விக்ரமின் கரியரில் அவருக்கென்றே அளவெடுத்து தைத்து வைத்ததுபோல சில படங்கள் அவ்வபோது அமையும். அப்படியொரு படம்தான் ஷங்கர் இயக்கிய ‘ஐ’. இந்த ஒரே படத்திலேயே மாச்சோ பாடி பில்டராகவும் வீக்கான நோஞ்சானாகவும் வெரைட்டி காட்டி பேய்த்தனமாக நடித்திருப்பார் விக்ரம். இந்தப் படம் பார்க்கும்போது விக்ரமைத் தவிர வேறு யாராலும் இந்த ரோலில் நடித்திடமுடியாது என நிச்சயம் தோன்றும். ஆனால், இந்தக் கதையில் முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது என்றால் நம்பமுடிகிறதா?
காதலன்’ பட டைமிலிருந்தே ரஜினியும் ஷங்கரும் இப்போது இணைவார்கள் அப்போது இணைவார்கள் என அந்தக் கூட்டணி மீது ரசிகர்கள் கண் வைக்க ஆரம்பித்தார்கள். இந்தியன்’ படமே ரஜினிக்காக ஷங்கர் எழுதிய கதைதான். சில காரணங்களால் அதில் கமல் நடிப்பதாக அமைந்துபோனது. அதன்பிறகு `முதல்வன்’ படத்தில் ஆல்மோஸ்ட் ரஜினி நடிப்பதாக இருந்து பின் அவர் விலகிவிட கடைசி நேரத்தில் அர்ஜூன் உள்ளே வந்தார். இந்தப் படத்தை நிராகரித்துவிட்டு ரஜினி நடித்ததுதான் ‘படையப்பா’. இதன் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி நடித்த ‘பாபா’ அட்டர்ஃப்ளாப் ஆனது. இதே காலகட்டத்தில் ஷங்கர் ‘முதல்வன்’ வெற்றிக்குப் பிறகு அதை ஹிந்தியில் ‘நாயக்’ என ரீமேக் செய்தார். அந்தப் படம் அங்கே அட்டர் ஃப்ளாப். பிறகு தமிழுக்கு வந்து ‘பாய்ஸ்’ படத்தை இயக்க, அந்தப் படமும் தோல்வி அடைந்ததுடன் கடும் விமர்சனங்களையும் அவர்மீது வைத்தது.
இந்நிலையில் ரஜினி, ஷங்கர் இருவருமே சொல்லிவைத்தாற்போல 2005-இல் தனித்தனியே சூப்பர் கம்பேக் கொடுத்தார்கள். ரஜினி சந்திரமுகி’ என்னும் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க, ஷங்கரும் விக்ரம் நடிப்பில் அந்நியன்’ ஹிட்டைக் கொடுத்தார். கம்பேக் கொடுத்த இருவரும் இந்தமுறை நிச்சயம் இணைந்து பணியாற்றிவிடுவது என முடிவெடுத்தார்கள். அதன்படி உருவானதுதான் ‘சிவாஜி’. ஆனால் அப்போது, ரஜினியுடன் இணைவது என்றதும் ஷங்கர் அவருக்கு சொன்ன கதை ‘சிவாஜி’ படக் கதை அல்ல. துரோகத்தால் கூனனான ஒருவன் தன் நிலைமைக்கு காரணமானவர்களை பழிவாங்கும் ஐ’ படத்தின் கதையைத்தான் ரஜினியிடம் சொன்னார். கதைக் கேட்டு மிகவும் ஆர்வமான ரஜினி உடனே சம்மதமும் தெரிவித்திருக்கிறார். ஆனால் சிலநாட்கள் கழித்து மீண்டும் ஷங்கரை அழைத்து, “எனக்கு இந்த கேரக்டர் செட் ஆகுமான்னு தெரியலை ஷங்கர், வேற ஒரு கதை சொல்றீங்களா” எனக் கேட்டிருக்கிறார்.
அப்போது ஷங்கர் தனது கனவுப்படமான ‘ரோபோ’ கதையை சொல்ல, அதன் முன் தயாரிப்பு பணிகளுக்கே ஒருவருடம் ஆகிவிடும் என்பதை காரணம் காட்டி ‘ரோபோ’ நெக்ஸ்ட் பண்ணலாம்.. இப்ப உடனே ஷூட்டிங் ஆரம்பிக்கிற மாதிரி சிம்பிளா ஒரு கதை சொல்லமுடியுமா?’ எனக் கேட்டிருக்கிறார் ரஜினி. அப்போது ஷங்கர் சிம்பிளாக(!?) சொன்ன கதைதான் ‘சிவாஜி’. இந்த சம்பவத்தை ‘சிவாஜி’ ஆடியோ லாஞ்ச் விழாவில் ரஜினியே சொல்லியிருப்பார்.
ஒருவேளை ‘ஐ’ படத்தில், அதிலும் வில்லத்தனம் மிக்க அந்த கூனன் பாத்திரத்தில் ரஜினி தன்னுடைய பாணியில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்..? உங்களது கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்க மக்களே..!
Also Read – மணிரத்னத்தின் `மெட்ராஸ் டாக்கீஸ்’… உருவான பின்னணி தெரியுமா?