ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து 25 வயதிலேயே பழங்குடியின மக்களைக் கொண்டு கொரில்லா போர் நடத்திய அல்லூரி சீதாராம ராஜூவின் கதையை அடிப்படையாகக் கொண்டு ராஜமௌலி ‘RRR’ படத்தை எடுத்திருக்கிறார். டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ராம்சரண் சீதாராம ராஜூ வேடத்தை ஏற்றிருக்கிறார். மற்றொரு நட்சத்திரமான ஜூனியர் என்.டி.ஆர் கொமரம் பீம் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இளம் வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட சீதாராம ராஜூ ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனமாக மாறியது எப்படி… பழங்குடியினர்கள் கொண்ட ஒரு சிறு படையை வைத்துக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக தண்ணி காட்டியது எப்படி… 25 வயதிலேயே கொரில்லா போர் முறை மூலம் ஆங்கிலேயப் படைகளை விரட்டியடித்த சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் கதையைத் தான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
யார் இந்த அல்லூரி சீதாராம ராஜூ?
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 1897-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெங்கடராம ராஜூ – சூரிய நாராயணியம்மா தம்பதியின் மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த ஆண்டு 1898 என்று சொல்பவர்களும் உண்டு. இவரது தந்தை அப்போதைய சிறைத்துறையில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட நிலையில், மேற்கு கோதாவரி மாவட்டத்திலுக்கு மொகல்லு என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.
கல்வியில் பெரிதாக நாட்டமில்லாத ராஜூவுக்கு இந்திய அரசியல் மேற்படிப்புக்காக விசாகப்பட்டினம் அனுப்பி வைத்தனர். ஒரு கட்டத்தில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு துறவறம் மேற்கொண்டார். காக்கிநாடாவில் படித்தபோது, தனது 15-வது வயதில் சுதந்திரப் போராட்ட வீரரும் அறிஞருமான ரல்லப்பள்ளி அச்சுத ராமய்யாவை முதல்முறையாகச் சந்தித்தார். அவருடனான சந்திப்பு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற விதையை இவருக்குள் விதைத்தது. இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்த ராஜூ, 18 வயதிலேயே இமயமலைக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது புகழ்பெற்றிருந்த புரட்சி வீரரான பிருத்விராஜ் சிங் ஆசாத்தை நேரில் சந்தித்தார். அவர் மூலமாக மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இயங்கிவந்த பல்வேறு புரட்சிக் குழுக்கள் பற்றி அறிந்துகொண்டார். புரட்சிக் குழுக்களோடு இணைந்து மும்பை, பரோடா, பனாரஸ், ரிஷிகேஷ், அசாம், மேற்குவங்கம், நேபாளம் என தொடர்ந்து பயணித்தார். இந்தப் பயணத்தின்போதே குதிரையேற்றம், வாள் சண்டை, வில் பயிற்சி, ஜோதிடம், யோகா என பல்வேறு கலைகளையும் கற்றறிந்தார்.
ராம்பா கலகம்
ஒரு கட்டத்தில் ஆந்திரா திரும்பிய அவர், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட முடிவு செய்தார். பழங்குடியினருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 1882 மெட்ராஸ் வனச் சட்டத்தின் ஒருசில ஷரத்துகள், அவர்களின் வாழ்வாதாரத்தையே சீர்குலைத்தது. கால்நடைகள் மேய்ப்பது, விவசாயம் போன்றவற்றை செய்ய முடியாமல் தவித்தனர். அவர்களின் நிலையை அறிந்துகொண்ட சீதாராம ராஜூ, கோண்ட் பழங்குடியினர் பெரும்பான்மையாக வசித்த இடங்களுக்கு நேரில் பயணிக்கத் தொடங்கினார். பழங்குடியின மக்களுள் ஒருவராகவே மாறிய அவர், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட வேண்டும் என அவர்களை ஒருங்கிணைத்தார்.
படிப்பறிவற்ற அந்த பழங்குடியின மக்களுக்கு கொரில்லா போர் முறை பற்றி பயிற்சி கொடுத்தார். அவரது தலைமையை ஏற்ற மக்கள், தன்னம்பிக்கையோடு அவர் பின்னால் அணிவகுத்து நின்றனர். நமது நிலத்துக்காக, உரிமைக்காக நாம்தான் போராட வேண்டும் என்று அவர்கள் மனதில் விடுதலை விதையை விதைத்த ராஜூ, அதற்காகப் போரிடவும் கற்றுக்கொடுத்தார். தங்கள் போராட்டத்துக்கான ஆயுதங்களையும் ஆங்கிலேயர்களிடமிருந்தே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என சரியான தருணத்துக்காகக் காத்திருந்தார்.
இவரது தலைமையில் பழங்குடியினர்களைக் கொண்ட படை 1922-ல் முதல் தாக்குதலை நடத்தியது. 1922 ஆகஸ்ட் 12-ல் இவரது படை தொடர்ச்சியாக மூன்று நாட்களில் மூன்று காவல்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. சிண்டபள்ளி, கிருஷ்ணதேவிப் பேட்டை மற்றும் ராஜவொம்மாங்கி காவல் நிலையங்கள் மீது அடுத்தடுத்த நாட்களில் தாக்குதல் நடத்தி, துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களைக் கொள்ளையடித்துச் சென்றது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலோடு எதிர்த்து நின்றபோது ராஜூவுக்கு வயது 25. இதை ராம்பா கலகம் என்று வரலாறு பொன்னெழுத்துகளில் பொறித்துக் கொண்டது.
இதனால், சீதாராம ராஜூ மீது ஆங்கிலேயர்களுக்குக் கடும் கோபம் எழுந்தது. அவரைக் கைது செய்ய பெரும் படையை அனுப்பியது. போலீஸாரோடு ராணுவமும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினம் ஏரியாக்களில் காடுகளில் பதுங்கியிருந்து, ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்டார். ஆயிரக்கணக்கான வீரர்கள், பீரங்கிகளோடு வந்த பிரிட்டீஷ் படை சில நூறு பேரை வைத்துக் கொண்டு கொரில்லா போர் முறையில் வென்றார். பல இடங்களில் ஆங்கிலேயப் படை தோற்று ஓடியது. 1922 முதல் 1924 வரை இரண்டு ஆண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். 1924-ம் ஆண்டு சிந்தப்பல்லி காடுகளில் வைத்து ராஜூவை ஆங்கிலேயப் படை கைது செய்தது. கொய்யூரு கிராமத்தில் ஒரு மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில், எந்தவித விசாரணையும் இன்றி 1924-ம் ஆண்டு மே 7-ம் தேதி அவரை ஆங்கிலேயர்கள் சுட்டுக் கொன்றனர். சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான பங்கற்றிய அல்லூரி சீதாராம ராஜூ வரலாறு நாம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியது.
Also Read – `டிராமா முதல் கோவாலு வரை…’ – நடிகர் சார்லியின் 4 முகங்கள்!