பட்டிமன்றம் ராஜா ஃபேமஸான டிவி பெர்சனாலிட்டி, சில படங்களில் நடிச்சும் நமக்கு நடிகரா அறிமுகமானவர்… ஆனால், அவர் முதன்முதல்ல பட்டிமன்றத்துல எப்படி பேச வந்தார்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க.. அதேமாதிரி அவருக்கும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கும் இருக்கும் எமோஷனல் கனெக்ட் தாண்டி அவங்களுக்குள்ள இருக்க பந்தம் தெரியுமா… 2016-க்குப் பிறகு அவர் சினிமாவுல நடிக்குறதை ஏன் குறைச்சுக்கிட்டார்… இப்படி பட்டிமன்றம் ராஜாவோட கதையைத் தான் இந்த வீடியோவுல நாம பார்க்கப்போறோம்.
மதுரை பக்கத்துல கீழாமத்தூர்ல பிறந்த ஒரு பையன் முதல்ல டிரைவராகணும்னு ஆசைப்படுறான். அப்பா, அம்மா ரெண்டுபேருமே டீச்சர்ஸா இருந்தாலும் வீட்ல கடுமையான வறுமை. அத்தனை விஷயங்களையும் போராடி வென்றதோடு, படிச்சு ஒரு பேங்க் வேலைக்குப் போறார். ஆனாலும், அதிலிருந்து பட்டிமன்ற மேடை, டிவி, சினிமானு ஒரு அசுர வளர்ச்சி அடையுறாரு. தொடக்கக் கல்வியை சொந்த ஊரிலும் மேல்நிலைக் கல்வியை மதுரையிலும் முடிச்ச அவருக்கு அமெரிக்கன் கல்லூரியில் பியூசி படிக்க வேண்டும் என்கிற ஆசை… அந்த ஆசையில் நேரே அமெரிக்கன் கல்லூரி சென்று அதற்கான விண்ணப்பத்தை வாங்குகிறார். ஆனால், 87.50 பைசா பீஸ் கட்ட வேண்டும் என்று அவர்கள் சொன்னபோது, நமக்கு இடம் கிடைக்குமா… இதை வீட்டில் கட்டி நம்மைப் படிக்க வைப்பாங்களா என்கிற சந்தேகம் வந்திருக்கிறது. வாசலில் நின்றபடியே அழுதுகொண்டிருந்த இளம் ராஜாவை, அப்போது அமெரிக்கன் கல்லூரி பேராசிரியராக இருந்த சாலமன் பாப்பையா பார்க்கிறார். அவரை அருகில் அழைத்து, ஏண்டா இப்படி அழுதுட்டு இருக்க என்று காரணம் கேட்கவும், இவர் பீஸ் கட்ட காசு இல்லாத விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். இது நடந்தது 1976-ம் ஆண்டு. அப்போதே ராஜாவை அழைத்துச் சென்று பீஸ் கட்டியிருக்கிறார் பாப்பையா… அப்போது தொடர்ந்த இவர்களது பந்தம் இன்றுவரையில் நீடிக்கிறது. ஸ்கூல், காலேஜ் லெவலில் எப்பவும் டாப் ஸ்டூண்டாக இருந்த ராஜா, சாலமன் பாப்பையாவை சந்தித்தது அது முதல் நிகழ்வல்ல. இவர்களின் முதல் சந்திப்பு ஆக்ஸிடெண்டலாக நடந்தது.
மதுரையில் பள்ளிப் படிப்பில் ராஜா மின்னிக் கொண்டிருந்த ஒருநாள், அவர் பள்ளியில் இலக்கிய மன்றத்தைத் தொடங்கி வைக்க அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் சாலமன் பாப்பையா வந்திருக்கிறார். இலக்கியமன்றச் செயலாளர் என்கிற அடிப்படையில் அரைக்கால் டவுசரோடு அவர் முன் நிகழ்ச்சி நிரலை மேடையில் வாசித்திருக்கிறார். அதுதான் சாலமன் பாப்பையா முன்னிலையில் அவரின் முதல் மேடைப்பேச்சு. நிகழ்ச்சி முடிந்ததும் மீட்டிங் மினிட்ஸை எழுதி சிறப்பு விருந்தினரான சாலமன் பாப்பையாவிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார். அதுதான் நான் அவரிடம் வாங்கிய முதல் ஆட்டோகிராஃப் என பல இடங்களிலும் பகிர்ந்திருக்கிறார் ராஜா. பள்ளி நாட்களில் மதுரைக்குப் பேருந்தில் வந்து சென்ற ராஜாவுக்கு, அந்நாட்களில் எப்படியாவது ஒரு டிரைவராகிவிட வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்திருக்கிறது. பின்னாட்களில் வங்கி வேலைக்குச் சென்றாலும், இலக்கிய ஆர்வத்தால் சாலமன் பாப்பையா கலந்துகொள்ளும் பட்டிமன்றங்களுக்கெல்லாம் அவருடனேயே அவரின் பையைத் தூக்கிக் கொண்டு செல்வாராம். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொண்டு மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து பட்டிமன்றங்களைக் கேட்பது அலாதியான சுகம் என்கிறார். 