டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக டெல்லி சென்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களை அவர்கள் சந்தித்துப் பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தனர். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர்கள்,. சசிகலா விவகாரம், உள்ளாட்சித் தேர்தல், அமைச்சரவை விரிவாக்கத்தில் அ.தி.மு.க-வுக்கு இடம் கிடைக்காதது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பா.ஜ.க தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியானது.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அறையில் காலை 11.05 முதல் 11.30 வரை 25 நிமிடங்கள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 5 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அந்த மனுவில் மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
மரியாதை நிமித்தமான சந்திப்பு என அ.தி.மு.க தரப்பில் கூறப்பட்டாலும் அரசியல்ரீதியாகவே இந்த சந்திப்பு இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் எல்.முருகன், ஆறு மாதத்துக்குள் எம்.பியாக வேண்டும் என்பதால், இதுபற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் மேற்கொண்ட பிரதமருக்கு நானும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் நன்றி தெரிவித்தோம். தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி தேவையான அளவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். கர்நாடகவில் மேகதாது அணைகட்ட அனுமதி வழக்க கூடாது என கோரிக்கை வைத்துள்ளோம்.
தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ளது. எனவே, கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாட்டில் சாலைகள் அமைக்கும் பணியை விரைவுபடுத்த கேட்டுக் கொண்டோம். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படை தாக்குதலைத் தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்துள்ளோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நன்மைக்காக தொடர்ந்து பாடுபடும் கட்சி அ.தி.மு.க’’ என்று தெரிவித்தார். இதையடுத்து, ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சசிகலா கூறியிருக்கிறாரே… அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், சசிகலா பற்றிய கேள்விக்குப் பதிலளிக்காமல் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு கிளம்பினார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி உள்ளிடோரையும் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.