர முயற்சி செய்தார். ஆனால், அந்த வாய்ப்பு கைகூடாமல் போனது. சோர்ந்துபோகாத சரண், மீண்டும் மீண்டும் பாலச்சந்தருக்கு கார்ட்டூன் வரைஞ்சு லெட்டர் எழுதுகிறார். அதைப் பார்த்து இம்ப்ரஸ் ஆன பாலச்சந்தர், சரணை உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டார். உதவி இயக்குநராக வேலைபார்த்த முதல் படம் புதுப்புது அர்த்தங்கள். அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே கவிஞர் வைரமுத்து சரணை கூப்பிட்டு ‘நீ ஒரு படம் பண்ணு, புரடியூசர்லாம் இருக்காங்க. ரகுமான்கிட்ட நான் பேசுறேன்’னு சொல்லியிருக்கார். அதுக்கு சரண் சொன்ன பதில்தான் அல்டிமேட். `சார், கடந்த மூணு வருஷத்துல நான் இயக்குநர்கிட்ட முழுசா கத்துக்கிட்டேன். இனி அவருக்கு சர்வீஸ் பண்ணனும். அதுக்கான காலங்களை நான் எடுத்துக்கணும்’னு சொல்லிட்டார். அதுக்குப் பின்னால பாலச்சந்தரோட கல்கி வரைக்கும் சரண் உதவி இயக்குநரா வேலை பார்த்தார்.
சென்டிமென்ட் டு ஆக்ஷனும்… அஜித்தின் திருப்புமுனையும்!
1997-ல 5 படங்கள் அஜித்க்கு ரிலீஸாச்சு. அந்த 5 படங்களுமே தோல்வி. ஒரே ஒரு பிரமாண்ட பிரேக்குக்காகக் காத்திருந்தார், அஜித். இந்த நிலையில்தான் தன்னோட நண்பர் விவேக் மூலமா அஜித்தை சந்திச்சார், சரண். ‘சரண் சொன்ன கதை அஜித்துக்குப் பிடிச்சுப் போக,’ அப்புடினு சொல்லணும்னுதான் தோணுது. ஆனா, அஜித் காதல் மன்னன் கதையை சரணிடம் கேட்கவே இல்லை. ‘கே.பி சார் அசிஸ்டெண்ட், எல்லாம் நீங்க பார்த்துக்கங்க. உங்களுக்கு இது முதல்படம் அதனால ஒரு வேகம் இருக்கும். அதுபோதும்’னு சொல்லியிருக்கார், அஜித். காதல் மன்னன்னு தலைப்பு வச்சு ஆரம்பம் ஆனது. இயக்குநராக சரணுக்கு முதல் படம். படம் வெளியாகி மிகப்பெரிய பிரேக் கொடுத்தது, அஜித்துக்கும், சரணுக்கும். அஜித்தை பெண்கள் மத்தியில் அழகனாக நிலைநிறுத்திய படம் காதல் மன்னன். வேறொருவருக்கு நிச்சயம் செய்யப்பட்டுவிட்ட ஒரு பெண்ணை நாயகன் காதலித்து அவருடன் சேர்வது கதைக்களம். இந்தக் கதைக்களத்தை முதிர்ச்சியாக அனைவரும் ரசிக்கும் வகையிலும் கையாண்டிருந்தார், சரண். அதேநேரம் காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் போன்ற ஜனரஞ்சக அம்சங்களுக்கும் குறையில்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருந்தார். அடுத்ததாக அஜித்-சரண் கூட்டணி மீண்டும் அமர்க்களம் மூலம் இணைந்தது. காதலை கொஞ்சம் சாஃப்டான டோனில் பேசியிருந்த காதல் மன்னனில் இருந்து அமர்க்களத்தில் அதிரடியாக ஆக்ஷன் ஜானருக்கு காதலை மாற்றினார், சரண். அப்போதே கமர்ஷியல் சினிமாவுக்கான புதிய இலக்கணத்தை எழுதி விட்டார், சரண். அஜித்-சரண் காம்போ அட்டகாசம், அசல்னு நாலு படங்கள் வரை தொடர்ந்தது.
