நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே 20 நாட்களுக்கு மேலாக போக்குக் காட்டி வரும் T23 புலி, இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தியும் தப்பியோடியது. புலிக்கு விதிமீறி மயக்க ஊசி போடப்பட்டதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.
கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் புலி ஒன்று நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்தப் பகுதியில் 4 பேரையும் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. அதை சுட்டுக்கொல்ல வனத்துறை முடிவெடுத்த நிலையில், உயர் நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது. அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் டிரோன் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது. ஆனால், கண்காணிப்பு கேமராவில் தனது இருப்பிடத்தை புலி தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்ததால், T23 புலியைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து 20-வது நாளாகப் புலியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஒம்பெட்டா வனப்பகுதியில் புலி இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அப்பகுதியில் முகாமிட்ட தேடுதல் குழுவினர் நேற்று இரவு 10 மணிக்கு மேல் புலிக்கு இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தினர். ஆனாலும் புலி தப்பியது. புலி தற்போது தெப்பக்காடு – மசினகுடி பகுதியில் புலி இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். குறிப்பாக மசினகுடி பகுதி கூல் பிரீஸ் ரெசார்ட் அருகே புலியின் நடமாட்டத்தை உறுதி செய்திருக்கிறார்கள். இதனால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வனத்துறையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கிடையே தேசிய புலிகள் ஆணைய விதிமுறைப்படி மாலை 6 மணிக்கு மேல் புலிகளுக்கு மயக்க ஊசி செலுத்தக் கூடாது. ஆனால், இந்த விதிமுறையை மீறி வனத்துறையினர் இரவு 10 மணிக்கு மேல் T23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தியது சர்ச்சையாகியிருக்கிறது.