உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் அதிகார வன்முறைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. இதற்கு எதிராக பெண்ணியவாதிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் ஒன்றுகூட நடைபெறாத இடம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்தோனேஷியாவில் அப்படி ஒரு காடு உள்ளது. இங்கு ஆண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெண்களுக்கு எதிராக எந்தவித குற்றங்களும் நடைபெறுவது இல்லை. பிபிசி இதுதொடர்பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உலக அளவில் இந்தக் காடு கவனத்தைப் பெற்று வருகிறது.
இந்தோனேஷியாவில் ஜெயபுரா பகுதியில் அமைந்துள்ளது இயற்கை எழில் மிகுந்த பப்புவா காடு. இங்கு பல தலைமுறைகளாக பெண்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். பெண்கள் இந்தக் காட்டுக்குள் நுழைந்து சிப்பிகளை எடுத்து சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் காட்டுக்குள் ஆண்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்றே கூறலாம். அதனை மீறி நுழைந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆட்ரியானா மெராட்ஜே என்ற உள்ளூர்வாசி இதுதொடர்பாக பேசும்போது, “நான் பிறப்பதற்கு நீண்ட காலத்துக்கு முன்பில் இருந்தே இந்தக் காடு பெண்களுக்கு மட்டுமானதாக இருந்து வருகிறது. இப்போதும் அதே விதிகளுடன் இருந்து வருகிறது. இந்தக் காட்டுக்குள் பெண்கள் நுழைய வேண்டும் என்றால் அவர்கள் ஆடைகளை அணியக் கூடாது. ஆண்கள் உள்ளே நுழைந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நாங்கள் அவர்களை பழங்குடி மக்களின் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வோம். அங்கே அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்கிறார்.
ஆட்ரியானா மெராட்ஜே, “எங்களது வளைகுடாவில் இந்தக் காடு மிகவும் முக்கியமான இடம். இந்தக் காடு இல்லாமல் எங்களால் வாழ முடியாது. காடுகளில் இருக்கும்போது மகிழ்ச்சியாக உணர்கிறோம். ஆனால், சிப்பிகளை விட அதிகமாக இப்போது பிளாஸ்டிக்களை நாங்கள் காண்கிறோம்” என்று மேலும் தெரிவித்தார். பெண்கள் சிப்பிக்களை எடுக்க காட்டுக்குள் நுழையும்போது தங்களது கதைகளைப் பரிமாற்றிக் கொள்கிறார்கள். அரி ரம்பாய்ருசி என்ற மற்றொரு கிராமவாசி இதுதொடர்பாக பேசும் போது, “நாங்கள் அனைவரும் ஒன்றாக இந்தக் காட்டுக்குள் செல்கிறோம். படகுகள் மூலம் எங்களது நண்பர்களுடன் இந்தக் காட்டுக்குள் நுழைகிறோம். நாங்கள் இந்தக் காட்டில் இருக்கும்போது சுதந்திரமாக இருக்கிறோம். ஏனெனில், ஆண்கள் யாரும் இந்தக் காட்டில் இல்லை. இது பெண்களுக்கான காடு. எனவே, நாங்கள் எங்களுடைய கதைகளை சுதந்திரமாக பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
Also Read : பெருந்தொற்று கால சவால்… ரிலேஷன்ஷிப்பில் லவ்வை உயிர்ப்போடு வைத்திருக்க 4 டிப்ஸ்!