ஆக்ஷன் டூ காதல்!
அமர்க்களம் மாதிரியான கமர்சியல் படங்கள்தான் தனக்கு வரும்ங்குற இமேஜை தன்னோட 3-வது படத்துலயே உடைச்சவர். பார்த்தேன் ரசித்தேன், ஜே ஜேனு முழு நீள காதல் படங்களையும் இயக்கி ‘நான் கே.பி சாரோட அசிஸ்டெண்ட்டுடா’ என நிரூபித்தார். அதேபோல கமலை வைத்து இயக்கிய வசூல்ராஜா முழுநீள காமெடி ஜானரையும் வெற்றிகரமாக இயக்கி இருந்தார். சரணை இந்த ஜானர் மட்டும்தான் இயக்குவார் என ஒரு வட்டத்துக்குள் நிச்சயமாக அடக்கவே முடியாது.
characterization கிங்!
தனக்கு இந்த கேரக்டருக்கு இந்த நடிகர்தான் வேண்டும் என முடிவு செய்துவிட்டால் அவரை நிச்சயமாக ஒப்பந்தம் செய்து விடுவார் சரண். பார்த்தேன் ரசித்தேன் படத்துக்காக சிம்ரனிடம் 30 நாட்கள் கால்ஷீட் கேட்க, அவரோ 15 நாட்கள் கொடுத்தார். அந்த 15 நாட்களையும் 3 மாத காலத்துக்குள் 3 மணிநேரம் 6 மணிநேரம் என மணிக்கணக்கில் பிரித்துக் கொடுத்தார், சிம்ரன். சிம்ரன் அந்த கேரெக்டருக்கு முக்கியம் என்பதுதான் சரணின் ஒரே நோக்கம். சிம்ரன் கொடுத்த தேதிகளிலேயே படத்தை எடுத்து முடித்துவிட்டார், சரண். தன் கேரக்டர் ஆரம்பத்தில் டம்மி செய்திருக்கிறார், என சந்தேகப்பட்டடார் சிம்ரன். அதனால் ரிலீஸூக்கு முன்னர் சிம்ரனுக்கு படத்தை திரையிட்டார், சரண். படத்தை பார்த்து முடித்தவுடன் அழுதுகொண்டே வெளியில் வந்தார் சிம்ரன். அடுத்த படத்துக்கான கால்ஷீட் நான் கொடுத்துட்டுத்தான் போவேன் என அடம்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார், சிம்ரன். அதேபோல கலாபவன் மணி ஜெமினிக்குப் பின்னால் ஜே.ஜே படத்தில் தான் பணியாற்ற விருப்பப்பட்டதால் கலாபவன் மணிக்காக அந்த கேரெக்டர் உருவாக்கப்பட்டது. இதுபோல ஒவ்வொரு கேரெக்டருக்கும் சரண் படத்தில் முக்கியத்துவம் இருக்கும்.
ஜெமினி!
தமிழில் கமர்சியல் சினிமாவை வரிசைப்படுத்தும்போது ஜெமினிக்கு முக்கியமான இடம் உண்டு. ஒரு கமர்சியல் சினிமா எப்படி எடுக்க வேண்டும் என்ற பாடத்தையே ஜெமினி மூலமாக காட்டியிருப்பார். இதற்கு முன் கமர்சியல் சினிமாக்களுக்கு என்று இருந்த டெம்ப்ளேட்டை உடைத்த சினிமாவும் ஜெமினிதான். முக்கியமாக வலிமையான வில்லன், ஹீரோயின் குடும்பப் பிண்ணனி, ஹீரோ பின்னணி என கமர்சியல் ஜானருக்கு தேவையான எல்லாமே சரியான அளவில் இருக்கும். நன்றாக உற்றுப்பார்த்தால் அமர்க்களமும், ஜெமினியும் ஒரே ஒன்லைன்தான். ஆனால் திரைக்கதையில் அது தெரியாமல் commercial treatment கொடுக்கப்பட்டிருக்கும்.
