இயற்கையும் உயிரினங்களும் மனித இனத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு என்றே கூறலாம். இந்த இரண்டும் சங்கமிக்கும் புள்ளிகள் மனிதர்களுக்கு அவ்வப்போது ஆச்சரியத்தை ஏற்படுத்த தவறுவதே இல்லை. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பலரின் மத்தியிலும் வரவேற்பை பெறுவது உண்டு. அந்த வகையில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பனி சிறுத்தைப் புகைப்படம் அதிகளவில் வைரலாகி வருகிறது. ஐ.எஃப்.எஸ் அதிகாரி ரமேஷ் பாண்டே இந்தப் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து வைரலானது.
வைரலான புகைப்படத்தில் பனி சிறுத்தை ஒன்று பனிகள் நிறைந்திருக்கும் மலைப் பகுதியில் பாறைகளுக்கு இடையே உள்ளது. பாறைகளோடு பாறையாக சிறுத்தையும் மறைந்து இருப்பதால் நெட்டிசன்கள் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். சிலர் அதனைக் கண்டுபிடித்து வட்டமிட்டு கமெண்டுகளில் பதிவிட்டு வந்தனர். `Phantom cat….! They are called ghost of the mountains. If you can locate.’ என்ற கேப்ஷனோடு ரமேஷ் பாண்டே இந்த புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படத்தை அமெரிக்காவின் உட்டா பகுதியைச் சேர்ந்த ரியான் கிராகன் என்பவர் எடுத்திருந்தார். அவரையும் ரமேஷ் பாண்டே தன்னுடைய பதிவில் டேக் செய்திருந்தார்.
ரமேஷ் பாண்டே பதிவின் கமெண்டில் நெட்டிசன்கள், “கடவுளே.. என்னால் அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. நான் பலமுறை படத்தை உன்னிப்பாக கவனித்து பார்த்துவிட்டேன்; போர்டு எக்ஸாமைவிட மிகவும் கஷ்டமாக உள்ளது இந்த சிறுத்தையை கண்டுபிடிப்பது; நீண்ட இடைவேளைக்குப் பின் கண்டுபிடித்துவிட்டேன். ஆனால், மிகவும் கஷ்டமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளனர். பலர் கண்டுபிடிக்க முடியாததை ஒப்புக்கொண்டனர். இந்தப் புகைப்படத்தில் பனி சிறுத்தை எங்கு உள்ளது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதை கமெண்டில் சொல்லுங்க!
Also Read : கூடு கட்டுவது முதல் கூச்ச சுபாவம் வரை.. பாம்புகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!