யானைகள் எப்போதும் மனிதர்களுக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய விலங்காகவே இருந்து வருகிறது. பெரும்பாலான மனிதர்களின் ஃபேவரைட் விலங்கு பட்டியலில் யானைகளுக்கும் ஓர் இடம் உண்டு. இதனால், யானைகள் தொடர்பான செய்திகள் வெளிவரும்போது அவை சர்வதேச அளவில் கவனத்தையும் பெறுகின்றன. அந்த வகையில், தற்போது சீனாவில் தங்களது இயற்கையான வசிப்பிடத்தை விட்டு வெளியேறிய யானைக் கூட்டம் ஒன்று சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த யானைகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் செம வைரல்.
சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுனான் பகுதியில் இருக்கும் ஒரு சரணாலயத்தில் இருந்து தப்பிய ஆசிய யானைகளின் கூட்டம் கடந்த 3-ம் தேதி மக்கள் வசிப்பிடத்துக்குள் நுழைந்தது. இந்த யானைகள் பாதைமாறி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களது வசிப்பிடத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிளம்பிய இந்த யானைக்கூட்டம் சுமார் 500 கி.மீ பயணம் செய்து யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங் எனும் நகருக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த யானைகளை பத்திரமாக வனத்துக்குள் விரட்டும் பணிகளை வனத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனை, சீனாவின் அரசு தொலைக்காட்சி ஒன்று யானையை வனத்துக்குள் விரட்டும் பணிகளை நேரலையாக மக்களுக்கு காண்பித்து வருகிறது. இது சீன மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் பலர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆன்லைன் வழியாக மில்லியன் கணக்கான மக்கள் அவற்றின் நடவடிக்கைகளை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், யானைகள் நகரங்களின் பல பகுதிகளிலும் சுற்றித்திரியும் வீடியோக்கள் மற்றும் நகரங்களின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தங்களது குட்டிகளுடன் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கின. இந்தியாவைச் சேர்ந்த பர்வீன் கஸ்வான் என்ற வனத்துறை அதிகாரி குட்டியை மத்தியில் படுக்க வைத்து சுற்றி யானைகள் தூங்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “யானைகள் எப்படி தூங்குகின்றன என்று பார்க்க விரும்புகிறீர்களா?” என்று கேப்ஷன் எழுதியுள்ளார். சில வீடியோக்கள், நெட்டிசன்களிடையே அதிக கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், யானைகள் பரபரப்பான போக்குவரத்துக்கு மத்தியில் செல்கின்றன. இந்த யானைகள் ஏன் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேறின? அவைகள் எங்கு செல்ல இருக்கின்றன? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் விளைவாக யானைகள் வெளியே வந்திருக்கலாம் என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எனினும். இதுவரை எந்த தகவலும் உறுதிபடுத்தப்படவில்லை. அதிகாரிகள் யானைகள் செல்லும் வழிகளை ட்ரோன் மூலமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கு முன்பு இப்படியொரு நிகழ்வு நடந்ததில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
குடியிருப்பு பகுதிகளை யானைகள் தாக்கமல் இருப்பதற்காக அதிகாரிகள், ஆறுகளின் ஓரங்களைச் சுற்றி டிரக்களை நிறுத்தி வைப்பது, மின்வேலிகளை அமைப்பது போன்ற தடைகளை அமைத்து வைத்துள்ளனர். யானைகள் பொதுசொத்துகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க அவைகளுக்கு தேவையான உணவுகளையும் வனத்துறை சார்பில் அமைத்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் யானைகளை அவைகளின் இருப்பிடத்தை நோக்கி வழிகாட்டும் என அதிகாரிகள் நம்புகின்றனர். மக்களின் நலன் கருதி நூற்றுக்கணக்கான மக்களை குடியிருப்பு பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்துக்கும் அனுப்பியுள்ளனர். “காலநிலை மாற்றம் தொடர்பாக பிற விலங்குகளும் இதனை செய்யத் தொடங்கிவிட்டால் என்ன ஆகும்?” என்றும் யானைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அவைகள் பத்திரமாக தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டும்” என்றும்
“யானைகள் மனதில் தற்போது என்ன நினைத்துக்கொண்டிருக்கும்?” என்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். யானைகள் பயிர்கள் உள்ளிட்டவற்றை மிதித்து ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
Also Read : விண்வெளிக்கு பறக்கத் தயாராகும் ஜெஃப் பெசோஸ் – யார் இவரு?