டி20 கிரிக்கெட்டைத் தொடர்ந்து இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால், வொயிட் பால் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலியின் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக கோலியின் செயல்பாடுகள் எப்படி?
டி20 கேப்டன்சி
சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு டி20 போட்டிகளில் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி கடந்த செப்டம்பரில் அறிவித்திருந்தார். அதேபோல், 2021 ஐபிஎல் தொடருக்குப் பின்னர் ஆர்சிபி கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகப் போவதாகவும் தெரிவித்திருந்தார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலி தொடர்வார் என்று கூறப்பட்டது. அதேநேரம், வொயிட் பால் கிரிக்கெட்டில் இரண்டு கேப்டன்களின் கீழ் இந்திய அணி விளையாட வேண்டுமா… டி20-யைப் போலவே ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் ரோஹித் ஷர்மாவையே கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரலும் எழுந்தது. இந்த மாற்றம் நிகழும் வாய்ப்புகள் அதிகம் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்திருந்தனர். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் இந்த மாற்றம் நிகழும் என்பதை எவருமே எதிர்பார்க்கவில்லை. தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடும் இந்திய ஒருநாள் அணிக்கான கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
சர்ச்சையில் பிசிசிஐ
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களுள் ஒருவரான விராட் கோலியை ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்சியில் இருந்து பிசிசிஐ நீக்கியிருக்கும் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்த விவாதமும் வலுப்பெற்றிருக்கிறது. அதேநேரம், கேப்டன் பொறுப்பில் இருந்து விலக தென்னாப்பிரிக்க தொடருக்கான அணி அறிவிப்புக்கு முன்னர் 48 மணி நேரம் அவகாசத்தை பிசிசிஐ விராட் கோலிக்கு அளித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், விராட் கோலியிடமிருந்து எந்தவொரு பதிலும் வராததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பிசிசிஐ தரப்பில் சொல்லப்படுகிறது. பிசிசிஐ-யின் இந்த முடிவால் கோலி அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால், தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரைப் புறக்கணிக்க விராட் கோலி முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மும்பையில் தொடங்கிய பயிற்சியில் அவர் பங்கேற்காததை மேற்கோள் காட்டி இதைச் சொல்கிறார்கள்.
டி20 கேப்டன்சியில் இருந்து விலகிய பிறகு, இந்திய ஒருநாள் அணிக்கு 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் வரை தலைமை வகிக்க விராட் கோலி விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் பொறுப்பை ரோஹித் ஷர்மாவிடம் ஒப்படைக்க தேர்வுக் குழு முடிவெடுத்தது.
கேப்டன் விராட் கோலி
2017-ம் ஆண்டு தோனிக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற கோலி, கேப்டனாக முதல் தொடரான இங்கிலாந்து ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வெற்றியோடு தொடங்கினார். அதன்பிறகு, விராட் கோலி தலைமையில் இருநாடுகள் இடையிலான பைலேட்ரல் சீரிஸ் எனப்படும் 19 ஒருநாள் தொடர்களில் விளையாடியிருக்கிறது. இதில், 15 தொடர்களில் வென்றிருக்கிறது இந்திய அணி.
2017-க்குப் பிறகு 95 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை கோலி வழிநடத்தியிருக்கிறார். இதில், இந்திய அணி 65 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. வெற்றி சதவிகிதம் 70.43. சர்வதேச அளவில் வெற்றிகரமான ஒருநாள் கேப்டன்கள் (குறைந்தபட்சம் 90 போட்டிகள்) வரிசையில் கோலி மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (76.14%) முதல் இடத்திலும் தென்னாப்பிரிக்க கேப்டன் ஹன்ஸி குரேனியே (73.70%) இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.
இந்திய கேப்டன்களைப் பொறுத்தவரை தோனி தலைமையில் 110 போட்டிகள், முகமது அசாருதின் தலைமையில் 90, தற்போதைய பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தலைமையில் 76 வெற்றிகளை இந்திய அணி பெற்றிருக்கிறது. இந்தப் பட்டியலில் விராட் கோலி நான்காவது இடத்தில் இருக்கிறார்.
ரன் மெஷின்
ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி, 95 போட்டிகளில் 21 சதங்கள் உள்பட 5,449 ரன்கள் குவித்திருக்கிறார். பேட்டிங் சராசரி 72.65%. சர்வதேச அளவில் ஒருநாள் கேப்டன்களில் பேட்டிங் சராசரி (குறைந்தபட்சம் 75 போட்டிகள்) விகிதத்தில் விராட் கோலியே முதலிடம் பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் அவரது ஆர்சிபி முன்னாள் சகாவான டிவிலியர்ஸ் (103 போட்டிகளில் சராசரி 63.94%) இருக்கிறார். அதேபோல், கேப்டனாக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்குக்கு (22) அடுத்தபடியாக இரண்டாவது இடம் கோலிக்கு.
ஐசிசி தொடர்கள்
விராட் கோலி தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி தொடர்களில் விளையாடியிருக்கிறது. 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்தான் கேப்டனாக விராட் கோலிக்கு முதல் ஐசிசி தொடர். அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதற்கடுத்ததாக 2019 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை. இதனால், ஐசிசி தொடர்கள் விராட் கோலிக்கு ராசியில்லாத தொடர்களாகவே கருதப்படுகிறது.
Also Read – Ravindra Jadeja: தவிர்க்க முடியா ஆல்ரவுண்டர்… ரவீந்திர ஜடேஜா எனும் மேஜிக் மேன்!