1976-ம் ஆண்டு முதலே சாலமன் பாப்பையா அவர்களுடன் பயணித்திருந்தாலும் ராஜா முதல்முறையாக பட்டிமன்ற மேடையேறியது 1991-ல்தான். விபத்துபோலத்தான் அந்த வாய்ப்பும் ராஜாவுக்கு வந்திருக்கிறது. அது 1991 ஜூலை 15ம் தேதி. அன்று மதுரை சொக்கலிங்கம் நகரில் தெருவில் நடந்த பட்டிமன்றம். குடும்ப முன்னேற்றத்துக்கு பெரிதும் பாடுபடுவது கணவனா.. மனைவியா..! என்கிற தலைப்பில் நடைபெற வேண்டிய பட்டிமன்றம். பேச்சாளர் ஒருவர் கடைசி நேரத்தில் வராததால், அந்த ஸ்பாட்டை ஃபில் பண்ண வேண்டிய கட்டாயம். இவரிடம் கேட்டிருக்கிறார் பாப்பையா… கேட்ட 30 விநாடிகளில் ஏதோ ஒரு தைரியத்தில் இவரும் ஓகே சொல்ல முதல்முறையாக மேடையேறியிருக்கிறார். ராஜாவோட தனித்துவமே அங்குதான் வெளிப்பட்டிருக்கிறது. மேடையில் இருந்த பேச்சாளர்கள் அனைவரும் இலக்கியங்களில் இருந்து உவமைகளை எடுத்தாள, ராஜாவோ அன்றாடம் குடும்பத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த விஷயங்களை காமெடியாக எடுத்துக் கூற கூட்டத்தினரின் அப்ளாஸ் அள்ளியிருக்கிறார். இவர் பேசி முடித்தும் அதுவரை லுங்கியுடன் பீடி புகைத்துக் கொண்டிருந்த மைக் ஆபரேட்டர் சூப்பர் என்று எழுந்துநின்று கைதட்டினாராம். அப்படியே மெல்ல மெல்ல பட்டிமன்றங்களில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார் ராஜா. வெறும் எஸ்.ராஜா பட்டிமன்ற ராஜாவாகியிருக்கிறார். சாலமன் பாப்பையா அய்யாவைப் பார்க்கலைனா காணாமப் போயிருப்பேன் என்று ஒரு பேட்டியில் நெகிழ்ந்திருந்தார் ராஜா.
அரசியல் கட்சிகளில் சேர்வீர்களா என்பது பற்றி பட்டிமன்றம் ராஜா சொன்ன பதில் சுவாரஸ்யமானது… அரசியல் கட்சிகள் பத்தி அவர் என்ன சொன்னார்னு தெரிஞ்சுக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க!
Also Read – இப்படி படம் எடுத்தா லைஃப் டைம் செட்டில் மெண்ட்.. பேசில் ஜோசப் இவ்வளவு மாஸா?
எந்தவொரு நபரையும் புண்படுத்திவிட்டால், நிச்சயம் நகைச்சுவை கிடையாது என்பதை ஆழமாக நம்புபவர் ராஜா. அதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஒரு முறை பட்டிமன்ற மேடையில் ராஜா பேசுகையில், `என் வீட்டு அம்மா நியூஸ் பேப்பர் எடுத்தா, அவங்க மாவு சலிக்கப் போறாங்கனு அர்த்தம்’ என்று தினசரி செய்திகளை அறிந்துகொள்வதில் வீட்டுப் பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்கிறரீதியில் இவர் பேசவே, அரங்கம் ஆர்ப்பரித்திருக்கிறது. அந்த கமெண்டுக்கு கைதட்டல்களும் குவிந்திருக்கிறது. ஆனால், பேச்சு முடிந்ததுமே சக பேச்சாளரான பாரதி பாஸ்கர் இவரிடம், இப்படி பெரும்பான்மையான பெண்கள் மனம் புண்படும்படி பேசலாமா என்று இவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த நிமிடமே தனது தவறை உணர்ந்துகொண்ட ராஜா, இனிமேல் இதுபோன்று பெண்கள் மட்டுமல்ல எவருமே புண்படும்படி பேசக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார். அந்த முடிவை இன்று வரை தீவிரமாகக் கடைபிடித்து வருகிறார் ராஜா. பியூசி படிப்புக்குப் பிறகு இவரை ஆங்கில இலக்கியம் படிக்க வைத்து, ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என இவரது தந்தை ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், பி.காம் படி ஒரு பேங்க் வேலைக்காவது போகலாம் என்று சாலமன் பாப்பையா சொல்லவே, அதையே தேர்ந்தெடுத்திருக்கிறார். இதனாலேயே, மகன் தன்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை என்று தந்தைக்கு இவர் மேல் வருத்தம் ஏற்பட்டதாம். பின்னாட்களில் உறவினர் பெண் ஒருவரை இவர் திருமணம் செய்துகொள்ள நினைத்தபோது, நான் கல்யாணத்துக்கு நிச்சயம் வருவேன். ஆனால், கல்யாணத்துக்கும் எனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்று மூஞ்சியைத் திருப்பிக்கொண்டாராம் இவரின் தந்தை. ஒரு கட்டத்தில் திருமணத்துக்கு ஆன 17,500 ரூபாயையும் சாலமன் பாப்பையா, அவரின் மனைவி நகைகளை அடமானம் வைத்துக் கொடுத்து ராஜாவின் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.
