விஜய்யோட வெறித்தனமா ஃபேன்தான் தமன். “படங்குடுங்க தலைவா, கொடுத்தாதான் அவருக்கு நான் எப்படிப்பட்ட ஃபேன்னு காட்ட முடியும். அப்படி அமைஞ்சுதுனா மியூசிக் பிரிக்கமாட்டேன். இன்ஸ்ட்ரூமெண்ட்லாம் உடைச்சு தள்ளிருவேன்”னு ஃபயர் தெறிக்க ஒரு வீடியோல பேசிருப்பாரு. இப்போ வாரிசு படம் பண்றாரு. தரமான சம்பவங்கள் காத்துட்டு இருக்கு. அதுக்கு முன்னாடி சிவகார்த்திகேயனோட பிரின்ஸ் படத்துல ஜெஸிக்கா, Who am i, பிம்பிலிக்கா பாட்டுலாம் வேறலெவல்ல இருக்கு. படத்துலயும் மியூசிக் செமயா பண்ணிருக்காரு. இதுக்கு முன்னாடி மாஸ்கோவின் காவேரி படத்துல ‘கோரே கோரே’, எனிமில ‘மால டும் டும்’, ஈஸ்வரன்ல ‘மாங்கல்யம்’, அயோக்யன்ல ‘கண்ணே கண்ணே’, ஆறாது சினம்ல ‘தனிமையே’, ஆல் இன் ஆல் அழகு ராஜால ‘யாருக்கும் சொல்லாம’ இந்தப் பாட்டுலாம் தமன் போட்டதுதான். இன்னும் பெரிய லிஸ்ட் சொல்லிட்டே போகலாம். அப்புறம், ஈரம், காஞ்சனா, மம்பட்டியான், ஒஸ்தி, ஸ்கெட்ச், மௌன குருனு பின்னனி இசைலயும் நிறைய படங்கள்ல மிரட்டியிருக்காரு. இதெல்லாம் பார்க்கும்போது யாருயா நீ? அப்டினு கேக்க தோணுதுல! வாங்க பார்ப்போம்.
சென்னையில் 1983 நவம்பர் 16-ல் பிறந்தவர் கண்டசாலா சாய் ஸ்ரீநிவாஸ் என்கிற தமன். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொட்டேபாலம் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பத்தினர் பாரம்பரியமாக இசை பின்னணியைக் கொண்டவர்கள். இவரின் தந்தை கண்டசாலா சிவக்குமார் டிரம்ஸ் வாசிப்பவர். இசையமைப்பாளர் கே.சக்கரவர்த்தி உள்ளிட்டவர்களிடம் கிட்டத்தட்ட 700 படங்களுக்கும் மேல் டிரம்ஸ் வாசித்தவர். தாயார் கண்டசாலா சாவித்ரி, சகோதரி யாமினி கண்டசாலா, சித்தி வசந்தா, மனைவி ஸ்ரீவர்த்தினி ஆகியோர் பின்னணிப் பாடகிகள். இவரது தாத்தா கண்டசாலா பாலராமய்யா டோலிவுட்டின் பிரபலமான இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராவார். நாகர்ஜூனாவின் தந்தை அக்கினேனி நாகேஸ்வர ராவை நடிகராக அறிமுகப்படுத்திய பெருமையும் இவரையே சாரும்.
சின்ன வயசுல இருந்தே டிரம்ஸ் மீது தீராத காதல் கொண்ட தமன், அதிலேயே பயிற்சியும் பெற்றார். ஆனால், 13 வயதில் தந்தையை இழந்த தமனுக்குப் படிப்பை விட இசையிலேயே ஆர்வம். அதனாலேயே ஆறாவதுக்குப் பிறகு படிப்பை விட்டுவிட்டார். அதன்பிறகு, புரஃபஷனல் டிரம்மராக பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியிருக்கிறார். எம்.எம்.கீரவாணி தொடங்கி தேவி ஸ்ரீபிரசாத் வரை இசையமைப்பாளர்கள் பலரிடமும் இவர் பணியாற்றியிருந்தாலும், தனது குருவாக இவர் மதிப்பது இசையமைப்பாளர் மணிசர்மாவைத்தார். அவருடன் எட்டு ஆண்டுகளாக 90 படங்கள் வரையில் இவர் பயணித்தார். கிட்டத்தட்ட 64 இசையமைப்பாளர்களிடம் 900 படங்கள் வரை ரிதம் புரோகிராமராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பே நடிகராக இவர் திரைத்துறைக்கு அறிமுகமாகிவிட்டார். 2003-ல் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் கேங்கில் ஒரு டிரம்ஸ் ஆர்டிஸ்ட் தேவை என்கிற இடத்தில் இவர் அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறார். தனது டீமில் இருந்த தமனை அந்தப் படத்துக்காகப் பரிந்துரை செய்தது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஷங்கரால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட தமன், கிட்டத்தட்ட 19 வருடங்கள் கழித்து அவர் ராம்சரணை வைத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் எடுக்கும் படத்துக்கு இசையமைப்பதைப் பெருமையாகக் கருதுகிறார். அந்தப் படத்துக்கான ஐந்து பாடல்களை கம்போஸ் செய்துவிட்டாராம். அவரது கரியரில் இவ்வளவு விரைவாக ஒரு படத்துக்கான பாடல்களை முடித்தது இந்தப் படத்துக்காகத்தானாம். சில பாடல்களுக்கான ட்யூன்களுக்காக மாதக்கணக்கில் உழைப்பையும் போட்டிருக்கிறார். அலே வைகுந்தபுரம்லோ படத்தின் புட்ட பொம்மா பாடல் கம்போஸிங்கை 15 நிமிடங்களில் முடித்தாராம். அதேநேரம், பீம்லா நாயக் பாடல்களுக்காகக் கிட்டத்தட்ட 6 மாதங்களைக் கடலிலேயே கழித்தாராம்.
