AK 62 படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாகவும், விஷ்ணுவர்தன், மகிழ் திருமேனி என இரண்டு இயக்குநர்கள் பெயர்கள் அடிபடுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் அஜித் லைனப்பில் திடீரென விஷ்ணுவர்தன் பெயர் ஏன் அடிபடத் துவங்கியது, அதற்கான காரணம் என்ன.. யார் இந்த விஷ்ணுவர்தன் அப்படிங்குறதைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.
நடிகர்!
விஷ்ணுவர்தன் முதல் முதலா நடிச்ச படம் அஞ்சலி. இயக்குநர் மணிரத்னத்தோட இயக்கத்துல வெளியான அஞ்சலி படத்துல குழந்தை நட்சத்திரமா அறிமுகமானார். அப்போ குரூப்ல நிற்கிற மாதிரியான வேடம்ங்குறதால பெரிசா கவனிக்கப்படலை. அதுக்குப் பின்னால மணிரத்னத்தோட கதை, தயாரிப்புல சுபாஷ் இயக்கின சத்ரியன் படத்தில் மணிரத்னமே கூப்பிட்டு விஷ்ணுவர்தனை நடிக்க வச்சார். இன்னைக்கும் அந்த கேரெக்டர் விஷ்ணுவர்தன்தான் பண்ணதான்னு ஆச்சர்யமா இருக்கும். விஜயகாந்தின் ப்ளாஷ்பேக் போர்ஷனில் வரும் சின்ன வயசு விஜயகாந்த் இவர் பண்ணதுதான். ஆன்ஸ்கிரீன்ல விஜயகாந்தோட ஆக்ரோஷத்தை, தன்னோட மேனரிசத்துல கொண்டு வந்திருப்பார். அங்கிருந்துதான் விஷ்ணுவர்தனும் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா கத்துக்க ஆரம்பிச்சார். அந்த நேரம் விஸ்காம் கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில படிச்சார். அப்போ மறுபடியும் மணிரத்னமே கூப்பிட்டு இருவர் படத்துல பிரகாஷ் ராஜ்க்கு மகனாக நடிக்க வச்சார். அந்த செட்லதான் முதல்முதலா கேமராமேன் சந்தோஷ் சிவனை பார்க்கிறார் . அப்போ தான் அடுத்ததா இயக்கப்போற டெரரிஸ்ட் கதையை விஷ்ணுவர்தன்கிட்ட சொல்ல விஷ்ணுவர்தனும் கதையில் தன்னொட ஒப்பீனியன் சொல்ல, அப்போதே இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்குப் பின்னர் அந்த டெரரிஸ்ட் படத்திலேயே சந்தோஷ்சிவனுக்கு உதவியாளராவும் வேலை பார்த்தார். அதைத் தொடர்ந்து பிசா, மல்லி, அசோகா உள்ளிட்ட பல படங்கள்ல உதவி இயக்குநர், இணை இயக்குநரா வேலை பார்த்தார். சந்தோஷ் சிவனுடன் பாம்பேக்கு போன பின்னர் நீண்ட வருடங்கள் கழித்தே திரும்ப வந்து படம் இயக்க ஆர்வம் காட்டியிருக்கிறார்.
இயக்குநர்!
கல்லூரிக் காலத்துல உருவாக்கி வச்சிருந்த அறிந்தும் அறியாமலும் ஸ்கிரிப்டை முழுசா எழுதி முடிச்சுட்டு வாய்ப்பு தேடுறார். அந்த நேரத்துல அவரோட நண்பர் ஒரு தெலுங்குப்படத்தை ரீமேக் பண்ணித்தரச்சொல்லி கேட்க, மறுக்க முடியாமல் அதை தமிழில் ‘குறும்பு’ங்குற தலைப்புல எடுத்துக் கொடுத்தார். முதல் படம் மூலமா ஒரு விசிட்டிங் கார்டு கிடைச்சிடுச்சி, இனி கரியர் நல்லா இருக்கும்னு நினைச்சவருக்கு, அடுத்து ஈஸியான வாய்ப்புகள் அமையல. அப்போதான் மறுபடியும் ஷான்ங்குற நண்பர் வந்து ஒரு படம் பண்ணலாம், உன்கிட்ட கதை இருந்தா சொல்லுனு கேட்க, அதுக்காகத்தானே காத்துக்கிட்டிருக்கேன்னு அறிந்தும் அறியாமலும் கதையை சொல்ல கதை படமானது. அறிந்தும் அறியாமலும் படத்தில் வசனங்களாலும், மேக்கிங் மூலமும் மிரட்டியிருந்தார். கூடவே யுவன்சங்கர் ராஜாவின் இசையும் சேர்ந்துகொள்ள படம் சூப்பர்ஹிட் ஆனது. தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் வைரலானது. ஆர்யாவின் கரியரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது இந்தப் படம்னே சொல்லலாம். மறுபடியும் பட்டியல் படத்தை ஆர்யா-பரத்தை வைச்சு இயக்கினார். டபுள் ஹீரோ சப்ஜெக்ட்க்கு இவருக்குமே சமமான முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசப்படுத்தியிருந்தார். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட். அப்போ அவர் விளையாடியது ஸ்ட்ரீட் கிரிக்கெட். அவரை பில்லா படம் மூலமா மெகா ஸ்டேடியத்துக்குள் இழுத்துவந்து இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஆட வச்சார், அஜித்குமார்.
