கவிஞர் வாலியின் வீடு. தனது முதல் படமான ‘ஜெண்டில்மேன்’ பாடல் வரிகளை வாங்க வந்திருந்த ஷங்கர். ‘சிக்குபுக்கு’ பாடல் சிச்சுவேஷனை டீட்டெய்லாக சொல்லி முடிக்க, ‘என்னயா கண்ணுல இருந்து அம்பு வருது, காதுக்குள்ள போகுதுன்னுலாம் சொல்ற. எடுத்துடுவியா..?” என சந்தேகமாக கேட்டிருக்கிறார் வாலி. அன்று வாலி கேட்ட கேள்விக்கு ஷங்கர் திரையில் சொன்ன பதில் என்னவென்பது தமிழ்நாட்டுக்கே தெரிந்தது. அதுதான் ஷங்கர். தமிழ் சினிமா விமர்சன வரிகளில் பிரம்மாண்டம் என்ற வார்த்தையை பயன்படுத்த பழக்கியவர் ஷங்கர். இன்று தமிழ் திரையுலகில் சகஜமாக புழக்கத்தில் இருக்கும் டெக்னாலஜிகளில் பல ஷங்கரின் முயற்சிகளால் இங்கு அறிமுகமானவை.
இப்படிப்பட்ட ஷங்கருக்கு கடந்த சில வருடங்களாக கஷ்ட காலம் என்றுதான் சொல்லவேண்டும். 2015-ஆம் ஆண்டு வெளியான அவரது ‘ஐ’ படம் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. அதிலிருந்தே அவர்மீதான நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கிடையே ராஜமௌலியின் ‘பாகுபலி’ புதிய சாதனைகளைப் படைக்க, தேவையே இல்லாமல் ஷங்கருடன் அவரை ஒப்பிட ஆரம்பித்தனர். இதுவும் ஷங்கருக்கு ஒருவித அழுத்தத்தை தர ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து ஷங்கர், ‘2.0’ படத்தை கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் உழைப்பில் (‘ஐ’ பட ரிலீஸுக்கு முன்பே இதற்கான வேலைகளில் இறங்கியிருந்தார் ஷங்கர்) படமாக்கி வெளியிட, அதுவும் பெரிய அளவில் சோபிக்கமுடியாமல் போனது. அதைத்தொடர்ந்து, ‘இந்தியன்-2’ படத்தினை ஆரம்பித்தார் ஷங்கர்.
இதுவரை புற அழுத்தங்களால் தவித்துவந்த ஷங்கர், ‘இந்தியன்-2’ படத்தை ஆரம்பித்ததிலிருந்து மன அழுத்தங்களிலும் சிக்க ஆரம்பித்தார். தயாரிப்பு நிறுவனமான லைக்காவுடன் பட்ஜெட் ஒதுக்கீட்டில் மனக்கசப்பு, ஷூட்டிங்கில் விபத்து, விபத்தில் உதவி இயக்குநரும் உதவியாளரும் மரணம், விபத்து தொடர்பான போலீஸ் விசாரணை, மீண்டும் உடனே ‘இந்தியன்-2’ படத்தை தொடங்கமுடியாமல் போனது, அதையொட்டிய கோர்ட் அலைச்சல் என பிரச்சனைகள் அவரை சூழ ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து ‘இந்தியன்-2’ படத்தை எப்போதைக்கு மீண்டும் தொடங்கமுடியும் என தெரியாத சூழலில் நாட்களை வீணடிக்க விரும்பாத ஷங்கர், வேறொரு கதை செய்து புதுப்படம் ஒன்றைத் தொடங்கலாம் என திட்டமிட்டார். ஆனால் தொடர் மன உளைச்சலுக்குள்ளான ஷங்கருக்கு முழு மனதாக பங்கேற்று ஒரு கதையை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. கதை உருவாக்கும் முயற்சியால் மேலும் கால தாமதம் ஏற்பட்டதுதான் மிச்சமாக இருந்தது. இடைபட்ட காலத்தில் ஷங்கர் தனது ‘அந்நியன்’ படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் ரீமேக் செய்யம் முயற்சியில் இறங்க, அதற்கும் பிரச்சனைகள் கிளம்பியது. ‘அந்நியன்’ தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் முட்டுக்கட்டையைப் போட, அதற்கான வழக்கு தற்போது கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே ஷங்கருக்கு தனது மகளின் கல்யாண வேலைகளை கவனித்துக்கொள்ளும் குடும்பப் பொறுப்பும் ஏற்பட்டது.
இதையொட்டி தனது நண்பர்களின் வட்டத்தில் இருக்கும் இயக்குநர்களிடம் தனக்கேற்ற கதை இருந்தால் சொல்லலாம் என்று தெரிவித்தார் ஷங்கர், இதன் பலனாக, முதலில் இயக்குநர் மிஷ்கின் ஒரு திரில்லர் லைன் ஒன்றை சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு அசந்துபோன ஷங்கர், ஒரு மிகப்பெரிய தொகையை மிஷ்கினுக்கு சம்பளமாக தர சம்மதம் தெரிவித்து, அவரையே முழு திரைக்கதையையும் எழுதச் சொன்னார். ஆனால் மிஷ்கினோ ‘துப்பறிவாளன்-2’ பிரச்சனை மற்றும் ‘பிசாசு-2’ வேலைகளில் சிக்கிக்கொள்ள அவரால் அதன் திரைக்கதையை முடிக்கமுடியவில்லை. இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒன்லைன் ஒன்று ஷங்கருக்கு மிகவும் பிடித்துவிட, அதை முறைப்படி பெற்றுக்கொண்டு அதற்கான திரைக்கதை அமைக்கும் வேலைகளில் மூழ்கினார் ஷங்கர். கார்த்திக் சுப்புராஜ் சொன்ன அந்த கதையைத்தான் தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கவிருக்கிறார்.
இதற்கிடையே ‘லைக்கா’ நிறுவனம், தமது ‘இந்தியன்-2’ படத்தை முடிக்காமல், ராம்சரண் படத்தை ஷங்கர் இயக்கக்கூடாது என தெலுங்கு தயாரிப்பு கவுன்சிலில் புகார் அளித்திருக்கிறது. ஆனால் ஷங்கர் இதைப்பற்றி எதுவும் கவலைப்படாமல் ராம்சரண் படத்தின் முன் தயாரிப்பு பணிகளுக்காக தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டு பரபரப்பாக வேலைபார்த்துவருகிறார். மேலும் தற்போதைக்கு தன்னைச் சூழ்ந்திருக்கும் பிரச்சனை மேகங்கள் அகலும்வரை இதுபோல இளம் இயக்குநர்களிடமே முறைப்படி கதைகளை வாங்கி இயக்கிக்கொள்ளலாம் எனவும் திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர்.
Also Read : சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா வந்தது எப்படி… சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?