2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் நிருபம் தாக்கல் செய்த வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார் இந்தியாவின் முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய். என்ன நடந்தது?
2ஜி அலைக்கற்றை மோசடி
வினோத் ராய், இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக இருந்தபோது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பல லட்சம் கோடி அளவுக்கு இந்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டார். அதேபோல், நிலக்கரி விவகாரத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரங்கள் அப்போதைய காங்கிரஸ் அரசுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தின. அதேபோல், அப்போதைய காங்கிரஸ் அரசில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா பதவி விலக நேர்ந்ததோடு, சிறைக்கும் செல்ல நேர்ந்தது. இதுதொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து ஆ.ராசா உள்ளிட்டோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
வினோத்ராய்
வழக்கின் அடிநாதமே முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராயின் தணிக்கை அறிக்கைதான். இதுகுறித்து, கடந்த 2014-ல் `Not Just an Accountant: The Diary of the Nation’s Conscience Keeper’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார் வினோத் ராய். புத்தக வெளியீட்டுக்கு முன்பாக அவர் பல்வேறு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிருபம் உள்ளிட்ட பலர் 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான சி.ஏ.ஜி அறிக்கையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரை நீக்கிவிடுமாறு அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். பிரபல ஆங்கில ஊடகங்களில் வெளியான பேட்டியில், அப்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து தகவல் அளித்தும், எம்.பிக்கள் பலர் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து அதிருப்தி தெரிவித்தும் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க பிரதமர் மன்மோகன் சின் தவறிவிட்டதாக வினோத் ராய் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வினோத் ராய்க்கு எதிராக சஞ்சய் நிருபம் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பாட்டியாலா பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மனுஸ்ரீ முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி மனுஸ்ரீ முன்னிலையில் வினோத் ராய் தரப்பில் கடந்த 25-ம் தேதி பிரமாணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், `2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சி.ஏ.ஜி அறிக்கையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரை நீக்கும்படி சஞ்சய் நிருபம் எனக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கவனக்குறைவாக நான் பதிலளித்துவிட்டேன். இதுகுறித்து என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் தவறாகப் பதிலளித்ததை உணர்ந்திருக்கிறேன்.
என்னுடைய கருத்துகளால் சஞ்சய் நிருபம், அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஏற்பட்ட வலியைப் புரிந்துகொள்கிறேன். என்னுடைய கருத்துகளால் அவர்கள் புண்பட்டிருக்கும் நிலையில், நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை சஞ்சய் நிருபம் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கைத் தள்ளுபடி செய்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
சஞ்சய் நிருபம்
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வினோத் ராய் தாக்கல் செய்த பிரமாணப் பத்திர நகலை ட்விட்டரில் சஞ்சய் நிருபம் பகிர்ந்திருக்கிறார். அதில், `இறுதியாக நான் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கில் முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அதேபோல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி ஒதுக்கீட்டு விவகாரங்களில் ஊழல் நடந்ததாக பொய்யான ஆவணங்களை வெளியிட்டதற்கு அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று சஞ்சய் நிருபம் தெரிவித்திருக்கிறார்.