டர்னிங் பாய்ண்ட்டான பில்லா!
அஜித்தின் அடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன் என்றதுமே கோலிவுட்டே “தலைக்கு இது வேண்டாத வேலை, அதுவும் பில்லா ரீமேக். அனுபவமே இல்லாத பையன். எப்படி இவ்ளோ பெரிய படத்தை தாங்கப்போறானோ?”னு பேச ஆரம்பிச்சிருந்தது. இதை எதையும் காதில் வாங்காமல் படத்தை இயக்குவதில் மும்முரமானார் விஷ்ணுவர்தன். ஆனால், அஜித் விஷ்ணுவர்தனை நம்ப ஒரு பிளாஷ்பேக்கும் இருந்தது. இந்தியில் ஷாரூக்குடன் இணைந்து அஜித் நடித்த படத்தில் விஷ்ணுவர்தன்தான் உதவி இயக்குநர். அப்போதே இவரை கவனித்து வைத்திருந்தார் அஜித். அந்த நம்பிக்கையும் பில்லாவை விஷ்ணுவர்தனுக்கு கொடுக்க முக்கியமான காரணமா இருந்தது. படம் முழுவதும் மலேசியாவில் படமாக்கி ரிட்டர்ன் வந்து இறங்கியது படக்குழு. அப்போதுதான் விஷ்ணுவர்தனுக்கு ப்ரெஷர் எகிற ஆரம்பித்தது. அதற்கு பில்லா படத்துக்கு இருந்த எக்ஸ்பெக்டேஷன்தான் காரணம். படத்தின் டிரெயிலரும், ஆடியோவும் வெளியான பின்னர் விஷ்ணுவர்தன் பின்னிட்டாருப்பா, பிரம்மாண்டமா இருக்கே படம்னு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் விஷ்ணுவர்தனை நோக்கி வந்தது. அதற்கான சரியான உழைப்பை விஷ்ணுவர்தன் கொடுத்திருந்தார். அந்த படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் அஜித்தை செதுக்கியிருந்தார் விஷ்ணுவர்தன். மறுபடியும் தன்னுடைய ஆஸ்தான நடிகர் ஆர்யாவை வைத்து சர்வம் படத்தை இயக்கினார். படம் பில்குட் டைப்பில் இணைந்ததால் சுமாரான வெற்றியையே பெற்றது. அடுத்ததாக தெலுங்கில் பவன்கல்யாணை வைத்து ஆக்ஷன் படமான பஞ்சாவை இயக்கினார். அங்கே அதிகமான வரவேற்பு இருந்தாலும், Mixed Reviews-களால் சரியாக போகவில்லை. அடுத்ததாக மறுபடியும் அஜித்தை வைத்து ஆரம்பம் படத்தை இயக்கினார், விஷ்ணுவர்தன். இந்தமுறையும் படம் சூப்பர் ஹிட். அஜித்தை வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியிருந்தார், விஷ்ணுவர்தன். அடுத்து தயாரித்து, இயக்கிய யட்சன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து fingertip Web series-ஐ தயாரித்து ஓ.டி.டியில் வெளியிட்டார். அடுத்ததாக இந்தியில் ஷெர்ஷா மூலம் இயக்குநராக அறிமுகமானது. விக்ரம் பத்ரா எனும் கார்கில் வாரில் சண்டையிட்டு மறைந்த இராணுவவீரரின் பயோபிக்கை படமாக்கியிருந்தார். இது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. அந்த வருடத்தின் most watch movie in amazon prime என்ற பெருமையையும் பெற்றது. இதற்குப் பின்னர் படம் எதுவும் இயக்காமல் இருந்துவருகிறார், விஷ்ணுவர்தன்.
