உலகின் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து டெஸ்லா இணை நிறுவனர் எலான் மஸ்க் வாங்கியிருக்கிறார். அந்த நிறுவனம் விரைவில் அவர் கைக்குப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ட்விட்டரில் அடுத்தது என்ன?
ட்விட்டர் – எலான் மஸ்க்
சமூக வலைதளங்களில் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிகமாக விவாதிக்கப்படும் தளமாக ட்விட்டர் இருந்து வருகிறது. அந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், பல்வேறு சவால்களை அந்த நிறுவனம் சந்தித்து வந்தது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் போலவே, ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியும் இந்தியாவைச் சேர்ந்தவர்தான். ட்விட்டரை மொத்தமாகக் கைப்பற்ற 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிற ஆஃபரை எலான் மஸ்க் அறிவித்தபோது, தொடக்கத்தில் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ பராக் அக்ராவல் உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. எலான் மஸ்குக்கு எதிராக ‘Poison Pill’ என்கிற வியாபார தந்திரத்தை ட்விட்டர் நிர்வாகக் குழு கையிலெடுக்க முடிவு செய்தது. ஆனால், அந்த சூழல் மாறி எலான் மஸ்கின் ஆஃபரை ஏற்றுக்கொள்ள ட்விட்டர் முடிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ட்விட்டரின் ஓனர்ஷிப் மொத்தமாக எலான் மஸ்குக்குக் கைமாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது என்ன?
எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய தகவலை ஊழியர்கள் மத்தியில் வீடியோ கால் வழியாகப் பேசி உறுதி செய்த ட்விட்டர் சி.இ.ஓ பராக் அக்ராவல், நிறுவனத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கலாம் என்பது பற்றியும் பேசியிருந்தார். ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பாக உடனடியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படப்போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கும் அவர், நிறுவனத்தின் தலைமை மாறும் வரை (இந்த ஆண்டு இறுதி வரை) வழக்கம்போல் நாம் எப்படி முடிவெடுப்போமோ அதேபோல்தால் எல்லா முடிவுகளையும் எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
தலைமை மாற்றம் பற்றி பேசிய அவர், ’எதுவுமே மாறாது என்பது இதன் பொருள் அல்ல. மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த மாற்றங்கள் நேர்மறையான மாற்றங்களாக இருக்கும் என்பது பற்றிதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அதை நாம் தொடர்ந்து செய்துகொண்டேதான் இருப்போம். அதுவே நம்மை வலிமையானவர்களாக இருக்க வைக்க உதவும். விற்பனை பற்றிய டீல் முடிவுக்கு வரும்போது, அதுபற்றிய முடிவுகள் எடுக்கப்படும்’ என்றார்.
அதேபோல், ட்விட்டர் ஊழியர்களின் ஊதியத்தைப் பொறுத்தவரை முழுக்க, முழுக்க தனியார் நிறுவனம் என்கிற வகையில், எலான் மஸ்க் அதற்கென தனி திட்டம் வகுப்பார் என்று கூறப்படுகிறது. அதேபோல், ட்விட்டர் நிறுவன ஊழியர்களுக்கு பங்குகளைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆப்ஷனும் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. ட்விட்டரை மொத்தமாகக் கைப்பற்றிய பிறகு, இரண்டாது முறையாக அதன் பங்குகளை வெளியிடும் திட்டத்தை எலான் மஸ்க் வைத்திருக்கிறாரா என்பது பற்றி இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இதுகுறித்து ட்வீட் செய்த எலான் மஸ்க்,’ட்விட்டரை இன்னும் சிறப்பானதாக மாற்றுவோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.