வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஆக்ஸ்ட் 5-ல் தீர்ப்பளிக்கிறது.
நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். அந்த காருக்கு நுழைவு வரியாக 60.66 லட்ச ரூபாய் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனால், ஆர்.டி.ஓ அலுவலகத்தில் காரைப் பதிவு செய்ய முடியாமல் இருந்தது. இதை எதிர்த்து தனுஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது 50% வரி செலுத்தினால் காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என 2015 அக்டோபரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு ஏற்கெனவே இறக்குமதி வரி கட்டியிருப்பதால், நுழைவு வரி விதிக்க முடியாது என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி நுழைவு வரி விதிப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் போடப்பட்டன. அவை நிலுவையில் இருக்கின்றன. கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நுழைவு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக கடந்த 2019-ல் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் வழக்கு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு, அந்தத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்க உத்தரவிட்டார். மேலும், வரி செலுத்தாமல் இருந்தால் இரண்டு வார காலத்துக்குள் செலுத்தவும் உத்தரவிட்டிருந்தார். அந்தத் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்த சில வார்த்தைகள் தனக்கு எதிராக இருப்பதாகக் கூறி விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விஜய் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் வி.நாராயண், வரி செலுத்தத் தயாராக இருப்பதாகவும் வாதிட்டார். சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பாக சுமார் 500 வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது விஜய்க்கு எதிரான வழக்கின் தீர்ப்பில் மட்டும் இதுபோன்ற அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.துரைசாமி, ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மொத்த வரி பாக்கியில் 80% வரியை ஒரு வார காலத்துக்குள் செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
தனுஷ் வழக்கு
இந்தசூழலில், கடந்த 2015-ல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. நடிகர் விஜய் வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன் இந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்க இருக்கிறார். ஐம்பது சதவிகித வரி செலுத்துவதாகக் கூறியதை அடுத்து உரிய விதிகளைப் பின்பற்றி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தனுஷின் காரைப் பதிவு செய்துகொள்ளலாம் என உயர் நீதிமன்றம் 2016-ம் ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டிருந்தது.