ஒலிம்பிக் வரலாற்றில் சில நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடக்கும். அப்படியான நிகழ்வுகள் வரலாற்றில் குறித்து வைக்கப்படக்கூடியவை. அந்த பட்டியலில் தற்போது நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நடந்த நிகழ்வு ஒன்று இடம் பெற்றுள்ளது. அரிதாக நடக்கும் நிகழ்வாக மட்டுமில்லாமல் சுவாரஸ்யமான நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது. ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் கத்தார் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த வீரர்கள் இருவர் தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வுதான் அது. `இவர்களின் நட்பு பதக்கங்களைவிட உயர்ந்தது; நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டால் தினம் தினம் நண்பர்கள் தினம் தான்’ என்று நெட்டிசன்கள் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
கத்தார் நாட்டைச் சேர்ந்த முதாஸ் பார்ஷிம் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கியான்மார்கோ தம்பேரி ஆகிய இருவரும்தான் தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியானது கடந்த ஆக்ஸ்ட் 1-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றனர். முதாஸ் மற்றும் கியான்மார்கோ இருவரும் ஒரே மாதிரியாக 2.37 மீட்டர் உயரத்தைத் தாண்டி ஒரே புள்ளிகளைப் பெற்றனர். இதனையடுத்து 2.39 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதற்கு இருவரும் மூன்று முயற்சிகளை எடுத்தும் இருவரும் தவறுகளை செய்தனர். இறுதியாக வெற்றியாளரைக் கண்டுபிடிக்க கடைசியாக ஒரு போட்டியை நடத்த நடுவர் முடிவு செய்தார்.
கடைசி போட்டி நடத்துவதற்கு முன்பாக முதாஸ் பார்ஷிம் நடுவரிடம், “இரு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?” என்றும் “தங்கத்தை பகிர்ந்துகொள்ள முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஒலிம்பிக் நடுவர்களும் சம்மதம் அளித்துள்ளனர். இதனையடுத்து முதாஸ் மற்றும் கியான்மார்கோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளனர். களத்தில் இருவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் சுமார் 10 ஆண்டுக்கும் மேலாக நல்ல நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால்தான், ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் தங்கப்பதக்கத்தைப் பகிர்ந்து வென்றுள்ளனர்.
தங்கப்பதக்கம் வென்றது தொடர்பாக முதாஸ் பார்ஷிம் பேசுகையில், “எனக்கு இது கனவு போன்றது. நான் இதிலிருந்து கண்விழிக்க விரும்பவில்லை. பல காயங்கள் மற்றும் பின்னடைவுகள் எனக்கு ஏற்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகள் இதற்காக நான் காத்திருந்துள்ளேன். இவற்றைக் கடந்து இருவரும் இன்று இந்த தருணத்தைப் பகிர்ந்துகொண்டோம். இந்தத் தருணம் மிகவும் மதிப்பு வாய்ந்தது” என்றார். இந்தப் போட்டியில் பெலாரஸ் வீரர் மாக்சிம் நெடாசேகுவுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. கியான்மார்கோ பேசும்போது, “என்னுடைய காயங்களுக்குப் பிறகு நான் திரும்பி வர விரும்பினேன். ஆனால், இப்போது என்னிடம் தங்கம் உள்ளது. இதை என்னால் நம்பமுடியவில்லை. இது என்னுடைய பலநாள் கனவு” என்று தெரிவித்துள்ளார்.
Also Read : பிரதமர் மோடியின் ஆலோசகர் ராஜினாமா… யார் இந்த அமர்ஜீத் சின்ஹா?