1991 தொடங்கி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற மேடைகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறார் ராஜா. எந்தவொரு மேடையிலும் தான் பேசியதை ரிப்பீட்டாக இன்னொரு இடத்தில் பேசவே மாட்டார். தமிழும் தமிழ் வார்த்தைகளும்தான் இந்த இடத்துக்குத் தன்னைக் கொண்டுவந்திருக்கிறது என்பதைத் தீர்க்கமாக நம்பும் ராஜா, ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றபடி தன்னை அப்டேட் செய்துகொள்வதன் மூலமே இத்தனை ஆண்டுகள் மேடையில் பேச முடிகிறது என்று ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார். 1990கள், புத்தாயிரம், 2010-கள், 2020-கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னென்ன டிரெண்டாயிருக்கு… அந்த காலகட்டங்களில் குடும்பங்கள், சமூகம் எப்படியிருந்தது என்பதை நாம் தெரிந்துகொள்ள ராஜாவின் அந்தந்த காலகட்ட பேச்சுகள் காலப்பொக்கிஷமாக நமக்கு உதவும் என்றால் அது மிகையல்ல. குடும்பம் தொடங்கி இன்றைக்கு லேட்டஸ்ட் விவாதமாக இருக்கும் 2கே கிட்ஸ் Vs 90ஸ் கிட்ஸ் வரையில் ராஜா பேசாத டாபிக்கே இல்லை என்று சொல்லலாம். 60ஸ் கிட்ஸான இவர் 2கே கிட்ஸுக்கும் ஏற்ற வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டவர். அதுதான் இவரின் யுனீக்னெஸ். பட்டிமன்ற மேடைகளில் கலக்கிக் கொண்டிருந்தவர் ரஜினி – ஷங்கரின் சிவாஜி படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதுதொடங்கி கிட்டத்தட்ட 2016 வரையில் 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
ஆனால், வங்கிப் பணியில் இருந்த சூழலில் கடைசி இரண்டு ஆண்டுகள் அதிகம் விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படி விடுமுறை எடுக்கும் சூழலில் ஓய்வூதியத்தில் பிரச்னை ஏற்படும் என்பதால், கொடுக்கப்பட்ட விடுமுறை நாட்களை பட்டிமன்றம் சார்ந்த விஷயங்களுக்காக ஒதுக்கிக் கொண்டிருக்கிறார். இதனாலேயே அவரால் அதிகம் படங்களில் நடிக்க முடியவில்லையாம்.
ராஜா அரசியலுக்கு வருவாரா… அரசியல் கட்சிகள் அவரைக் கூப்பிட்டாங்களா என்கிற கேள்விக்கு அவர் சொன்ன பதில், சுவாரஸ்யமானது. `என்னை மாதிரியான பொதுவான ஆட்களா இருக்குறதுல ஒரு சுகம் இருக்கு. ஒருவேளை நீங்க அரசியல் கட்சிக்குப் போனீங்கன்னா.. அந்த அரசியல் கட்சி சொல்ற அத்தனையும் நீங்க வழிமொழியணும். அதுல எப்பவும் எனக்கு உடன்பாடில்லை. நம்ம ஊர்ல எல்லா கட்சிகளும் அவங்க அவங்க நிலைலதான் இருக்காங்க. நாங்க சொல்றதுதான் உண்மை… நேர்மைனு சொல்லிட்டு இருக்காங்க. அதுக்கு மக்கள் தேர்தல் நேரத்துல காட்டிக்கிட்டுதான் இருக்காங்க. இதுல நான் போய் ஒருத்தருக்கு சாதகமாகவும் பாதகமாகவும் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை. எந்தக் காலத்திலும் எந்தக் கட்சிலயும் முகம் காட்டவும் நான் விரும்பலை. அது அவசியம் இல்லை. மக்களுள் ஒருவராக சாதாரண நிலையில் இருப்பது எனக்குப் பிடித்தமானது’னு ஓபனாவே ஸ்டேட்மெண்ட் கொடுத்துருக்கார்.
பட்டிமன்றம் ராஜாவோட ஃபேமஸான Quote, உங்களுக்கு ரொம்பவே பிடிச்ச அவரோட காமெடி எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!