இந்திய சினிமாவின் ‘அண்ணாத்த’ சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
* ஆரம்பகாலத்தில் படப்பிடிப்பு இடைவேளைகளில் சக நடிகர்களிடம் அரட்டை அடிப்பதை வழக்கமாக வைத்திருந்த ரஜினி, 90-களுக்குப் பிறகு புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தார். ஆனால் இப்போதெல்லாம் ஷூட்டிங் இடையே கிடைக்கும் ஓய்வில் யூடியுபில்தான் அதிக நேரத்தை செலவழிக்கிறார். அதிலும் குறிப்பாக நல்ல தரமான ஷார்ட் ஃபிலிம்களை தேடிப் பிடித்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினி.
* ஸ்பாட்டில் எப்போதும் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் கண்ணில் படும் தூரத்திலேயேதான் இருப்பார் ரஜினி. உடை மாற்றுவதற்கும் வாஷ்ரூம் பயன்படுத்துவதற்கும் மட்டும்தான் கேரவன். உதவி இயக்குநர்கள் ஷாட்டுக்கு தன்னை அழைக்க வந்துகொண்டிருக்கிறார்கள் எனத் தெரிந்தாலே இவரே எழுந்து சென்றுவிடுவார்.

* ‘பாபா’,’சந்திரமுகி’ காலகட்டம்வரை தனக்குப் பிடித்த திரை பிரபலங்களிடம் தன்னுடைய பர்சனல் செல் நம்பரை பகிர்ந்துவந்தார் ரஜினி. இன்னும் சொல்லப்போனால் அப்போதெல்லாம் ரஜினி ஒருவரிடம் தன் செல் நம்பரை தருகிறார் என்றால் அது இண்டஸ்டிரிக்குள் ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் யாராக இருந்தாலும் அவரது செல் நம்பர் தரப்படுவது கிடையாது. எதுவாக இருந்தாலும் அவரது வீட்டு லேண்ட்லைன் அல்லது மேனேஜர் சுப்பையா மூலமாகத்தான் ரஜினியைத் தொடர்புகொள்ள முடியும்.
* கண்ணாடி முன்பு நின்று நடித்துப் பார்க்கும் பழக்கம் ரஜினிக்கு உண்டு. 90-களுக்குப் பிறகு தன்னுடைய கதை விவாதங்கள் நடக்கும் ஹோட்டல் அறைகளுக்கே ஆளுயர கண்ணாடியை கொண்டு சென்று கதை வளர, வளர அதற்கேற்ப கண்ணாடி முன்பு ஸ்டைல் செய்து பார்ப்பார் ரஜினி.
* மெழுகுவர்த்தி தரும் சிறு வெளிச்சம் நிரம்பிய அரையிருட்டில் தனிமையில் இருப்பது ரஜினிக்கு மிகப் பிடிக்கும். அவுட்டோர் ஷூட்டிங் போகும்போது பெரும்பாலும் இரவு நேரங்களை இப்படித்தான் கழிப்பார் ரஜினி.

* ரஜினி என்றால் சிகரெட்.. சிகரெட் என்றால் ரஜினி என்றெல்லாம் ஒரு காலமிருந்தது. `சந்திரமுகி’ ஷூட்டிங் போவதற்கு முன்பு ரஜினியின் உதட்டில் ஒரு மைனர் அறுவை சிகிச்சை நடந்திருந்தது. அதனால் அடுத்த சில மாதங்கள் சிகரெட் பிடிக்கக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்ததால் அந்தப் படத்தில் சிகரெட் பிடிக்காமல் நடித்திருந்தார். அதே காலகட்டத்தில் அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அனைத்து நடிகர்களும் சினிமாவில் சிகரெட் பிடிப்பதை தவிர்க்கும்படி கோரிக்கை வைக்க ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு 2011-ல் அவரது உடல்நிலை சரியில்லாமல்போய் மீண்டபிறகு சிகரெட் பிடிப்பதை முற்றிலுமாகக் கைவிட்டார் ரஜினி.
* தன்னுடைய உடல் எடை ஃபிட்டாக இருக்கவேண்டும் என்பதற்காக அதிகம் மெனக்கெடுவார் ரஜினி. தான் கண்டக்டராக இருந்தபோது வைத்திருந்த சட்டை ஒன்றை இப்போதும் தன்னுடைய கேளப்பாக்கம் பண்ணைவீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறார் ரஜினி. சற்று உடல் எடை அதிகரித்துவிட்டது மாதிரி தோன்றினாலும் அங்கு சென்று அந்த சட்டையை அணிந்துபார்ப்பார். அப்போது அந்த சட்டை பொருந்தவில்லையென்றால் அங்கேயே தங்கியிருந்து அந்த சட்டை அளவுக்கேற்ப தன்னுடைய உடல் எடையைக் குறைத்துவிட்டுதான் அங்கிருந்து கிளம்புவார் ரஜினி.

* பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை தகுந்த காரணமின்றி வரவைப்பதில்லை ரஜினி. ஆனால் கடந்த சில வருடங்களாக தனது பேரன்கள் விஷயத்தில் இந்த விதிகளைத் தளர்த்தியிருக்கிறார் ரஜினி. பேரன்களின் விடுமுறை நாட்கள் என்றால் தன்னுடனே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்று, இடைவேளை நேரங்களில் அவர்களுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினி.
Also Read – கே.பாலசந்தரின் `சிந்து பைரவி’ ஏன் கொண்டாடப்பட்டது – 4 காரணங்கள்!