வில்லன் ஸ்பெஷலிஸ்ட்!
ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும், கதைக்கும் ஏற்ற வில்லன்களைத் தேர்வு செய்வதில் சரண் கில்லாடி. ரகுவரன், சிம்ரன், கலாபவன் மணினு வில்லன் தேர்வுகள் ஒரு தனித்துவமா இருக்கும். அவங்களுக்கான திறமைகளைத்தான் படத்திலும் பயன்படுத்தியிருப்பார். கமர்ஷியல் படங்களில் ஹீரோவுக்கு இணையான முக்கியத்துவத்தை வில்லனுக்கும் கொடுத்திருப்பார். அதே நேரம் ஹீரோவுக்கான மாஸும் குறையாமல் இருக்கும். அந்த ஹீரோவுக்கும், வில்லனுக்குமான மீட்டர்தான் சரணின் பலம்.
இணைந்த கைகள் காம்போ!
சரண் புதிய படம் ஒன்றை அறிவித்தால் அதில் ஹீரோ பெயர் இருக்கிறதோ இல்லையோ, இசை பரத்வாஜ்னு எழுதப்பட்டிருக்கும். சரணின் திரைக்கதைக்கு எந்த இடத்தில் என்ன தேவை என்பதையும் பரத்வாஜ் பூர்த்தி செய்வார். மாஸான டைரக்டராக சரண் வலம் வந்துகொண்டிருந்த நேரம் அது. ஏ.வி.எம் தன்னோட படத்தயாரிப்பை கொஞ்ச காலம் நிறுத்தியிருந்தது. மீண்டும் படம் தயாரிக்க சரணை வரச்சொன்னார், ஏ.வி.எம் சரவணன். தான் வரும்போதே பத்து கண்டிஷன்களை எழுதிக் கொண்டு வந்திருந்தார், சரண். அதில் படப்பிடிப்பு தளத்துக்கு நீங்கள் வரக் கூடாது, கதை தலையீடு இருக்கக் கூடாதுனு பல பாய்ண்ட் இருந்தது. அதில் 4-வது பாய்ண்ட் இசை – பரத்வாஜ்தான் இருக்கணும். அதை எக்காரணம் கொண்டும் மாற்ற மாட்டேன்னு இருந்தது. இதை கேட்டதும் ஏ.வி.எம் சரவணன் சரணை எழுந்து போகச் சொல்லிவிட்டார். சற்றும் சளைக்காத சரண் எழுந்திருக்கும் நேரம் பக்கத்திலிருந்த எம்.எஸ்.குகன், ஏ.வி.எம் சரவணனிடம் பேச ‘சரி இருக்கட்டும்’னு சொல்லிட்டார் சரண். அப்படித்தான் ஜெமினி படம் உருவானது. சரணின் நம்பிக்கைக்கு சற்றும் குறையாத பாடல்களைக் கொடுத்திருந்தார் பரத்வாஜ். `ஓ போடு’ பாடல் பட்டி தொட்டியெங்கும் படத்தைக் கொண்டு சேர்த்தது. ஒரு புரொடியூசர் இந்த இசையமைபாளர் வேணும்னா உங்களுக்கு படம் இல்லனு சொல்ற நிலைமை வந்தும் பரத்வாஜ்தான் இசையமைப்பாளர் எனும் எண்ணத்தில் உறுதியாக நின்றார், சரண். சரண் இயக்கம், தயாரிப்புனு மொத்தம் 16 படங்கள்ல 14 படங்களுக்கு பரத்வாஜ்தான் மியூஸிக் பண்ணியிருந்தார்.
Also Read – ‘ஸ்டாக் பண்றியா பொறுக்கி’னு சொல்லியிருந்தா என்ன ஆகியிருக்கும் கெளதம்?! #WhyWeLoveGautham