சம்மரில் ஏசி கரண்ட் பில்லைக் குறைக்க 5 எளிய வழிகள்.
சம்மர்
சம்மர் வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. வட இந்தியாவின் பல பகுதிகள் ஏற்கனவே தகிக்கத் தொடங்கிவிட்டன. தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை மழை கொஞ்சம் குளுமை கொடுத்தாலும், பல ஏரியாக்களில் வெப்பநிலை சதமடிக்க ஆரம்பித்துவிட்டது. சம்மரில் இருந்து தப்பிக்க பலர் ஏசிக்களிடம் தஞ்சம் புகுந்தாலும், மாதக் கடைசியில் கரண்ட் பில் நம்முடைய பாக்கெட்டைப் பதம் பார்த்துவிடும். பகல், இரவு என தொடர்ந்து ஏசியின் பயன்பாடு அதிகரித்தால், கரண்ட் பில்லும் எகிறும். சம்மரில் ஏசி கரண்ட் பில்லைக் குறைப்பது எப்படினு 5 பாயிண்ட்கள்ல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

சரியான வெப்பநிலை
ஏசியை எப்போதும் மினிமம் டெம்பரேச்சரில் வைக்காதீர்கள். குறைந்த வெப்பநிலையான 16 டிகிரியில் வைத்தால் நல்ல கூலிங் கிடைக்கும் என்ற எண்ணம் பொதுவாகவே இருக்கிறது. ஆனால், அதில் உண்மையில்லை என்கிறது Bureau of Energy Efficiency (BEE) ஆய்வு முடிவுகள். மனித உடலின் இயல்பான வெப்பநிலை 24 டிகிரி. அதையொட்டியே உங்கள் ஏசியில் டெம்பரேச்சரை செட் செய்வது நல்லது. இதனால், ஏசி குறைவான அளவு மின்சாரத்தையே பயன்படுத்தும்.
பவர் ஆஃப்
ஏசி என்றில்லை எந்தவொரு எலெக்ட்ரானிக் சாதனமாக இருந்தாலும் பயன்படுத்தாத நேரத்தில் அதன் பவர் பட்டனை ஆஃப் செய்து வைப்பது நல்லது. பெரும்பாலானோர், ரிமோட்களில் மட்டுமே ஆஃப் செய்து வைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இப்படி செய்வதால் மின்சாரம் தேவையில்லாமல் விரயமாகிறது. ஏசியின் கம்ப்ரஸர் ‘idle load’-ல் ஓடுவதால் கரண்ட் பில்லும் எகிறும்.
டைமர்
எல்லா ஏசிகளுமே டைமர் உடன்தான் வரும். நீங்கள் தூங்கப் போகையில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு தாமாகவே ஆஃப் ஆகிவிடும்படி டைமர் செட் செய்வது நல்லது. குறிப்பாக, இரவு முழுவதும் ஓடுவதற்குப் பதிலாக, 2-3 மணி நேரத்துக்குப் பிறகு ஆஃப் ஆகும்படி டைமர் செட் செய்யலாம். இது கரண்ட் பில்லையும் குறைக்கும்.

சர்வீஸ்
எல்லா எலெக்ட்ரானிக் பொருட்களுமே குறிப்பிட்ட இடைவெளியில் சர்வீஸ் செய்யப்பட வேண்டும். சில ஏசி உற்பத்தி நிறுவனங்கள், தங்களுடைய பொருட்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய தேவையில்லை என்று சொல்வதுண்டு. ஆனால், அது உண்மையில்லை. சம்மர் தொடங்கும் முன்னர் உங்களுடைய ஏசியை சர்வீஸ் செய்வது நல்லது.
கதவு, ஜன்னல்கள்
ஏசியை ஆன் செய்வதற்கு முன்னர், அறையின் அனைத்து கதவு, ஜன்னல்களையும் சரியாக மூடியிருப்பதை உறுதி செய்யுங்கள். இதனால், அறையானது விரைவிலேயே கூலிங் ஆகிவிடும். இது, மின் பயன்பாட்டையும் குறைக்கும் என்பதால், கரண்ட் பில்லும் கணிசமாகக் குறையும்.
Also Read – யூஸ்டு கார் வாங்கப் போறீங்களா… இந்த 7 விஷயங்களைக் கவனிக்க மறந்துடாதீங்க!