உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்று, அமேசான் நிறுவனம். இந்த நிறுவனத்தை ஜெஃப் பெசோஸ் 1994-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி தொடங்கினார். சாதாரண புத்தகக் கடையாக இந்த நிறுவனத்தை தொடங்கிய அவர் படிப்படியாக வளர்த்து மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக மாற்றினார். அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுமார் 27 ஆண்டுகள் ஜெஃப் பெசோஸ் செயல்பட்டு வந்தார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 16,700 கோடி டாலர்கள் ஆகும், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் கோடி ஆகும். அமேசான் நிறுவனத்தில் தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். ஆனால், எப்போது விலகுகிறார் என்ற தேதியை அவர் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், ஜெஃப் பெசோஸ் அமேசான் ஆரம்பிக்கப்பட்ட தினமான ஜூலை 5-ல் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமேசானின் தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருந்து ஜெஃப் பெசோஸ் விலகியதை அடுத்து புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆன்டி ஜெஸே என்பவர் பொறுப்பேற்கிறார். இவர் இதற்கு முன்பாக அமேசானின் இணையவழிச் சேவைகள் தொடர்பான பொறுப்பில் இருந்து வந்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜெஃப் பெசோஸ் உடன் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார். மிகவும் சிறப்பாக தனது பணிகளை செய்யக்கூடியவராக இருக்கிறார். அதனால்தான், தலைமை நிர்வாக பொறுப்புக்கு ஜெஃப் பெசோஸ் அவரை தேர்ந்தெடுத்துள்ளார். அந்நிறுவனம் வளர்வதில் முதுகெலும்பாக இருந்து பணியாற்றியுள்ளார். ஆன்டி ஜெஸே `மேன் ஆப் மெக்கானிசம்’ என்று அழைக்கப்படுகிறார். ஆன்டி ஜெஸே அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஹார்வேர்ட் பிஸினஸ் ஸ்கூலில் படித்துள்ளார். அவருக்கு அமேசான் தலைமைப் பொறுப்பில் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றை எப்படி சமாளிக்க உள்ளார் என்பதைப் பார்க்க பிஸினஸ் மேன்கள் உட்பட பலரும் காத்திருக்கின்றனர்.
ஜெஃப் பெசோஸ் இனிமேல் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின் உள்ளிட்ட தன்னுடைய பிற நிறுவனங்களில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. உலக அளவில் பணக்கார பட்டியலில் 22 வது இடத்தில் ஜெஃப் பெசோஸ் உள்ளார். தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினாலும் செயல் தலைவர் பொறுப்பில் ஜெஃப் பெசோஸ் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது. இதன்படி ஜெஃப் பெசோஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மற்றும் பிரசாரம் தொடர்பான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : திருச்சி டு ஜார்க்கண்ட்.. பழங்குடியினர் உரிமைக்காகப் போராடிய ஸ்டேன் ஸ்வாமி யார்?