அவசரத் தேவை போன்ற சூழல்களில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகளைப் பற்றிதான் நாம் தெரிஞ்சுக்கப்போறோம்.
கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டுகளைப் பொறுத்தவரையில் சரியான முறையில் பயன்படுத்துவதுதான் உங்களுக்குப் பலனளிக்கும். பொருளாதாரரீதியில் நண்பனாக கிரெடிட் கார்டுகளை நீங்கள் சந்தர்ப்ப சூழலைக் கணக்கில் கொண்டு நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அது உங்கள் பர்ஸைப் பதம் பார்த்துவிடும். சிலருக்கு நிதி சிக்கல் போன்ற அவசர காலங்களில் கிரெடிட் கார்டு மட்டுமே கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கும். அப்படியான அவசர காலங்களிலும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்…
மினிமம் அமவுண்ட்
கிரெடிக் கார்டு நிறுவனங்கள் தவணை தேதிக்கு முன்பாகக் குறிப்பிட்ட தொகையை மினிமம் அமவுண்ட் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையைக் கட்டுமாறு உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அந்தத் தொகையையோ அல்லது அதற்கு அதிகமான தொகையையோ நீங்கள் கட்டத் தவறினால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அத்தோடு, அது உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் கடுமையாகப் பாதிக்கும். இந்த மினிமம் அமவுண்ட் என்பது நிலுவையில் இருக்கும் மொத்த தொகைக்கான வட்டியாகவே இருக்கும். மிகவும் குறைந்த தொகையே நிலுவைத் தொகையில் இருந்து கழிக்கப்படும் வகையில் கணக்கிடப்பட்டிருக்கும். பொதுவாக, மொத்த நிலுவைத் தொகையில் 5% மட்டுமே மினிமம் அமவுண்டில் இருக்கும். ஒவ்வொரு மாதமும் மினிமம் அமவுண்ட் தொகையை மட்டுமே நீங்கள் கட்டி வந்தால், மொத்த நிலுவைத் தொகையை செலுத்தி முடிக்க உங்களுக்கு நீண்டகாலம் பிடிக்கும்.
அவசர காலங்களில் மினிமம் அமவுண்டையாவது செலுத்துவது, உங்கள் பிரியாரிட்டி லிஸ்டில் முன்னால் நிற்கும் மற்ற விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த உதவலாம். மற்ற நேரங்களில் மினிமம் அமவுண்டுக்குக் கூடுதலாகப் பணம் செலுத்துவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
Credit Utilisation Ratio
உங்கள் கார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த தொகையில் 30% தொகையை (Credit Utilisation Ratio ) மட்டுமே செலவழிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இந்த மதிப்பை அடிக்கடி தாண்டுவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை உடனடியாகப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாடகை, அன்றாட செலவுகள் போன்றவற்றை சமாளிக்க வேண்டிய அவசர சூழலில் CUR-ஐத் தாண்டி செலவு செய்தாலும், நிதி சூழல் சரியானதும் அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். இதன்மூலம், உங்கள் கிரெடிட் ஸ்கோர் படிப்படியாக உயரும். அதேநேரம், உங்களின் பொருளாதார சிக்கல் சரியாக சிறிது காலம் பிடிக்கும் என்றோ, கடன் பெறுவதற்கான வேறு வழிகளை நீங்கள் ஆய்வு செய்யும் சூழலில் இருந்தாலோ கார்டு வழங்கும் நிறுவனத்திடம் உங்களின் கிரெடிட் லிமிட்டை அதிகரிக்கும்படி கோரிக்கை வையுங்கள் அல்லது வேறு கார்டுகளுக்காக விண்ணப்பியுங்கள். பல கார்டுகளைப் பயன்படுத்தும்போது உங்கள் CUR லிமிட்டை 30%-க்கு உள் கொண்டு வர முடியும்.
கிரெடிட் கார்டிலிருந்து பணம்
ஆன்லைன் அல்லது மால்களில் ஷாப்பிங் செய்யப் பயன்படுவதுபோலவே, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணமும் எடுக்க முடியும். இது மருத்துவ செலவு போன்ற அவசர காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் இந்த ஆப்ஷனைப் பயன்படுத்த வேண்டாம் என்பதே பொதுவாக வழங்கப்படும் அறிவுரை. அதேநேரம், அப்படியான அவசரத் தேவை ஏற்படும்போது பணத்தை எடுத்தாலும், சரியான இடைவெளியில் அதைத் திரும்பச் செலுத்துவதற்காகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ரிவார்டு பாயிண்ட்ஸ்
பொதுவாக கார்டுகளைப் பயன்படுத்தும்போது அதை வழங்கும் நிறுவங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்ஸ் என்கிற பெயரில் சலுகைகளை வழங்கும். இவற்றைப் பயன்படுத்தி ஹோட்டலில் ரூம், பஸ் டிக்கெட்டுகள் புக் பண்ணுவது, ஷாப்பிங் போன்றவற்றில் தள்ளுபடிகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்த ரிவார்டு பாயிண்டுகளைப் பணமாக மாற்றினால் உங்களுக்கு அது பெரிய அளவில் உதவி செய்யாது என்பதே நிதர்சனம். ஒப்பீட்டளவில் பணமாக மாற்றாமல் இருப்பதே நல்லது. ஆனால், அவசரத் தேவை என்கிற சூழலில் இதைத் தாராளமாகப் பணமாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கிரெடிட் ஸ்கோர்
தவணைகளை சரியான நேரத்துக்குச் செலுத்தாமல் இருப்பது, கிரெடிட் லிமிட்டைத் தாண்டுவது, அதிக எண்ணிக்கையிலான கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்டவைகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கடுமையாகப் பாதிக்கும். அவசரத் தேவை ஏற்படும் காலங்களில் இதை நீங்கள் பின்பற்றத் தவறினாலும், மெதுவாக உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். கிரெடிட் ஸ்கோர் ரொம்ப முக்கியம் பாஸ்..!