தமிழக 16 சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கியிருக்கிறது. ஆளுநர் உரையில் மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆளுநர் உரையின் ஹைலைட்ஸ்.
- வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும். இந்த அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதைக் கடுமையாக எதிர்க்கும்.
- ஒன்றிய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும்.
- தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
- சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். இந்த நிறுவனத்தை வேறு எந்தப் பல்கலைக்கழகத்துடனும் இணைக்காமல், அதன் தன்னாட்சி நிலை பாதுகாக்கப்பட வேண்டும்
- ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்களில் 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
- தமிழக அரசுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் த்ரே, முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
- தமிழ்நாட்டின் நிதிநிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஒன்று ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். இதன்மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில நிதிநிலையின் விவரங்கள் முழுமையாகத் தெரிவிக்கப்படும்.
- வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
- புதிய ரேஷன் அட்டைகளை விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். (தற்போது 65 நாட்களாக இருக்கிறது)
- முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.
- அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடித்திட தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.
- கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட, நமது மீனவர் சமூகத்தின் நலன்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்கும். இலங்கை கடற்படையினரால் பலமுறை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.
- தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி, அத்தகைய சட்டங்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற, உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளும்.
- அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும். முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பெயரில், 70 கோடி ரூபாய் செலவில் மதுரையில் சர்வதேசத் தரத்திலான பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
- தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னை மாநகரத்தை ‘சிங்காரச் சென்னையாக’ மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த வகையில், சென்னையில் மாநகரக் கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திடும் வகையில், ‘சிங்காரச் சென்னை 2.0’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டின் இந்து சமய மற்றும் அறக்கட்டளைச் சட்டம் இந்திய நாட்டிற்கே ஒரு முன்மாதிரி சட்டமாக விளங்குகிறது. கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகள் பாதுகாக்கப்படும். அனைத்து முக்கிய இந்துக் கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், மாநில அளவிலான ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழு மீண்டும் அமைக்கப்படும்.
Also Read – முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைகள் குழு… 5 நிபுணர்கள் யாரெல்லாம்?