செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குப் பிறகு விற்கப்படும் வாகனங்கள் அனைத்துக்கும் பம்பர் டு பம்பர் என்ற வகையில் வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கிய 5 ஆண்டுகள் காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தீர்ப்பாய உத்தரவு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழந்த சாலை விபத்தில் சடையப்பன் என்பவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த தீர்ப்பாயம், காப்பீடு நிறுவனம் சடையப்பன் குடும்பத்துக்கு ரூ.14.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து காப்பீடு நிறுவனமான நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, `வாகன ஓட்டுநர், உரிமையாளர் என்ற அடிப்படையிலேயே அந்த வாகனத்துக்குக் காப்பீடு எடுக்கப்பட்டது. ஓட்டுநர் அல்லாத ஒருவரின் இறப்புக்கு ஒரு லட்ச ரூபாய் அளவிலேயே இழப்பீடு வழங்க முடியும். சடையப்பன் வாகன ஓட்டுநராக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும், விபத்து நடைபெற்ற போது அவர் வாகனத்தை இயக்கவில்லை. அவர் வாகன ஓட்டுநருக்காக ஊதியம் பெற்றதற்கான ஆதாரங்களும் இல்லை’ என காப்பீடு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
ஐந்தாண்டு காப்பீடு
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வாகனத்தை வாங்குவோர் அது செயல்படும் விதத்தில் காட்டும் அக்கறையில், காப்பீடு குறித்து தெரிந்துகொள்வதில் காட்டுவதில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். வாகனங்கள் வாங்குவோருக்குக் காப்பீடு குறித்து முழுமையான தகவல்களை விற்பனையாளர்கள் தெரிவிப்பதில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் அடிப்படையில் உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கிய வகையில் ஐந்தாண்டுகள் காப்பீடு எடுப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக வாகன விற்பனையாளர்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கூடுதல் செயலாளர் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக செப்டம்பர் 30-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.