Children Instagram

சிறுவர்களுக்குப் பிரத்யேக இன்ஸ்டாகிராம்… ஃபேஸ்புக்கின் திட்டம் எழுப்பும் கேள்விகள்!

முன்னணி சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக், 13 வயதுக்குக் குறைவான சிறுவர், சிறுமிக்கென பிரத்யேகமாக இன்ஸ்டாகிராம் தளத்தை வடிவமைக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. உண்மையில் இது அவசியம்தானா?

இன்ஸ்டாகிராம்

உலகின் முன்னணி போட்டோ ஷேரிங் ஆப்பான இன்ஸ்டாகிராம் உலக அளவில் பல பில்லியன் பயனாளர்களைக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள சூழலில் இன்ஸ்டாகிராமை 13 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், 13 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களுக்கென பிரத்யேக இன்ஸ்டாகிராமை வடிவமைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

Instagram

இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொஸேரி இந்தத் தகவலை சமீபத்தில் உறுதிப்படுத்தியிருந்தார். அவர், “இன்ஸ்டாகிராமில் இணைந்து தங்களது நண்பர்களோடு இணைப்பில் இருக்கலாம் என்பதால், அதில் இணைய வேண்டும் என பல சிறுவர்/சிறுமிகள் தங்கள் பெற்றோர்களிடம் கேட்பது அதிகரித்து வருகிறது. ஃபேஸ்புக் மெசெஞ்சர் கிட்ஸ் போன்றே பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்படியான, சிறுவர்கள் பயன்படுத்தும் பிரத்யேக இன்ஸ்டாகிராம் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இதுகுறித்த தகவல்களைப் பகிர்கிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்.

மெசெஞ்சர் கிட்ஸ்

ஃபேஸ்புக் நிறுவனம் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கென பிரத்யேக மெசெஞ்சர் கிட்ஸ் செயலியைக் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தியது. வீடியோ காலிங் மற்றும் மெசேசிங் வசதி கொண்ட இந்த செயலியை ஸ்மார்ட்போன், டேப்ளெட்டுகளில் இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும். செயலியின் காண்டாக்ட் லிஸ்ட்டைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றோர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இது அறிமுகப்படுத்தி 2 ஆண்டுகளுக்குப் பின்னர் 2019ல் மெசெஞ்சர் கிட்ஸ் செயலி சர்ச்சையில் சிக்கியது.

அந்த செயலியில் இருந்த ஒரு சாஃப்ட்வேர் பிரச்னை, குழந்தைகள் அந்த ஆப் மூலம் அறிமுகமில்லாத பெரியவர்களுடனும் சாட் செய்ய முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவில் நீதிமன்ற கண்டனத்தையும் பெற்றது. பின்னர், அந்த பிரச்னை சரிசெய்யப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்தது.

கிட்ஸ் இன்ஸ்டாகிராமைச் சுற்றும் சர்ச்சை!

சமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் அமெரிக்க நிறுவனமான பார்க், கடந்த 2020ம் ஆண்டு இ-மெயில், யூ டியூப், செல்போன் மெசெஜிங் செயலிகளின் அடிப்படையில் நடத்திய ஆய்வின்படி, 45.5 சதவிகித ப்ரீ டீன்ஸ் எனப்படும் பதின்பருவத்தினரும் 66.3 சதவிகித டீனேஜர்களும் மன அழுத்தம் குறித்து பேசுவதாகத் தெரியவந்திருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்பட 30-க்கும் மேற்பட்ட செயலிகளில் 2 கோடிக்கும் அதிகமான குறுஞ்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு இது. அதேபோல், தற்கொலை, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வது ஆகியவை குறித்தும் அவர்கள் பேசிக்கொள்ளும் போக்கு அதிகரித்திருப்பதாகவும் பார்க் அமைப்பு கூறுகிறது. மேலும், 70% ப்ரீடீன்ஸ், 87.9% டீனேஜர்கள் ஆன்லைனில் ஆபாசத்தை எதிர்க்கொள்ளும் சூழல் ஏற்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

Facebook

மெசெஞ்சர் கிட்ஸ் செயலிக்கு அமெரிக்க செனட்டர்கள் பலர் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தசூழலில் 13 வயதுக்கும் குறைவானவர்களுக்கான இன்ஸ்டாகிராம் செயலியை அறிமுகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க்குக்கு அமெரிக்காவின் 30 செனட்டர்கள் இணைந்து கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில், `சமூக வலைதளப் பயன்பாடு என்பது குழந்தைகளின் உளவியலையும் உடல் நலனையும் பாதிக்கக் கூடியது. சமூக வலைதளத்தில் ஒரு கணக்கு வைத்திருப்பதால் ஏற்படும் சவால்களை எதிர்க்கொள்ளக் கூடிய பக்குவம் அவர்களுக்கு இருக்காது’ என்று அமெரிக்க செனட்டர்கள் தங்கள் எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கொலம்பியா உள்ளிட்ட 3 மாகாண அட்டர்னி ஜெனரல்களும் கையெழுத்திட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், `ஃபேஸ்புக் குழந்தைகளின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்பதற்கு ஏற்கனவே உதாரணம் இருக்கிறது’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், கமர்ஷியல் ஃப்ரீ சைல்ட்ஹூட் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமின் புது திட்டத்துக்கு எதிராக பிரசாரமும் அமெரிக்காவில் கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளர்கள், ஃபேஸ்புக் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

13 வயதுக்குட்பட்டோருக்கென பிரத்யேக இன்ஸ்டாகிராமை உருவாக்க நினைக்கும் ஃபேஸ்புக்கின் திட்டத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?… உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Also Read – இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஆன்ட்ராய்ட் போன்களுக்கு ட்விட்டர் தரும் வசதி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top