2005 –ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு சினிமா ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாத ஓர் ஆண்டு. அந்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதிதான் ரஜினி நடிப்பில் ‘சந்திரமுகி’ படமும் விஜய் நடிப்பில் ‘சச்சின்’ படமும் கமல் நடிப்பில் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படமும் ஒரே நாளில் வெளியாகி அனைவருக்கும் எதிர்பார்ப்பைக் கூட்டியது. அன்று ஒரே நாளில் இந்த மூன்று படங்களும் வெளியானபோது தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும்..? ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்.
முதலில் ரஜினியின் ‘சந்திரமுகி’ படம்தான் அந்த தேதியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. `பாபா’ பட படுதோல்விக்குப் பிறகு ரஜினி இந்தப் படத்தில் நடித்து அந்த வருட தமிழ்ப் புத்தாண்டுக்கு வரப்போகிறது என ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கத் தொடங்கினர். அந்நிலையில், கமல்தான் ஆட்டத்தை சூடுபிடிக்க வைத்தார். சரியாக பத்து வருடங்களுக்குப் பிறகு அதாவது, 1995-ஆம் ஆண்டு ரஜினியின் ‘முத்து’ படத்துடன் தனது ‘குருதிப்புனலை’ மோதவிட்டதற்குப் பிறகு இப்போது ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தை ரஜினி படத்துடன் மோதவிடுவது என அறிவித்தார் கமல்.
கடைசியாகத்தான் வந்தார் சச்சின்’. விஜய் அப்போது `திருமலை’, ‘கில்லி’, ‘மதுர’, ‘திருப்பாச்சி’ என தொடர் வெற்றியில் இருந்த நேரம். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என முடி சூட்டும் விழா நடத்தாததுதான் பாக்கியாக இருந்தது. அந்நிலையில் ரஜினியுடன் தனது ‘சச்சின்’ படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்தார் விஜய். அப்போது தன்னை ஒரு தீவிர ரஜினி ரசிகராக காட்டிக்கொண்டிருந்த விஜய்யின் இந்த அறிவிப்பு நிஜமாகவே ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்தது. சரி, இப்போதிருக்கும் ரஜினியே இன்னும் ஃபுல் ஃபார்மில் இருக்க, அப்போது தனியொரு ஆளாக ரஜினி உச்சத்தில் -போட்டிக்கு ஆளே இல்லாமல் – இருந்த சமயத்தில் கமலும் விஜய்யும் எப்படி அவருடன் மோதத் துணிந்தார்கள்?.
‘பாபா’ தோல்விக்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலம் ரஜினி படம் நடிக்காமல் இடைவேளையாகிப் போனது. இடைபட்ட காலத்தில் ரஜினியின் ‘ஜக்குபாய்’ படம் அறிவிக்கப்பட்டு டிராப் ஆனது.. 2004-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ரஜினியின் வாய்ஸையும் மீறி பா.ம.க வென்றது போன்ற காரணங்களாலும் , ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’, ‘பாபா’ என தொடர்ந்து மிகப்பெரிய மாஸ் காட்டிவந்த ரஜினி திடீரென ஏதோ ஒரு மலையாளப் பட ரீமேக்கில் அதிலும் ஃபார்மிலேயே இல்லாத பி.வாசு இயக்கத்தில்.. டைட்டில் வேறு ‘சந்திரமுகி’ என்ற பெண் பெயர்.. போன்றவற்றையும் வைத்து, ரஜினி என்னும் குதிரையின் ஓட்டம் முடிவுக்கு வந்துவிட்டதுபோல என அனைவரும் நினைக்கத் தொடங்கியதுபோல அவரது சினிமா போட்டியாளர்களான கமலும் விஜய்யும் நினைக்கத் தொடங்கினர். ஆனால் நடந்ததுதான் வேறு. படம் வெளியான முதல் நாள் முதல் நாள் காட்சி ரெஸ்பான்ஸிலேயே இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என தெரிந்துபோனது அதேபோலவே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று ‘சந்திரமுகி’ படத்தை ரசித்தனர் தமிழ்நாடு மக்கள்.
அதேசமயம் கமலின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே கமல் ரசிகர்கள் தவிர்த்து பொதுவெளியில் ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. இத்தனைக்கும் ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ ,’காதலா காதலா’ போன்ற கிளாஸிக் ஹிட்களைத் தந்த கமலின் ஆஸ்தான இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவுடன் அவர் இணைந்திருந்தபோதும் எதிர்பார்ப்பு பெரிதாக ஏறவில்லை. காமெடி படம், ஃபீல்ட் அவுட்டான மணீஷா கொய்ராலா ஹீரோயின், மிக பலவீனமான புரோமோஷன் போன்றவை ரஜினி படத்துடன் டஃப் கொடுக்கும் அளவுக்கு எதிர்பார்ப்பைக் கொடுக்கவில்லை. கமலுக்கு நடந்ததுபோலவே விஜய்க்கும் நடந்தது. படத்தின் ஸ்டில்கள், பாடல்கள் தொடங்கி, அவரது முந்தைய படங்களில் இருந்த மாஸ் அம்சங்கள் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடி கலந்த ரொமான்ஸ் தன்மையுடன் இருந்தது விஜய் ரசிகர்களுக்கே சற்று கவலையாகத்தான் இருந்தது. போதாக்குறைக்கு அப்போது சாட்டிலைட்டில் உச்சத்தில் இருந்த சன் டிவிக்கு ‘சச்சின்’ படத் தயாரிப்பாளரான தாணுமீது இருந்த வருத்தம் காரணமாக அப்படியொரு படம் வருவதாகவே சன் டிவி காட்டிக்கொள்ளவில்லை. இந்த ரேஸில் விஜய்யின் சச்சின்’ மட்டும் வசூல்ரீதியாக தப்பித்துக்கொண்டது. காக்க காக்க’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை `சச்சின்’ படம் தான் சரிகட்டியது என பின்னாளில் பேட்டிகளில் சொன்னார் தாணு.
சந்திரமுகி ஆடியோ லாஞ்சில் ரஜினி இப்படி சொன்னார்.. `நான் யானை இல்ல குதிரை.. விழுந்தா டக்குன்னு எழுந்து ஓடிடுவேன்’ என்றார். இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறார்.
Also Read : Quinton de Kock: குவிண்டன் டிகாக் கரியருக்கு முற்றுப்புள்ளி? – சர்ச்சையான முடிவு… பின்னணி என்ன?