கேரள மாணவி Jesna Maria மாயமாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அவரைத் தேடி வரும் சிபிஐ 191 நாடுகளுக்கு இன்டர்போல் மூலம் Yellow நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த வழக்கில் என்ன நடந்தது?
Jesna Maria
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் Vechoochira பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜோசப்பின் மகள் Jesna Maria. இருபது வயதான இவர், அப்பகுதியில் உள்ள செயிண்ட் டொமினிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இவர், கடந்த 2018 மார்ச் 22-ம் தேதி, கோட்டயம் முண்டகாயத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் செல்வதற்காகக் கிளம்பினார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. உறவினரின் வீட்டிற்கும் செல்லவில்லை. அவர், தன்னுடன் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்லவில்லை என்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக தொடக்கத்தில் கேரள போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதன்பின்னர், கிரைம் பிராஞ்ச், தனிப்படை என கேரள போலீஸின் பல்வேறு பிரிவுகள் ஜெஸ்னாவைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கேரளா மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் வட மாநிலங்களிலும் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அதில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கோட்டயம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தொன்றின் ஜெஸ்னாவைப் போன்ற ஒரு பெண் இருந்தது சிசிடிவி காட்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பெண் ஜெஸ்னாதானா என்பதைக் காவல்துறையால் உறுதிப்படுத்த முடியவில்லை. அதேநேரம், சிசிடிவி காட்சியில் காணப்பட்ட பெண் யார் என்பதையும் கேரள போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரம், சைபர் எக்ஸ்பர்ட்களின் உதவியோடு லட்சக்கணக்கான போன் கால்களையும் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனால், அவர்களின் முயற்சிக்குப் பலன் கிட்டவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜெஸ்னா கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. அப்போது, பத்தினம்திட்டா போலீஸ் எஸ்.பியாக இருந்த கே.ஜி.சைமன், ஜெஸ்னாவின் வீட்டுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். ஆனால், அந்த விசாரணை பற்றி வேறு எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இப்படியான சூழலில், ஜெஸ்னா வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்ற வேண்டும் என கொச்சியைச் சேர்ந்த he Christian Alliance and Social Action என்கிற அமைப்பு கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி 2021 பிப்ரவரியில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு ஓராண்டு கழிந்தும் வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. மாயமான ஜெஸ்னா, சிரியாவில் இருப்பதாக ஒரு வதந்தி சமீபத்தில் பரவியது. ஆனால், அதில் உண்மையில்லை என சிபிஐ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்தசூழலில் ஜெஸ்னா வழக்கில் இன்டர்போல் உதவியை சிபிஐ நாடியிருக்கிறது. இன்டர்போல் மூலம் 191 நாடுகளில் Yellow Notice அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாயமானவர்களைத் தேடும் பணியில் சர்வதேச அளவில் அளிக்கப்படும் நோட்டீஸ்தான் இது. இதன்மூலம், ஜெஸ்னா வழக்கில் முன்னேற்றம் ஏற்படும் என்று சிபிஐ தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெஸ்னா, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்கிற பல கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read –
மேகாலாயா விபத்தில் உயிரிழந்த 18 வயது தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்!