உலகம் சுற்றும் வாலிபன் போஸ்டரில் ரெடிமேட் பசை! – எம்.ஜி.ஆரை அசத்திய பாண்டு #RIPPaandu

தமிழ் திரைப்படங்களில் மிகச் சிறிய காமெடி வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் பாண்டு. அவரை அந்தளவில், தமிழக மக்கள் ஓரளவுக்கு அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால், காமெடி நடிகர் என்பது மட்டுமே, பாண்டுவின் அடையாளம் அல்ல!

தமிழக வரலாற்றில் மறைக்க முடியாத, மறுக்க முடியாத சாதனைகளைப் படைத்த தலைசிறந்த ஓவியர் அவர்; பிரான்ஸில் உள்ள பாரீஸ் மாநகரில், புகழ் பெற்ற ஓவியக் கல்லூரியில் ஓவியம் பயின்று, அதில் பி.ஹெச்.டி பட்டம் பெற்ற டாக்டரேட் அவர். அதன் மூலம், தென்னிந்தியாவிலேயே முதன் முதலில் ஒவியத்தில் டாக்டரேட் பெற்ற பெருமைக்குரியவர். இக்கட்டான நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியவர்; அ.தி.மு.க-வின் கொடியையும், சின்னமான இரட்டை இலையையும் வடிவமைத்தவர். அறிவாலயத்தின் பெயர் பலகையில், தன் கைவண்ணத்தைக் காட்டியவர்.

பள்ளிப் படிப்பும்… ஒவியத்தில் ஆர்வமும்…

பாண்டு
பாண்டு

தற்போதைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம்தான் நடிகர் பாண்டுவின் சொந்த ஊர். அந்த ஊரில் பிறந்து வளர்ந்த பாண்டு, சிறு வயதிலேயே ஒவியத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். எட்டாம் வகுப்பு படிக்கும்போதிருந்து, முறையாக ஒவியம் கற்றுக் கொள்ளத் தொடங்கியவர், பள்ளிப் படிப்பை முடித்தவுடன், வழக்கமான பட்டப் படிப்புக்களைத் தேர்ந்தெடுக்காமல், சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஒவியம் பயின்றார். அதன்பின்னர் பரோடா சென்று அங்கும் நவீன ஒவியத் தொழில் நுட்பங்கள் தொடர்பான கல்வியைக் கற்றார். பிறகும், அவரது ஒவிய ஆர்வம் தணியவில்லை. பிரான்ஸில் உள்ள பாரீஸ் சென்று, அங்கு ஒவியக் கல்லூரியில் சேர்ந்து படித்து, ஒவியத்தில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றார். தென்னிந்தியாவிலேயே, ஒவியத்தில் முதன் முதலில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்தான் நடிகர் பாண்டு.

எம்.ஜி.ஆர் தந்த அறிவுரையும்… வரலாற்றுப் புகழ் வாய்ப்பும்…

சென்னை ஒவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், பாண்டுவின் அண்ணனும், காமெடி நடிகருமான இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆரின் உதவியாளர்களில் ஒருவராக இருந்தார். அப்போது, பாண்டு எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் இணைத்து ஒரு கேலிச் சித்திரத்தை வரைந்திருந்தார். அதைப்பார்த்த, பாண்டுவின் அண்ணன் இடிச்சபுளி செல்வராஜ், அந்த ஓவியத்தை எடுத்துப்போய், எம்.ஜி.ஆரிடம் காட்டியுள்ளார். ஒவியத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர், “நாளை உன் தம்பியை(பாண்டுவை), அழைத்து வா” என்று சொல்லிவிட்டார். அதையடுத்து, மறுநாள் எம்.ஜி.ஆரைப் பார்க்கப் போன பாண்டுவை கடிந்து கொண்ட எம்.ஜி.ஆர், “இப்படி என்னை உயர்த்தியும்… சிவாஜியை தாழ்ந்தியும் கேலிச் சித்திரம் வரைந்தால், அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? இனி இப்படிச் செய்யாதே” என்று அறிவுரை கூறியுள்ளார்.

