125 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் கார் என்ஜினை ‘கார்ல் பென்ஸ்’ (Karl Benz) ஆன் செய்த போது ஒரு சப்தம் கேட்டது… அந்த சப்தம் இந்த நூறு ஆண்டுகளில் ஒலியின் அளவிலும் தன்மையிலும் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் அடைந்து வருகிறது. அந்த உறுமல் சப்தமே அந்த காரை ஓட்டுபவருக்கு ஓர் உற்சாகத்தைத் தந்தும் வந்தது. நவீன எலெக்ட்ரிக் கார்களின் வருகைக்குப் பிறகு இந்த சப்தம் திடீரென காணாமல் போய் இருக்கிறது.
சில நாடுகளில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைந்த அளவிலான ஒலி எழுப்ப வேண்டியது கட்டாயம் என்ற சட்டமே உள்ளது. ஆட்டோ மொபைல்களின் கம்பீர உறுமல்களுக்கு மத்தியில் எலெக்ட்ரிக் கார் என்ஜின்களின் சப்தம் கொஞ்சம் ஈனஸ்வரம் தான். அதனால், கொஞ்சம் ஸ்ருதி கூட்டுவோமா என்று வரிந்து கட்டிக்கொண்டு BWM களத்தில் குதித்தது.

The Lion King, Interstellar, Gladiator என பல ஹாலிவுட் பிரமாண்டங்களின் இசையமைப்பாளர் ‘ஹன்ஸ் ஸிம்மர்’ (Hans Zimmer) உதவியுடன் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு உறுமல் சப்தத்தை வடிவமைக்க முடிவெடுத்தது BMW. நேற்று BMW i4 கார்களின் இந்த உறுமல் சப்தம் எப்படி இருக்கும் என்பதை வெளியிட்டிருக்கிறார்கள்.
அதை நீங்கள் ஒரு முறை கேட்டுவிடுங்கள்… இன்னும் கொஞ்சம் பேசலாம்.
இந்த BMW i4 கார்களில் Comfort மற்றும் Sports இரண்டு விதமான சப்தங்களை உருவாக்கி இருக்கிறார்கள். கார் எந்த விதமாக இயக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்த சப்தங்கள் ஒலிக்கும். சாதாரனமாகவும் நகர்ப்புறங்களில் ஓட்டும் போது அமைதியான இதமான Comfort சப்தமும், நெடுஞ்சாலைகளில் சீறிப்பாயும் போது துள்ளலான, ஆக்ரோஷமான Sports இசையும் வெளிப்படும் விதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
Also Read : ஏலியன் இளையராஜா இசை கேட்டால், என்ன ஆகும்?! `ட்யூன்’ மினி சினிமா
சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஹேன்ஸ் ஸிம்மருடன் இணைந்து இந்தச் சப்தங்களை உருவாக்கும் பணியை BMW துவக்கியது. இந்தச் சப்தங்களை உருவாக்குவதற்கான ஒரு துறையையும் உருவாக்கி இருக்கிறது BMW, இந்தத் துறையை வழிநடத்தும் ‘ரென்ஸோ விட்டாலே’ (Renzo Vitale) ஸிம்மருடன் இணைந்து பணிபுரிந்து இந்தச் சப்தங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

எதிர்காலம் எலெக்ட்ரிக் கார்களுடையது என்பதால், அதன் சின்னஞ்சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதால் அந்தப் பணிகளை இப்போதே துவக்கிட்டது BMW.
நம் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் நம்முடைய எலெக்ட்ரிக் கார்களுக்கு சப்தத்தை தேர்வு செய்யலாம் என்றால் உங்கள் சாய்ஸ் எது?
என்னுடைய சாய்ஸ் இதுதான்