சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்திருக்கிறது. இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சேலம் விபத்து
சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் வசித்து வருபவர் பத்மநாபன். தீயணைப்புத் துறையில் பணியாற்றிவரும் இவரது வீட்டில் இன்று காலை 6.45 மணியளவில் சமையல் செய்துகொண்டிருந்தபோது சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் பத்மநாபன் வீட்டோடு சேர்த்து அருகிலிருந்த இரண்டு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. வீடு இடிந்த விபத்தில் மூதாட்டி ராஜலட்சுமி (80) இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்த வீட்டை ஒட்டி இருந்த மேலும் இரண்டு வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக, 50-க்கும் மேற்பட்ட போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலி எண்ணிக்கை உயர்வு
கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு சுவரில் துளையிட்டு தீயணைப்புத் துறையினர் மீட்டனர். கட்டட இடிபாடுகளில் இருந்து நாகசுதா, வெங்கட்ராஜன், தனலட்சுமி, மோகன்ராஜ், உஷாராணி, லோகேஷ் உள்ளிட்ட 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மூதாட்டி ராஜலட்சுமி உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தீயணைப்புப் படை வீரர் பத்மநாபன், தேவி, கார்த்திக் ராம், எண்ணம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். இதனால், சேலம் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5- ஆக உயர்ந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
Also Read :Chennai Rains: 2021 நவம்பரில் அதிக மழைப்பொழிவு இருக்கப்போகிறதா… வானிலை நிலவரம் சொல்வதென்ன?