Also Read – ஆமால்ல.. ஹேட்டர்ஸ் இல்லாத டைரக்டர்ஸ் இவங்கதான்!
விஷ்ணுவர்தன் பலம்!
விஷ்ணுவர்தனின் பலமே அவரது ஸ்டைலிஷ்ஷான மேக்கிங்தான். கெரியர் ஆரம்பிச்சது முதல் இப்போது வரை இவரது மேக்கிங் நாளுக்கு நாள் மெருகேறிக்கிட்டேதான் இருக்கு. அதுக்கு சரியான உதாரணம் சொல்லணும்னா பில்லா படத்தை சொல்லலாம். முழுக்க முழுக்க க்ரே சேஃபியா டோன்ல படத்தை ஹாலிவுட் தரத்துல எடுத்திருப்பார் விஷ்ணுவர்தன். இன்னும் சொல்லப்போனால் மேக்கிங்கிற்கு ஒரு பாடமே எடுத்திருப்பார். இது சர்வம், ஆரம்பம்னு எல்லா படங்கள்லேயும் பண்ணிட்டிருக்கார். அதேபோல வசனமே இல்லாத மாஸ் காட்சி வைப்பதும் விஷ்ணுவர்தனுக்கு கைவந்த கலை. அதை அறிந்தும் அறியாமலும் படத்துல பிரகாஷ்ராஜ் லாரியில வந்து மிரட்டுற சீன்ல அவ்ளோ மாஸ் இருக்கும். அதேபோல பில்லாவில் படம் ஆரம்பிச்சு 10 நிமிடம் கழிச்சுத்தான் அஜித் டயலாக்கே பேசுவாரு. ஆனா, அதுக்கு முன்னால மூணு மாஸ் சீன்ஸ் டயலாக்கே இல்லாத மாஸ் சீனை அஜித்துக்கு வச்சிருப்பார், விஷ்ணுவர்தன். அதேபோல ஆரம்பம் படத்துல போலீஸ் கைது பண்ணி கூட்டிட்டு போறப்ப மேல கையை வைக்கிற போலீஸ் ஆபீசரை பார்த்து முறைக்கிற சீன் இன்னைக்கும் சினிமா ரசிகர்களுக்கு ஃபேவரெட். அந்த அளவுக்கு மாஸ் சீன்களை எடுக்கிறதுல விஷ்ணுவர்தன் கில்லாடி. அதேபோல இசைக்கு இன்னைக்கு வரைக்கும் இவர் நம்புறது யுவனைத்தான். யுவன்-விஷ்ணுவர்தன் கூட்டணியில வந்த எல்லா பாட்டுகளும் அதிரிபுதிரி ஹிட்டுக்கள்தான். கடைசியா அவரோட ஸ்டண்ட் கொரியோகிராஃபி ரொம்பவே முக்கியமானது. எதுவுமே ஒரே சாயல்ல இருக்காது, ஒவ்வொன்னுக்கும் ஒரு வித்தியாசம் கொடுத்து மெனெக்கெட்டு பண்ணியிருப்பார், விஷ்ணு.
அஜித்தோட துணிச்சலான ஸ்டண்ட்டை வெளிக்கொணர்ந்த முழு பெருமையும் விஷ்ணுவர்தனையே சேரும். இப்போ மறுபடியும் AK 62-ல விஷ்ணுவர்தன் பெயரும் அடிபட ஆரம்பிச்சிருக்கு. official அறிவிப்பு வர்ற வரைக்கும் வெயிட் பண்ணித்தான் பார்க்கணும். நடிகராக ஆரம்பித்து, கேமராமேன் அசிஸ்டெண்ட், உதவி இயக்குநர், இயக்குநர் என பல பரிமாணங்களில் இன்று உயரத்தின் உச்சியில் இருக்கிறார், இயக்குநர் விஷ்ணுவர்தன். எனக்கு விஷ்ணுவர்தன் இயக்கத்துல பிடிச்ச படம் பில்லாதான். உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.