தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களோடு புதுவைக்கும் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. புதுவையைத் தவிர்த்து தேர்தல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில் புதுவையில் மட்டும் அமைச்சரவை இன்னும் பதவி ஏற்கவில்லை. புதுவையில் பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் இடையே சபாநாயகர் தேர்வு மற்றும் அமைச்சர்கள் பங்கீடு ஆகியவை இழுபறியில் இருந்து வந்ததால் அமைச்சரவை பதவியேற்பதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது. இந்த நிலையில் புதுவையின் சபாநாயகராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஏம்பலம் செல்வம் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
புதுச்சேரியில் மொத்தமாக 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறவில்லை. தேர்தலில் பா.ஜ.க 6 தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனால், இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியமைத்து புதுவையில் ஆட்சியை தக்க வைத்தது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரங்கசாமி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். எனினும், சபாநாயகர் தேர்வு மற்றும் அமைச்சரவை பங்கீடு தொடர்பாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நடந்து வந்தது. ஒருவழியாக கடைசியில் பா.ஜ.க-வுக்கு சபாநாயகர் பதவியும் இரண்டு அமைச்சர் பதவியையும் தர புதுவை முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார். அமைச்சர்கள், சபாநாயகர் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து இரண்டு கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தின.
தீவிர ஆலோசனையின் முடிவில் அமைச்சர் பதவிகளில் நமச்சிவாயம் மற்றும் ஜான்குமார் ஆகியோரை நியமிக்கவும் சபாநாயகராக ஏம்பலம் செல்வத்தை நியமிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான முடிவை எம்.பி ராஜீவ் சந்திரசேகர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தெரிவித்தார். இதனையடுத்து, சட்டமன்றத்தைக் கூட்டி சபாநாயகரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சபாநாயகர் பதவிக்கு நேற்று நண்பகல் 12 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, சபாநாயகர் தேர்தலில் போட்டியிட முதல்வர் ரங்கசாமியின் முன்னிலையில் ஏம்பலம் செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார். எதிர்கட்சிகள் யாரும் வேட்புமனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி ஒருமனதாக செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுவையின் சாபாநாயகராக ஏம்பலம் செல்வத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக இன்று காலை சட்டசபையானது கூடியது. தற்காலிக சபாநாயகராக இருந்த லட்சுமி நாராயணன் சபை நிகழ்வுகளை தொடங்கினார். பின்னர், ஒரே ஒருவரே மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி ஏம்பலம் செல்வம் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்தார். முதல்வர் ரங்கசாமி, எதிர்கட்சித்தலைவர் சிவா ஆகியோர் செல்வத்தை அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரை வாழ்த்தி பேசினர். இறுதியில் சபாநாயகர் ஏற்புரையாற்றினார். நிகழ்வுகள் முடிந்ததும் சபாநாயகர் செல்வம் சபையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
பா.ஜ.க-வைச் சேர்ந்த ஏம்பலம் செல்வம் நடந்து முடிந்த தேர்தலில் மணவெளி தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுவையில் உள்ள ரெட்டியார்பாளையம் தொகுதியில் இருந்து கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த 2001-ம் ஆண்டு புதுவை சட்டமன்றத்துக்கு பா.ஜ.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு, பா.ஜ.க-வைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லை. ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஆறு பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதுவை அரசியல் வரலாற்றில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை. அதுமட்டுமல்ல ஏம்பலம் செல்வம் முதன்முறையாக சட்டமன்றத்துக்கு தேர்வாகியுள்ளார். இவர் புதுவை சட்டமன்றத்தின் 21-வது சபாநாயகர் ஆவார்.
Also Read : குகை வாழ்க்கை முதல் ஃபேவரைட் கார் வரை.. ஜி ஜின்பிங் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!