கண்டசாலா சாய் ஸ்ரீநிவாஸ் என்கிற பெயரை ஏன் தமன் என மாற்றிக் கொண்டீர்கள் என்கிற கேள்விக்கு, அவர் சொன்ன சுவாரஸ்யமான பதில் என்ன தெரியுமா… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
2008-ம் ஆண்டு வெளியான மல்லி மல்லி தெலுங்குப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தமன். அதே ஆண்டு தமிழில் சிந்தனை செய் படம் மூலம் அறிமுகமானார். இவருக்கு பிரேக் கொடுத்த படம் 2009ம் ஆண்டு வெளியான கிக். அதன்பிறகு, வரிசையாக தமிழ், தெலுங்கில் படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். அதுவே, அவர் மீது ஒரு கட்டத்தில் விமர்சனமாக முன்வைக்கப்பட்டது. ஒரே ட்யூனையே வேற வேற மாதிரி கொடுக்கிறார் என்கிறரீதியில் விமர்சனங்கள் எழவே, 2016-ல் வெளியான Sarrainodu படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் பிரேக் எடுத்துக் கொண்டார். 2018-ல் வெளியான தொலிபிரேமா, Aravinda Sametha Veera Raghava படங்கள் மூலம் மேஜிக் நிகழ்த்தியிருப்பார் தமன். அதேபோல், Mahanubhavudu, Bhagamathi படங்கள் மூலமாக பிரமாண்ட கம்பேக் கொடுத்து அசத்தினார். அல்லு அர்ஜூனின் அலே வைகுந்தபுரம்லோ, பீம்லா நாயக் போன்ற படங்கள் இவரின் கரி படம் மிகமுக்கியமான இடம் பிடித்தவை. குறிப்பாக அலே வைகுந்தபுரம்லோ படத்துக்காக தேசிய விருதையும் இவர் வென்றார்.
Also Read – யார் இந்த ஜென்ஸி; இத்தனை ஹிட் பாடல்களை பாடியிருக்காங்க!
இயக்குநர் திரிவிக்ரமுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது இவரது சிறுவயது கனவு. அந்தக் கனவு அரவிந்த சமேதா படம் மூலம் நிறைவேறியது. மியூஸிக்கலா என்னை நானே புதியவனாக உணர வைத்தவர் திரிவிக்ரம் என்று ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். Bhaagamathie, Mahanubhavudu மற்றும் Tholi Prema ஆகிய படங்கள் வாயிலாக தனது கரியரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியதாகவும் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார். Aravinda Sametha Veera Raghava படத்தில் இடம்பெற்றிருந்த `Peniviti’ பாடல் எப்போதுமே தமனின் மனதுக்கு நெருக்கமாக அமைந்த பாடலாம். தந்தை மறைவுக்குப் பிறகு அதைக் கடந்து வருவதற்குத் தனது தாய் ரொம்பவே சிரமப்பட்டதாகவும், அந்தப் பாடல் வழியாக அந்த இழப்பின் வலியைக் கொஞ்சமேனும் கடத்தியிருப்பேன் என்றும் அதற்கான காரணத்தையும் தமன் சொல்லியிருக்கிறார். உதவியாளர்கள் நிறைய பேர் இருந்தாலுமே மியூஸிக் தொடர்பான தன்னுடைய பெரும்பான்மையான வேலைகளை அவரே செய்துகொள்வாராம். தன்னை நம்பி பெரிய பொறுப்புகளைக் கொடுப்பவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை அது என்கிறார். அதேபோல், கிரிக்கெட் என்பது அவரது Passion. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய நட்பு வட்டத்தோடு கிரிக்கெட் ஆடக் கிளம்பிடுவாராம். அது பெரிய ஸ்ட்ரெஸ்பஸ்டர் என்பது அவரின் நம்பிக்கை. அதேபோல், நண்பர்கள் மூவருடன் இணைந்து இவர் தக்காளி என்கிற பேன்டையும் நடத்தி வருகிறார்.
பெயர் மாற்றம் பற்றிய கேள்விக்கு தமன் சொன்ன பதில்… “எனக்குமே அந்தப் பெயருக்கான பொருள் தெரியாது. ஏன் அந்தப் பெயரைத் தேர்வு செய்தேன் என்று தெரியாது. எனது கம்ப்யூட்டரில் இருந்த ஃபோல்டரின் பெயர் அது. என்னுடைய வொர்க்ஸை எல்லாம் அந்த ஃபோல்டரில்தான் சேவ் பண்ணி வைப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
மியூஸிக் டைரக்டர் தமனோட பாடல்கள்ல நீங்க அடிக்கடி முணுமுணுக்குற பாடல் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!