தமிழ்நாடு பி.ஜே.பியில் அண்ணாமலை வாட்ச் விவகாரம் ஒருபக்கமும், காயத்ரி ரகுராம் துபாய் ஹோட்டல் பிரச்னையும் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. காயத்ரி ரகுராம், அண்ணாமலை பி.ஜே.பிக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், மோடி முதல்முறை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காலத்தில் அவருடைய தேர்தல் பிரசாரங்கள், தமிழகத்தில் அவர் கலந்துகொண்ட பொதுக்கூட்டங்களில் காயத்ரி ரகுராமுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிகழ்வுகளெல்லாம் நடந்தது. என்றாலும், அப்போது பெரிய அளவில் பொறுப்புகள் கொடுக்கப்படவில்லை.
ஆனால், தமிழ்நாடு பி.ஜே.பி தலைவராக தற்போதைய மத்திய அமைச்சர் எல்.முருகன் இருந்த காலகட்டத்தில் காயத்ரி ரகுராமுக்கு கட்சிக்குள் அதிக முக்கியத்துவம் கிடைத்தது. அவருக்குப் பல முக்கியப் பொறுப்புகளும் கொடுக்கப்பட்டன. இந்நிலையில், முருகன் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுச் சென்றபிறகு தமிழ்நாடு பி.ஜே.பி தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்புக்கு வந்தார். அவர் வந்தபிறகு பி.ஜே.பியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் தலைவர்களின் ஆதரவாளர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு தன்னுடைய ஆதரவாளர்களை முக்கியமான பொறுப்புகளில் நிரப்பும் வேலையைத் தொடங்கினார். அப்போதே, காயத்ரி ரகுராமுக்கும் கட்சிக்குள் குடைச்சல்கள் அதிகமானது.
மத்திய அமைச்சர் முருகனின் ஆதரவு இருந்தாலும், தமிழ்நாடு பி.ஜே.பியில் அண்ணாமலையின் செல்வாக்கு காரணமாக காயத்ரி ரகுராம் ஒதுக்கப்பட்டார். இது இருவருக்குள்ளும் ஒரு பனிப்போரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இருவரும் ஒருவருக்கொருவர் எதிரெதிரான விஷயங்கள் குறித்த ஆதாரங்களை வேறு நபர்கள் மூலம் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதற்கிடையில் காயத்ரி ரகுராமின் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று பரவத் தொடங்கியது. அதுகுறித்து காயத்ரி ரகுராம், அப்போதே காவல்துறை அதிகாரியிடம் ஆஃப் தி ரெக்கார்டாக முறையிட்டு வீடியோ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அப்போது இந்த வீடியோவை வெளியிட வைத்தது அண்ணாமலைதான் என்று காயத்ரிக்கு சொல்லப்பட்டது. கட்சிக்குள்ளும் இது அண்ணாமலையின் வேலைதான் என்று காயத்ரி ரகுராமிடம் உறுதி செய்தனர். இதற்காக அவர் தனி டீம் வைத்து செயல்படுவதாகவும் சொல்லப்பட்டது.
Also Read – அண்ணாமலையின் புது டிமாண்ட்… பி.ஜே.பி – இ.பி.எஸ் கூட்டணி நிலைக்குமா?
இந்நிலையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள், ஒன்று சினிமா சம்மந்தமாக நிகழ்ச்சி ஒன்றுக்காக துபாய் சென்று, அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு காயத்ரி ரகுராம் சிலரை சந்தித்தது. இது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட விஷயம். இந்தப் பயணத்தை அவர் கட்சி சார்பாகவோ, அரசியல் ரீதியாகவோ மேற்கொள்ளவில்லை. அதுபோல், மற்றொரு சம்பவம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சோமர்செட் ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனைச் சந்தித்த விவகாரம். அது சமூக ஆர்வலர் ஒருவரின் பிறந்தநாள் விழா. அதில், அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். சபரீசனும் காயத்ரி ரகுராமும் அதில் கலந்துகொண்டனர். அப்போது, பரஸ்பரம் வணக்கம் தெரிவித்த காயத்ரி ரகுராமிடம் சபரீசன் நலம் விசாரித்து, உங்களோட வீடியோ பிரச்னை சரியாகிவிட்டதா என்று விசாரித்ததுடன், எதாவது தொந்தரவு இருந்தால் சொல்லுங்கள். எங்கள் தரப்பில் இருந்து தேவையான உதவிகளைச் செய்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்.
இந்த சம்பவத்தை வைத்து சிலர் அண்ணாமலையிடம் காயத்ரி ரகுராம் எதிர்த்தரப்போடு கூட்டணி வைத்துக் கொண்டு நமக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று பரப்பினார்கள். அதோடு மட்டுமில்லாமல், `இவருக்கு இதே வேலை, இவர் துபாயிலும் போய் சந்திக்கக் கூடாதவர்களைச் சந்தித்திருக்கிறார்’ என்று கட்சி நிர்வாகிகள் சந்திப்பு ஒன்றில் அண்ணாமலை கமெண்ட் அடித்திருக்கிறார். அண்ணாமலை ஹோட்டல் என்று குறிப்பிட்டுப் பேசியவுடன் பி.ஜே.பி வட்டாரத்தில் துபாய் ஹோட்டல் என்று பேசப்பட்டது. உண்மையில் அண்ணாமலை குறிப்பிட்டுப் பேசியது சோமர்செட் ஹோட்டல் சந்திப்பைத்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
துபாய் ஹோட்டல் என்கிற சர்ச்சை வெடித்த நிலையில் காயத்ரி ரகுராம்,`நான் யாரை சந்தித்தேன் என்று அண்ணாமலை சொல்லட்டும். அதுவரை நான் அமைதியாக இருக்கேன். அங்கு நான் யாரையும் சந்திக்கவில்லை. அவர் என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போம். அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.