அதன்பிறகு, தான் செய்த தவறை உணர்ந்து கொண்ட நடிகர் பாண்டு, எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் முக்கியமான ஸ்டில்களை தொகுத்து வரைந்து கொண்டுபோய் மீண்டும் எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். அவற்றைப் பார்த்து அசந்துபோன எம்.ஜி.ஆர், அ.தி.மு.க-வின் கொடியையும், இரட்டை இலைச் சின்னத்தை வரையும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்டு, பாண்டு வரைந்து கொடுத்த ஒவியத்தில், மேலும் சில திருத்தங்களைச் சொல்லி எம்.ஜி.ஆர், அ.தி.மு.க கொடியை இறுதி செய்துள்ளார். ஆனால், கலை இயக்குநர், அங்கமுத்துதான் அ.தி.மு.க கொடியை வரைந்தவர் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததையடுத்து, நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில், பாண்டுவை அறிமுகம் செய்து 5 பவுன் தங்கச் சங்கிலியும், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் கொடுத்து எம்.ஜி.ஆர் பெருமைப்படுத்தினார். அந்த நிகழ்வு மூலம், பாண்டுதான் இரட்டை இலைச் சின்னத்தையும், அ.தி.மு.க கொடியையும் வடிவமைத்தவர் என்பது உறுதியாகி உள்ளது.

ஸ்டிக்கரை அறிமுகம் செய்த பாண்டு!

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியான நேரத்தில், அது தொடர்பான விளம்பரங்களையும், போஸ்டர்களையும் தமிழகத்தில் எங்கும் ஒட்டவிடாமல், அன்றைய தி.மு.க-வினர் கலவரத்தில் ஈடுபட்டனர். திரைப்படம் வெளியாவதற்கு முன், அது தொடர்பான விளம்பரங்கள் வர முடியாததால், எம்.ஜி.ஆர் கடும் இக்கட்டான சூழலில் தவித்தார். அப்போது அதற்கு மாற்று ஏற்பாடு பற்றி சிந்தித்த எம்.ஜி.ஆர், நடிகர் பாண்டுவிடம் ஆலோசனை கேட்க, சிறிய வடிவத்தில், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்பட போஸ்டரை அச்சடித்து, அதன் பின்னால் ரெடிமேட் பசையை தடவி, அதை ரிக்ஸாக்கள், ஆட்டோக்கள், கடைகளின் சுவர்களில் ஒட்டும் யோசனையைச் சொன்னதுடன், அதை நடைமுறைப்படுத்தியும் காண்பித்தார். அப்படித்தான், தமிழகத்திற்கு முதன்முதலில் ‘ரெடிமேட் கம்’ தடவிய ஸ்டிக்கர்கள் அறிமுகம் ஆனது

Also Read : பில்கேட்ஸ் – மெலிண்டா… முறியும் 27 ஆண்டு திருமண பந்தம் – பின்னணி என்ன?

அதுபோல், அண்ணா அறிவாலயம், அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள மெட்டல் பெயர் பலகைகள் எல்லாம் நடிகர் பாண்டுவின் கைத்திறனில் உருவானதுதான். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த பாண்டு, நேம் போர்டுகள், ஷீல்டுகள், மொமண்டுகள் தயாரிக்கும் தொழிலில்தான் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார்.

தமிழகத்தைக் கலக்கிய “பஞ்சு பட்டு பீதாம்பரம்!”

1980-களில் தமிழகத்தைக் கலக்கிய ‘பஞ்சு பட்டு பீதாம்பரம்’ தொடரில் நடித்ததன் மூலம் நடிப்புத்துறையில் அடியெடுத்து வைத்த பாண்டு, இதுவரை 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மனைவி குமுதா, ஒவியா என்ற பெயரில் பத்திரிகைகளில் ஓவியம் வரைந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு, பிரபு, பஞ்சு, பிண்டு என மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் பாண்டுவும், அவரது மனைவி குமுதாவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி நடிகர் பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 74.

திரைப்படங்களைவிட, தனது ஓவிய ஆர்வத்தின் மூலம், அதில் டாக்டரேட் பட்டம் பெற்று, நேம் போர்டு தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை தமிழகத்துக்கு அறிமுகம் செய்து பெருமை சேர்த்த பாண்டுவின் மறைவு அந்தத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top