கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் சங்கரய்யா இன்று 100-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எண்பதாண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சங்கரய்யா – தோழர் சங்கரய்யாவான தருணம் தெரியுமா?
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறும் தோழர் சங்கரய்யாவின் வாழ்வும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. கோவில்பட்டியில் 1922-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி நரசிம்மலு – ராமானுஜம் தம்பதியின் மகனாகப் பிறந்தார். தந்தையின் பணி காரணமாக இவரது குடும்பம் சிறுவயதிலேயே மதுரைக்குக் குடிபெயர்ந்தது. கல்லூரி படிப்பை பாதியில் விட நேரந்த சூழலில் விடுதலைப் போரில் பங்கெடுத்தார். அதன் காரணமாக சிறைசென்று திரும்பியவர் விடுதலைக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து, தீண்டாமை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்தார். இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்திலும் குரலற்றவர்களின் குரலாக ஒலித்தது சங்கரய்யாவின் குரல்.
தோழர் சங்கரய்யா குறித்த 8 சுவாரஸ்ய தகவல்கள்!
- மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றபோது சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்திருந்த நிலையில், மாணவர் சங்கத்தைத் தொடங்கினார். அதன் செயலாளராகப் பொறுப்பேற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 1941-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கைதுக்கு எதிரான போராட்டத்துக்காகக் கைது செய்யப்பட்டார். கல்லூரி இறுதியாண்டுத் தேர்வு நடக்க 15 நாட்கள் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதால், படிப்பைத் தொடர முடியாமல் போனது.
- சுயமரியாத இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த சங்கரய்யாவின் கவனம் தேசிய விடுதலைப் போராட்டங்களின் பக்கம் திரும்பியது. அப்போதைய சூழலில் `பூரண சுதந்திரமே இலக்கு’ என்று கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதனால், அப்போது தடை செய்யப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
- 1942-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த சூழலில் அக்கட்சியின் கொல்கத்தா மாநாட்டில் கலந்துகொண்டதற்காக தேடப்படும் நபரானார். இதனால், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். தலைமறைவு வாழ்வின் போது சலவைத் தொழிலாளி ஒருவரின் வீட்டில் அவர் பதுங்கியிருந்ததாக பிற்காலத்தில் தகவல்கள் வெளியாகின.
- 1945-ல் ஏ.ஐ.டி.யூ.சி-யின் தேசிய மாநாடு அப்போதைய மெட்ராஸில் நடந்தது. எஸ்.ஏ.டாங்கே, சர்க்கரைச் செட்டியார் என தேசியத் தலைவர் பலர் கலந்துகொண்ட பிரமாண்ட மாநாட்டை நடத்தி முடித்ததில் இளைஞராக இருந்த சங்கரய்யாவின் பங்கு மிகப்பெரியது. மாநாட்டுப் பணிகளில் இருந்தபோது தந்தை இறந்த செய்தி கிடைக்கவே, இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு, மறுநாளே மாநாட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். மாநாட்டில் அவர் ஆற்றிய உரை அங்கிருந்த தலைவர்கள் பலரையும் கவர்ந்தது.
- 1946-ல் மதுரையில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தை அடுத்து பிரபலமான மதுரை சதி வழக்கின் பி.ராமமூர்த்தி, சங்கரய்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது ஏறக்குறைய ஒராண்டு சிறைவாசம் அனுபவித்த அவர் விடுதலைக்கு ஒரு நாள் முன்னர் அதாவது 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவில்தான் விடுவிக்கப்பட்டார்.
- சுதந்திரத்துக்குப் பிறகு அகில இந்திய விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் தலைவராகவும் பதவி வகித்த அவர், பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். 1964-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 32 உறுப்பினர்கள் பிரிந்துவந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினர். அவர்களில் ஒருவராக இருந்தவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்திருக்கிறார். அவர்களில் கேரள முன்னாள் முதல்வர் கே.எஸ்.அச்சுதானந்தனும் இவரும் மட்டுமே இப்போது உயிருடன் இருக்கிறார்கள்.
- முதல்முறையாக 1967-ல் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நுழைந்த சங்கரய்யா, மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். விவசாயிகள் தொடங்கி பல்வேறு தரப்பினருக்காகவும் அவரின் குரல், பேரவையில் ஓங்கி ஒலித்தது.
- 2017 ஜூன் மாதத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சேலத்தில் இருந்து சென்னை வரை நடத்திய நடைபயணத்தின் முடிவில் தாம்பரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 95 வயது சங்கரய்யா, `சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று முழக்கமிட்டார்.